Skip to main content

Posts

Showing posts from December, 2021

வன்முறை

கண்ணே! காதலின் பேரால் என் சுய அடையாளங்களை அழிக்க முயலும் உந்தன் சுயநலத்திற்குப் பேரன்பு என்று பெயரிடாதே வன்முறையில் சேருமது கார்த்திக் பிரகாசம்...

என் துரோகியைச் சந்தித்தேன்

நேற்று என் துரோகியைச் சந்தித்தேன் 'நீ தான் கடைசி' இப்போதெல்லாம் யாருக்கும் துரோகம் நினைப்பதில்லையெனச் சத்தியம் செய்தான் சிரித்தேன் வேண்டுமானால் என் புதிய நண்பனிடம் கேள் என்றான் அருகிலிருந்தவனைச் சுட்டிக்காட்டி மீண்டும் சிரித்தேன் நம்பு இல்லையேல் கொன்று விடு என்றான் கெஞ்சும் குரலில் நம்புகிறேன் ஆனால் நீ துரோகம் செய்ததை தான் இன்றுவரை நம்ப முடியவில்லை என்னால் என்றேன் அழுதேவிட்டான் கார்த்திக் பிரகாசம்...

இருண்மையின் ம(ப)சி

மானுடத்தின் மனப்பிறழ்வை மாய்த்திடும்  அந்த ஓர் கவிதையை எங்கோ வாசித்தது போல் நினைவில் தேங்கிய அந்த கவிதையை என்றோ நானெழுதியதாய் எனக்கே தோன்றும் அந்த ஓர் கவிதையை தினந்தினம் எழுத முயல்கிறேன் இருண்மையில் பசியாறிய பேனாவின் மசி சொட்டலில் கார்த்திக் பிரகாசம்...

தீரா பசி

சாலையில் நீந்தும் மேகத்தின் நிழல்களை இரையென விரட்டும் காக்கைகளின் பசி ஒருபோதும் தீர்வதில்லை கார்த்திக் பிரகாசம்...

தங்களின் உத்தரவுப்படியே மகாராணி

தன் வயதையொத்த இளம் நங்கையொருத்தி குதிரையில் ஏறி அமர்வதைக் கண்டதும் இவளே ராஜ்ஜியத்தை ஆளும் மகாராணியைப் போல் உணர்ந்தாள் குழந்தைகள் மணலில் கோட்டை கட்டுவதைப் போல இல்லாத கோப்புகளில் கையெழுத்து வரைந்து கரங்களைக் காற்றில் வீசி புது ஆணைகள் இட்டாள் 'தங்களின் உத்தரவுப்படியே மகாராணி' சேவகன் கோலத்தில் பிரதிவாதம் இல்லாமல் ஏழு போல் வளைந்து கட்டின லுங்கியோடு வாய் பொத்தி நிற்கும் கணவனைப் பார்த்து உள்ளூர எக்களித்தாள் புதிதாய் முளைத்தது போல் வெடுக்கென வெயில் உரைக்கக் கால் தவறி பாதாளத்தில் விழுந்தவளாய் நிகழில் விழித்தவளின் பாதங்களை நனைத்தவாறே தற்காலிக சுவடுகளை அடையாளமில்லாமல் அழித்துவிட்டு வந்தவழி திரும்பிக் கொண்டிருந்தன அலைகள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தாள் குதிரையின் நிழல் பின் தொடர்ந்தது அவளை கார்த்திக் பிரகாசம்...

மலிவு

சமயங்களில் சந்தையில் கிடைக்கும் மலிவான  பொருளாகி விடுகிறது அன்பு கார்த்திக் பிரகாசம்...

இன்னொரு முறை பிறக்கவே மாட்டேன்

நெடுங்காலமாக என் சுதந்திரத்தின் சாவி துருப்பண்டி கிடக்கிறது உன் சட்டைப்பையில் அதன் இருப்பே பொன்னாய் ஜொலிக்கிறது உந்தன் சுதந்திர கிரீடத்தில் முதல் மாணிக்கமாக விரல்களை வெட்டியெடுத்த பின்னும் கரம் இருக்கிறதேயென்ற ஆசுவாசத்தில் இருளடையும் அடிமை நாட்கள் நரகத்தின் வாசலில் ஒலிக்கும் யாசக குரலின் ஓலங்கள் பிறந்தது பிறந்துவிட்டேன் பிடித்தது போல் வாழவிடு இனியேனும் இன்னொரு முறை பிறக்கவே மாட்டேன் கார்த்திக் பிரகாசம்...

கருணையின் சிரிப்பு

நான்கு மணிக்கே இருட்டி விட்டது வீடெங்கும் மழை பெய்யும் சத்தம் நத்தையாய் ஊர்கிறது நகக் கண்களில் சுடும் நின் விரல் சுவாசம் யாருமற்ற அறையில் எக்களிப்பு கூச்சலுடன் மெல்ல மெல்லப் பிரம்மாண்டமாய் விரிகிறது சுவர்களில் உன் பிம்பம் மரணபயம் வியர்வையோடியது இருளைக் கிழித்துக் கடித்துக் குதறித் தப்ப முயன்ற கடைசி சிணுக்கில் ஊறும் இருட்டிலே தள்ளி தாழிட்டது இரக்கமற்றவனுக்குமான நின் கருணையின் சிரிப்பு கார்த்திக் பிரகாசம்...