Skip to main content

Posts

Showing posts from April, 2022

அமிர்தை

அந்த அழகான கனவு இப்படித்தான் இருந்தது வண்ண வண்ண பூக்களின் நடுவே தென்றலின் லயத்திற்கு சின்னஞ்சிறு சிறகுகளில் வயலின் மீட்டும் வண்ணத்துப்பூச்சியொன்று நங்கையவளின்  இதழ்களில் பதிந்தது மலரென நம்பி தேனினும் இனிய அமுதம் உண்ணக் கண்ட வண்ணத்துப்பூச்சி இவள் இதழ்களை விட மலரொன்றும் மெல்லியதல்ல என உச்சிக் கொட்ட நாணத்தில் உடலெங்கும் முளைத்தன இதழ்கள் அமிர்தையானாள் நங்கை

மறு சந்தர்ப்பம்

மறு சந்தர்ப்பம் வாய்த்தால் மாற்றிடலாம்  நடந்தததை தலைகீழாய் புரட்டிப் போட்டுவிடலாம் நிதானமிழந்த சுயத்தின் அநாதர  புலம்பலுக்கு வேடிக்கை பார்த்தே பழக்கப்பட்ட நிதர்சனமறிந்த மனத்தின்  வெற்று புன்னகை வாய்த்திட வாழ்வொன்றும் கசிந்த வினாத்தாள் அல்ல
கோடையில் ஓர் மழை நாளில் தான் முதல்முறை முத்தங்கள் பரிமாறிக் கொண்டோம் வானவில் தோன்றியதன்று கோடையில் பெய்யும் மழை அபூர்வமானது காதலின் சாட்சியைக் குறிப்பது குறைந்தபட்சம் எந்தன் காதலுக்கு
எந்தப் பக்கம் திரும்பினாலும் வாழ்வின் சுமைகள் சோதனைகள்  பற்றிய புலம்பல் பேச்சால்  நிரம்பிருக்கிறது  இன்று   பிறந்த குழந்தையோடு  புதிதாய் ஒரு உலகம் பிறந்திருக்கிறதே  அது யாருக்கும்  தெரியாதா?
சூல் விழிகளுக்குக் குடை பிடித்தது போல் அடர்த்தியான புருவங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாய்  சீராய் கலைந்த இழைகள் பூரணத்தின் உச்சம் கம்பிரமும் கூர்பார்வையும் தனித்த அடையாளமென பெண்ணானவர்கள் பேசிக் கொள்வர் தெளிவானவள் என்ன வேண்டும் என்றறிந்தவள் ஆதலால் என்னை வேண்டாம் என்றதில் வியப்பில்லை
பரபரப்பான சாலையின் மத்தியில் தத்தி தத்தி நடை பயிலும்  மழலையைப் போல் சாவகாசமாய் சென்ற பிண ஊர்தி ஊருக்கென ஒரு பொதுவான தகவலைத் தாங்கியிருந்தது இப்போதைக்கு  நீ செல்லலாம் இப்படிக்கு  உன் மரணம்
உயிரானவர்கள் உதறித் தள்ளிய நிராதவரான நிலையில் கண்ணீர் மல்க தலைவிரி கோலமாய் நிற்கும்  ஓர் இளம் பெண்ணை நினைவூட்டும் அந்த மரம் சவத்தைப் போல் அசையாமல் நிற்கும் அதன் அமைதி பெரும் அச்சமூட்டியது புல்லோ புத்தனோ எல்லோரும் வாழவென ஒரு காலம் உண்டு வசந்த காலம் வரும் இலை  காய்  கனி‌  பூ என யாவும் தோன்றும் அன்று  பருவத்தில் காதலனுடன் முதல் முத்தம் பதிந்த நாணத்துடன் காற்றை தருவிக்கும் இந்த மரம் அப்போது  பூத்துக் குலுங்கும் எண்ணற்ற மலர்களின் தேனை உறிஞ்சி என் காதலிக்கு ஓர் கவிதை வரைவேன்
கடினமாய் உழைத்துக்‌ கட்டமைத்த பிம்பம் கண்ணெதிரே சில்லு சில்லாய் உடைகிறது பதவி உயர்வு கிடைத்தமைக்கு பாராட்டு வாசித்த வயிற்றெரிச்சல் பீடித்த நொறுங்கிய நண்பன்  'உன்னிடம் இருக்கும் இரண்டு இல்லை என்னிடம்' எனப் பெருமூச்சு விடுகிறான் மார்பகமும் யோனியும்  அவ்வப்போது  சிறு சிறு ஒத்துழைப்பும் நல்கினால் பெண்ணானவள் எதையும் சாதித்து விடலாம்  வக்கற்றவர்களின் வாய் ஜாலம் பெண்ணின் தகுதியையும் திறமையையும் அவளது யோனிக்குள் புதைக்க முனையும் மூளையின் இடத்தில் குறியைச் செருகியிருக்கும் தற்குறி அவனிடம் எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது அத்தனைக்கும் மேலானது அறிவு
நட்சத்திரங்கள் இல்லாத வானம் பறவை அமராத கிளை மொட்டு விடாத செடி கரையை நனைக்காத அலை காதல் கூடாத பருவம் பெரும் புயலில் திசை  தொலைந்த சருகு நீ மற்றும் நான்

துப்புரவு

கணக்கு வாத்தியாரானது  சுயத்தின் சாதுரியமான  சூழ்ச்சி கூட்டலும் பெருக்கலும்  தினசரி பணி வகுப்பறையில் கரும்பலகையைத் தொட்டதும் அப்பாவின் ஞாபகம் வந்துவிடும் தினமும் காலத்துக்கும் கூட்டியும் பெருக்கியும் சாலையிலேயே  வாழ்நாள் கழிந்து போனவர் விட்டுப் போன சமன்பாடுகளுடன் வேறொரு பாதையில் கூட்டல் பெருக்கலோடு துரத்தியடித்த வாழ்வை வகுக்கிறேன் துப்பரவு புரிந்த  கணக்கு வாத்தியார் அவர் கணிதமறிந்த துப்புரவுத் தொழிலாளி‌ நான் ஆயுதம் மட்டும் வேறு