Skip to main content

Posts

Showing posts from April, 2023
பல கோவில்களுக்குச் சென்றிருக்கிறோம் உன் அளவுக்குப் பக்தியில்லை வணங்குவதில் நாட்டமுமில்லை உன்னுடன்  பேசச் சிரிக்க கைகோர்த்து நடக்க சம்மணகால் உரச மௌனமாய் அமர்ந்திருக்கச் சிகப்பு வெள்ளையில்   நடுவிரலால்  என் நெற்றியைத் தொடும் சிறு தீண்டலின் ஆத்ம சுகத்திற்காக வருவேன் காலம் நயவஞ்சகமானது   சாதுரியமான சூதாடியும்கூட நாம் ஒன்றாகச் செல்லாத ஒரு கோவிலில் உன் கடவுளைக் கண்டிருக்கிறாய் உனக்குத் தெரியுமா? என் தெய்வத்தை  நான் தொலைத்த இடமும்  அதுவே

தாடி

தாடியை மழித்துவிட்ட தகப்பனைச்  சட்டென அடையாளம் தெரியாமல்  அழுகிறாள் மகள்  தாடி என்பது வெறும் மயிரல்ல

நிதர்சனம்

தோல்விக்கென மனதைத் தொடர்ந்து பழக்குகிறேன் எதிர்பார்த்த தோல்வியில்  உண்மைக்கு அருகாமையில் பூத்த பூர்வ நித்தியத்தின் வாசம் நுகர காத்திருக்கிறது  அன்றை தாண்டி நாளடைவில் அழுகிப் போன ஓர் உடலுறுப்பாய் மாறிடும்  வெற்றியை‌ மாட்டிக் கொண்டு  என்ன செய்வதென தெரிவதில்லை  கால் மாட்டில் பூனையை போல் படுத்துறங்கும் தோல்வி பத்திரமாய் பாதம் கூசுகிறது வெற்றியின் போது பங்கு கறிக்கு மொய்ப்பவர்கள் தோல்வியின் போது  இழவு வீட்டிற்கு   தலையைக் காட்டிட வந்திடும் சம்பிரதாய முகங்களாய் கடக்கிறார்கள்  தோல்வி நிதர்சனம்  தோல்வி ஆறுதல் தோல்வி தன்னிலை உணர்தல் 
முதல் இளநீரைப் போல்  இரண்டாவது ருசிப்பதில்லை  என்றேன் இரண்டுமே‌ ருசிக்கும்  வேறுவேறு ருசியில் என்கிறாள்  அடுத்தடுத்து இரண்டு பெற்ற இளம் பேற்றுக்காரி

இரவு

நிலவொளியில் நிழல் குடிக்கும் நிலம் குனிந்த தலை நிமிரா‌த பார்வையற்ற  தெரு விளக்கு  மென்று துப்பிய சக்கையாய் வீதி மாடுகள் ஓய்வெடுக்கும் ஆடுகளம் பதுங்கு குழியை விட்டு பயமின்றி வெளிவரும் எலி தன் நிழலைக் கண்டு அச்சத்தில் குரைக்கும் நாய் நிறமற்ற கோடுகளாய் நெடிந்துயர்ந்த  கட்டடங்கள்  காலத்துக்கும் அசதியின்றி   பூதாகரமாய் நிற்கும் ஆலமரம் காற்றோடு கிசுகிசுக்கும் இலைகள்  கசக்கியெறிந்த காகிதமாய் மேகங்கள்  பகல் மென்று துப்பிய எச்சமாய்   யாருமற்ற  ஏதுமற்ற சிந்தையற்ற மரணத்தின் நிம்மதியைத் தற்காலிகமாய் சுமந்து வரும் இரவு 

தேவதையின் இரட்சிப்பு

நேற்று முதல் புதிதாய் சிரிக்கிறாய் என்கிறார்கள் மகள் மீட்டுத் தந்த எந்தன் பழைய‌ சிரிப்பது உண்டான ஒற்றை மலருக்காக ஒட்டு மொத்த மரமும்  உயிர்தாங்கி நிற்பது போல்  தேவதை இரட்சிப்பின் பொருட்டு  துவண்ட பருவமும்  தொலைத்த காலமும்  வேர்விட்டு துளிர்க்கிறது அவர்களுக்குத் தெரியாத இன்னொரு ரகசியம்   தாயின் கருவறையிலிருந்து மகளின் கரங்களில் மறுமுறை பிரசவித்திருக்கிறேன்

நேற்றில் வருவாயா?

பூட்டிய அறைக்குள் அமர்ந்திருக்கிறேன் வெளியேறும் பெரும் மூச்சு  அறையெங்கும் புழுக்கமாய் நிறைகிறது சாவியிடும் துளைகளின் வழியே  பிரபஞ்ச பெருவெளியின் ஒளிக் கீற்று மோனமாய் கவிழ்கிறது பகலில் இருட்டையும் இரவானால் ஒரு சொட்டு வெளிச்சத்தையும் தேடியலைகிறது பேய்மனம்  சீக்கிரமாய்  இன்று சென்று நேற்றில் வருவாயா?