Skip to main content
பல கோவில்களுக்குச் சென்றிருக்கிறோம்
உன் அளவுக்குப் பக்தியில்லை
வணங்குவதில் நாட்டமுமில்லை
உன்னுடன் 
பேசச்
சிரிக்க
கைகோர்த்து நடக்க
சம்மணகால் உரச மௌனமாய் அமர்ந்திருக்கச்
சிகப்பு வெள்ளையில்  
நடுவிரலால் 
என் நெற்றியைத் தொடும்
சிறு தீண்டலின்
ஆத்ம சுகத்திற்காக
வருவேன்
காலம் நயவஞ்சகமானது  
சாதுரியமான சூதாடியும்கூட
நாம் ஒன்றாகச் செல்லாத
ஒரு கோவிலில்
உன் கடவுளைக் கண்டிருக்கிறாய்
உனக்குத் தெரியுமா?
என் தெய்வத்தை 
நான் தொலைத்த இடமும் 
அதுவே

Comments