நிலவொளியில் நிழல் குடிக்கும் நிலம்
குனிந்த தலை நிமிராத பார்வையற்ற
தெரு விளக்கு
மென்று துப்பிய சக்கையாய் வீதி
மாடுகள் ஓய்வெடுக்கும் ஆடுகளம்
பதுங்கு குழியை விட்டு
பயமின்றி வெளிவரும் எலி
தன் நிழலைக் கண்டு
அச்சத்தில் குரைக்கும் நாய்
நிறமற்ற கோடுகளாய் நெடிந்துயர்ந்த
கட்டடங்கள்
காலத்துக்கும் அசதியின்றி
பூதாகரமாய் நிற்கும் ஆலமரம்
காற்றோடு கிசுகிசுக்கும் இலைகள்
கசக்கியெறிந்த காகிதமாய் மேகங்கள்
பகல் மென்று துப்பிய எச்சமாய்
யாருமற்ற
ஏதுமற்ற
சிந்தையற்ற
மரணத்தின் நிம்மதியைத்
தற்காலிகமாய் சுமந்து வரும்
இரவு
Comments
Post a Comment