தோல்விக்கென மனதைத் தொடர்ந்து பழக்குகிறேன்
எதிர்பார்த்த தோல்வியில்
உண்மைக்கு அருகாமையில் பூத்த
பூர்வ நித்தியத்தின்
வாசம் நுகர காத்திருக்கிறது
அன்றை தாண்டி
நாளடைவில்
அழுகிப் போன ஓர் உடலுறுப்பாய் மாறிடும்
வெற்றியை மாட்டிக் கொண்டு
என்ன செய்வதென தெரிவதில்லை
கால் மாட்டில் பூனையை போல்
படுத்துறங்கும் தோல்வி
பத்திரமாய் பாதம் கூசுகிறது
வெற்றியின் போது
பங்கு கறிக்கு மொய்ப்பவர்கள்
தோல்வியின் போது
இழவு வீட்டிற்கு
தலையைக் காட்டிட வந்திடும்
சம்பிரதாய முகங்களாய் கடக்கிறார்கள்
தோல்வி நிதர்சனம்
தோல்வி ஆறுதல்
தோல்வி தன்னிலை உணர்தல்
Comments
Post a Comment