தற்கொலையில் தொடங்கி ஒரு கொலையில் முடிகிறது நாவல்.
எதிர்பாராதவிதமாய் நிகழ்ந்திட்ட தன் சகோதரனின் தற்கொலையினால் கடும் நோய்மையில் விழும் ராமலிங்கம், தீவிர மன உளைச்சலினால் புரிந்த மற்றொரு காரியத்தால் தீவிர குற்றவுணர்ச்சிக்கு ஆளாகிறான்.
அன்யனோன்யமான உறவை அணு அணுவாகச் சிதைக்க விரும்பினால், தொடர்ச்சியாக ஒரு குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கி, அதனை நிரந்தர உணர்வாக மாற்றிவிட்டால் போதும். உறக்கத்திலும் விழித்திருக்குமது மனிதனைச் சீரழிக்கும் வேலையை சுயமாகக் கவனித்துக் கொள்ளும். அதுவும் நோய்மையை உண்டு கொழுத்திடும் குற்றவுணர்வு கொஞ்சம் கொஞ்சமாக அரித்து ராமலிங்கத்தின் சுயத்தை முழுவதுமாக சிதைக்கிறது.
எத்துக்கால் போகும் போக்கில் நடக்கிறான். ஏதோ ஒரு பாடலின் தொடக்க ஹம்மிங் போல் ஒரு குரல் அவன் காதுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறது. பேசுவதற்குக் கூட ஆளில்லாமல் தனக்கு தானே பேசிக் கொள்கிறான்.
வழியில் சந்திக்கும் காவி சாமியார்கள், சிவபாணம் தருகிறார்கள். அங்கும் இங்கும் திரிந்து, கடைசியில் தூரத்திலிருந்து கவர்ந்திழுக்கும் மலையை நோக்கிச் சென்று திருவண்ணாமலையை அடைகிறான்.
ராமலிங்கம் திருவண்ணாமலைக்குச் சென்றதும் கதை வேறொரு தளத்திற்குள் செல்கிறது. ஹோட்டல் முதலாளியும், தாடி சாமியாரும் ராமலிங்கத்தின் மனத்திலும், வாழ்விலும் கணிசமான மாற்றத்தை உண்டு பண்ணுகிறார்கள். வாழ்க்கை, மரணம், இன்பம், துன்பம்,பாவம் குறித்துத் தத்துவ ஞானம் அடைகிறான்.
இறுதியில் ஒரு கொலை செய்துவிட்டு, முந்தைய வாழ்வோடு தனக்கிருந்த ஒட்டுதலை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் வீதியில் இறங்கி நடந்து செல்கிறான்.
கணேசகுமாரனின் 'பெருந்திணைக்காரன்" சிறுகதைத் தொகுப்பை முன்னமே வாசித்திருக்கிறேன். நாவல் இதுதான் முதல்முறை. ஒரே அமர்வில் வாசித்து விடக்கூடிய நாவல். சிறப்பான வாசிப்பனுபவம் தருவதுடன், சுயத்தின் மீதான, வாழ்வை அதன் போக்கில் வாழுதல் குறித்தான தத்துவ விசாரணைகளையும் ஏற்படுத்துகிறது.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment