நான் ஏன் பதட்டமாகிறேன்? நான் ஏன் பலகீனமாக உணர்கிறேன்? நான் ஏன் ஒதுங்கிக் கொள்கிறேன்? இப்படி எழும் அத்தனைக் கேள்விகளுக்கும் ஒரேயொரு பதில்தான் இருக்கிறது. ‘என் பெயர் அகதி’ என்பதுதான் அந்தப் பதில்.
முன்னுரையில் வாசு முருகவேல் மேற்குறிப்பிட்டுள்ள இவ்வரிகளே நாவலின் அடிநாதம்.
எந்த இடத்திலும் துவக்கைகளின் சப்தம் இல்லை. எத்தரப்பை முன்வைத்தும் போர்க் குறித்தான நியாய தர்க்கங்களோ, எதிர்ப்புகளோ முன்வைக்கப்படவில்லை. மாறாக இந்நாவல் அறிமுகப்படுத்தும் களம் வேறொன்று. போர் குடித்த மரணங்களைக் காட்டிலும், போர்ச்சூழலினால் சொந்த மண்ணையும், நாட்டையும் இழந்து வெவ்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்த / இடம்பெயர்ந்திட முயற்சிக்கும் அகதியாய் ஆக்கப்பட்டவர்களுக்கு இச்சமூகம் கைமாறாகத் தந்திடும் இரக்கமும், கருணையுமற்ற வாழ்க்கையின் கொடுமையைப் பட்டவர்த்தனமாகப் பதிவு செய்கிறது நாவல். பேசும் மொழி புரிந்திடாத, கலாச்சாரம் அறியாத அந்நிய நாடாய் இருந்தால்கூட பரவாயில்லை என மனதை ஆற்றுப்படுத்த முயலலாம். ஆனால் காலங்காலமாக எம் இரத்தம், எம் சகோதர சகோதரிகள், எம் தொப்புள் கொடி உறவுகள் என மார்புயர்த்தி முழங்குமொரு நாட்டில் தொடுக்கப்படும் அநீதியை, சிதைந்த வாழ்வைச் சுமந்து திரியும் மனிதர்களுக்கு இழைத்திடும் அக்கிரமத்தின் உச்சமாகவே கருத வேண்டியிருக்கிறது.
இதில் ஒற்றை கதாபாத்திரத்தை மையப்படுத்திய கதையோட்டம் கிடையாது. பல முகங்கள். பல நண்பர்கள். சதா 'அகதி', 'அகதி'யென துடிக்கும் இருதயத்திற்குப் பிறந்தவர்கள். இராணுவ மற்றும் காவல் உடை அணிந்தவர்களைக் கண்டதும் அனிச்சையாய் பெருக்கெடுக்கும் மரண பயம், வீடு கிடைப்பதிலும், மாற்றிச் செல்வதிலும் உள்ள சிக்கல்கள், ஒவ்வொருமுறை மாறும்போதும் வீட்டின் உரிமையாளரிடம் ஒப்புதல் கையொப்பம் பெற்று, அந்த பகுதிக்கான காவல் நிலையத்தில் அகதிக்கான அடையாளத்தைப் பதிவு பண்ணிக் கொள்ள அதிகாரத்தின் முன் காத்து நிற்கும் - சொந்தமாக ஏடிஎம் அட்டை கூட வைத்துக் கொள்ள முடியாத உதிரிகளே கதையின் மாந்தர்கள். 'இலங்கைத் தமிழர்கள்' என முழங்கும் அரசியல்வாதிகளுக்கு, 'இலங்கைத் தமிழர்' இல்லை "ஈழத் தமிழர்" என்றும், அது "இலங்கை இனப்படுகொலை" அல்ல "ஈழ இனப்படுகொலை" என உரக்கச் சொல்ல எத்தனிக்கும் குரல், நசிந்து போன வாழ்வின் களைத்து ஓய்ந்த தொனியிலே நாவலில் விரவியிருக்கிறது. 'உங்க தமிழ் வித்தியாசமா இருக்கு.. நீங்கள் சிலோனா?' என்பது போன்ற இளப்பான கேள்விகள் உண்டாக்கும் வலி. கடக்க முடியாத அந்த வலி ஏற்படுத்திடும் ஆற்றாமையே பல இடங்களில் பகடியாக வெளிப்படுகிறது எனத் தோன்றுகிறது.
முக்கிய கதாபாத்திரமான வாசன். நோய்வாய்ப்பட்ட வயோதிக தந்தையைக் கவனிக்கும், தினமும் காலையில் தேவாரம் பாடும் தனது தாயைப் பற்றியதான குறிப்பில் வரும் "பழகி விட்ட எந்த பாரமும் மனதை அழுத்துவதில்லை. அம்மாவின் முகத்தில் நீண்ட தூக்கம் ஒன்று ஆழப் புதைந்து கிடந்தது. அதற்குக் கிட்டத்தட்ட இரண்டு வருட ஆயுள் இருக்கும்" வரிகள் மனதில் அறைகின்றன. வாசனின் தந்தையை படிப்படியாக ஆக்கிரமிக்கும் மரணம் கண்முன்னே காட்சியாய் விரிகிறது. நாவலின் இறுதியில் காலாவதியான அரசியல் குடும்பத்தின் வாரிசான சிவசிதம்பரத்தின் கொலை, சமீபத்தில் நிகழ்ந்த ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையை நினைவூட்டுகிறது.
எழுத்துப்பிழையா, பெயர் மாறிவிட்டதா எனத் தெரியவில்லை. சில இடங்களில் பெயர் மாறி வந்து, அதே கதாபாத்திரமா அல்லது புதியதா என ஒருகணம் குழப்புகிறது.
அகதி வாழ்வில் நிகழும் அக்கிரமம், வயிற்றுப்பாடு, திருமணம், காதல், காமம், ஆற்றாமை, குடி, மரணம் போன்றவற்றை அசலாகப் பதிவு செய்திருக்கிறது.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment