Skip to main content

பிரபஞ்சத்தின் மூத்த மொழி காதல்

சவுக்குமர நிழல் - ஜெயந்த் காய்கிணி
தமிழில்: நஞ்சுண்டன்
தொகுப்பு: சிவபிரசாத்

மறைந்த கவிஞர், மொழிபெயர்ப்பாளர் நஞ்சுண்டன் அவர்களின் மொழிபெயர்ப்பில் சிவபிரசாத் தொகுத்துள்ள “பால் மீசை” தொகுப்பில் இடம் பெற்றுள்ளது கன்னட கவிஞரும், எழுத்தாளருமான 'ஜெயந்த் காய்கிணி' எழுதிய "சவுக்குமர நிழல்" என்னும் சிறுகதை.

ஒரு மாதத்திற்கு முன்பு, இன்ன காரணம் என்றதறியாமல் கைதாகி சிறையிலிருக்கும் தன் கணவனை வேறு சிறைக்கு மாற்றுகிறார்கள் என்ற தகவலறிந்து அதிகாலையிலேயே எழுந்து அவனுக்கு மிகவும் பிடித்த அரிசி பாயசத்தோடு அவனது நினைவுகளையும் வேகாத வெயிலில் சுமந்து கொண்டு கால்கடுக்கக் கிளம்புகிறாள் மனைவி நாகம்மா. மலைக்கு அந்தப்பக்கமுள்ள சாலை வழியாகத்தான் காவல்துறை வாகனம் எப்படியும் சிறைக்குச் சென்றாக வேண்டும். கண்ணுக்கெட்டிய தொலைவின் எல்லையில் கானலில் நெளியும் சாலையில் ஒரு கண்ணைத் தைத்துக் கொண்டே நடக்கிறாள்.

ஊரார் பலரும் அவ்வழியாகக் கடந்து செல்கின்றனர். கேட்பவர்களிடம் ஏதேனுமொரு பொய்யை அங்கிருத்தலுக்கான காரணமாகக் கூறுகிறாள். நற்மனிதரான வாத்தியார் ஒருவர் வருகிறார். அவரிடம் மட்டும் உண்மையை உடைக்கிறாள். “உன் புருஷன் நல்லவன். சீக்கிரமே வெளியே வந்துவிடுவான். அவனுக்கு ஆபத்தொன்றும் நிகழாது” என நம்பிக்கை ஒளிக்கீற்றைத் தீட்டி அவளைச் சமாதானப்படுத்த முயல்கிறார். நாகம்மாவிற்கு மனதிலொரு ஆசுவாசம் படர்ந்தாலும், மறுகணமே ஓங்கிய குரலும், பொருளாதார பலமும் இல்லாத ஏழை அன்றாடங்காட்சி குடும்பத்தின் பிரதிநிதியான 'தனது கணவனை யார் வெளியே எடுப்பார்கள்' என்ற கசப்பான உண்மை நெஞ்சை வாட்டியெடுக்கிறது.

காவல்துறை அதிகாரிகள் வாகனத்தை நிறுத்துவார்களா என உறுதியாகத் தெரியவில்லை. ஒருவேளை நிறுத்தாவிட்டாலும்கூட, குறைந்தபட்சம் கண்சாடையிலாவது “நான் மூன்று மாதம் கர்ப்பம்” என்ற நற்செய்தியைக் கணவனுக்குக் கடத்திவிட வேண்டுமென்ற படபடப்பில், நிழல் விரித்திடும் சவுக்கு மரத்தின் கீழ் கால்கடுக்க, சற்று கவனித்தால் பிடிபடும் மேடிட்ட வயிற்றுடன் காத்திருக்கிறாள் நாகம்மா. தன் பரப்பின் கீழுள்ள யாவையும் அரூப பூதமென வேட்டையாடி கொண்டிருக்கிறது வெயில். அச்சமயம், ஒரு புதரினருகே தன் கணவனை மணக்கவிருந்த கௌரி என்ற பெண்ணொருத்தி அங்கு மறைந்திருப்பதைக் கண்டு அதிர்ந்து போகிறாள். அவளது காதலனைக் காண வந்திருக்கிறாள். இவளுக்கு எப்படித் தெரிந்தது என மனக் கலக்கம் மேலிடுகிறது. தன் கணவனும் அவளை விரும்பியிருக்கிறான் என்ற உண்மையைக் கல்யாணமான நாள் தொட்டே அறிந்திருந்தாள் நாகம்மா.

காவல்துறை வாகனம் தென்படுகிறது. வாகனம் அருகே வரவர பதற்றம் ஆட்கொள்கிறது. சற்றும் எதிர்பாராதவிதமாக காவல்துறை வாகனம் இவர்களைக் கண்டு நிற்கிறது. கணவன் வாகனத்திலிருந்து இறங்கி வருகிறான். அரிசி பாயசத்தைக் கொடுக்கிறாள். ஒரு சொட்டு மிச்சமில்லாமல் குடிக்கிறான்.

"ஒனக்காக நான் மட்டுமல்ல. இன்னொருத்தியும் காத்திருக்கிறாள் எனக் கௌரியைக் கைவீசி அழைக்கிறாள் நாகம்மா. தன் எல்லை இவ்வளவுதான் என்பது போலக் கௌரி அங்கேயே புதரோடு புதராக மறைந்தே நிற்கிறாள்". மலையையும், நாகம்மாவையும் பார்த்தவாறே வண்டியில் ஏறுகிறான். வாகனம் கிளம்புகிறது. உறைந்து நிற்கிறாள் நாகம்மா. உண்டாகியிருப்பதை சொல்லவே இல்லை. புதரிலிருந்து எழும் கௌரி நான்கு மார் தூரம் ஓடிச் சென்று மூச்சு வாங்க நிற்கிறாள்.

காவல்துறை வாகனம் மறைகிறது.

அர்த்த ராத்திரியில் இக்கதையை வாசித்து முடித்ததும், ஆண் மீதான ஒரு பெண்ணின் காதல் எந்தளவிற்குப் பரிசுத்தமாக இருக்கிறது என்ற வியப்பில் வெகுநேரம் ஆழ்ந்து கிடந்தேன். ஏனென்றால் நாகம்மா நினைத்திருந்தால், கணவன் இருக்கும் வாகனம் வருவதற்கு முன்பே கௌரியை அங்கிருந்து விரட்டி அடித்திருக்கலாம் அல்லது கவனித்திராத கணவனிடம் கௌரியின் இருப்பை உணர்த்தாமலே கடந்திருக்கலாம். அதற்கான சாத்தியங்கள் நிறையவே உண்டு. அது நியாயமும் கூட. மறுக்க முடியாது. ஏனென்றால் அவன் நாகம்மாவின் கணவன். ஊரார் முன்னிலையில் அவளை கரம் பிடித்தவன். ஆனால் தன்னைப்போலவே அத்துணை கனமான ஒரு காதலைச் சுமந்து வந்திருக்கும் கௌரியை எந்த காழ்ப்பும் இல்லாமல் தன் கணவனிடம் முன்னிறுத்துகிறாள். உணர்ச்சி பெருக்கில் கௌரியும் ஓடிச்சென்று அவளைக் கட்டியணைத்து அன்பை, பிரிவின் வலியை உணர்த்தியிருக்கலாம். ஆனால் அவளுமே தன் எல்லை இவ்வளவுதான் என்று அந்த புதரைக் கூட தாண்டி வராமல் அங்கேயே நிற்கிறாள். இது இன்னொரு மனதுக்குச் சொந்தமாகிவிட்ட தனது காதலைத் தூரத்திலிருந்தே கண்டு ஆற்றுப்படுத்திக் கொள்ளலாமே தவிர அருகில் சென்று அதன் துணையை சங்கப்படுத்திவிட கூடாது என்ற கண்ணியமான காதலினால் மட்டும் ஏற்படக்கூடிய நற்பண்பு.

நாகம்மா, கௌரியைக் கைவீசி அழைத்தற்கான காரணம், கௌரியின் காதல் மட்டுமல்ல. நாகம்மா, தன் கணவனின் மீது கொண்ட அளப்பரிய காதலும்தான். அதேபோல், கௌரி அந்த புதரைத் தாண்டாதற்கான காரணம், நாகம்மாவின் காதலை உணர்ந்ததாலே மட்டுமே.

படுக்கையில் சாய்ந்ததும் இப்படித் தோன்றியது, "காதலுக்கென பிரத்தியேக மொழி அவசியமில்லை.

ஏனெனில், காதலே இப்பிரபஞ்சத்தின் மூத்த மொழி".

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...