Skip to main content

Posts

ஈடு

கடல் தந்த அன்பை மழையாய் பொழிகிறது வானம் விதை தந்த அன்பைப் பூவாய் பூக்கிறது செடி மண் தந்த அன்பைக் கனியாய் துளிர்க்கிறது மரம் ஈன்ற அன்பை இறையாய் வேண்டுகிறது மனம் எதுவொன்றையும் அன்பால் ஈடுகட்ட முடியும் ஆனால் அன்பை ? அன்பை பேரன்பால் ஈடுகட்டுவதே அறம்

பிரதி பிம்பம்

சீரற்ற வேகத்தில்  கோணல் மாணலான வரிசையில் தெளிவற்ற இலக்கைத் தேடி சலனமின்றி நகரும் சாதுவான கருப்பு எறும்பு கூட்டத்தினூடே திக்கற்று அலைவுறுகிறது ஆன்மாவின் பிரதி பிம்பம்
எல்லாமும் புரிந்திட முயன்று எளிதில் ஏமார்ந்துவிடும் சுதந்திரமான அன்புடன் ஆழமான புரிதலும் நுண்ணறிவும் கொண்ட உறவு உணர்ந்த தவறைக் கூச்சமில்லாமல் ஒப்புக் கொள்ளும் இயலாமையை அப்பட்டமாய் வெளிக்காட்டும் புகையும் நெஞ்சை முத்தமிட்டவாறே கம்பறு கத்தியால் கீறும்

கடலோடு

குழந்தைகள் நிறைந்த கடற்கரை  குழந்தையாகவே மாறிவிட்டது கடல் **** சமோசா சுண்டல் விற்பவனின்   வறுமை பருவத்தை எல்லோருக்குமாக  வாசிக்கிறது கடல் **** பல பாதங்கள் பதிந்த பின்னும் பழைய பாதங்களை மறப்பதில்லை கடல் **** ஊரை விட்டு ஓடி வந்தவனை வாழ்விற்கு அறிமுகப்படுத்துகிறது கடல் **** ஞாயிற்றுக் கிழமைகளில் உழைப்பாளர் சிலையை பொலிவுக்கூட்டி காட்டுகிறது கடல் **** கால் நனைக்காமல் போனவர்களின் வருகையைக் கணக்கில் வைப்பதில்லை கடல் **** கடலே கண்ணயர்ந்த பின்னும் உழைப்பாளர் சிலையின் முன் மாங்காய் கீற்றுகள் அரிந்து கெண்டிருக்கிறாள் பார்வை மங்கிய கிழவி

காணாமல் போன ஐந்து நாட்கள்

செவ்வாய் இரவு உறங்கச் சென்று ஞாயிறு மதியம் விழித்திருக்கிறேன் இடையில் பகல் வந்ததா இரவு விடிந்ததா  அறியேன் உண்ணாத உணவுக்கும் உளறல் பேச்சுக்கும் புரியாத மருத்துவ அறிக்கைகளும் விழுங்கிடாத  மில்லி கிராம் நரகமுமான    மாத்திரைகளே  சாட்சியங்கள்  நினைவூட்டவோ நினைவகற்றவோ நிலையுணர்த்தவோ  வலியுறுத்தவோ வற்புறுத்தவோ எதன் பொருட்டு வந்ததோ? பால்கனி தொட்டிச் செடியில் முளைத்த டேபிள் ரோஸ் இரண்டு சாம்பல்  ஒரு கருப்பு நிற குட்டியை  ஈன்ற தாய்ப் பூனை உக்கிரம் குறைந்த வெயில்  பைனலுக்கு முன்னேறிய கிரிக்கெட் அணி  நன்றாகத் தான் இருந்திருக்கின்றன நான் இல்லாமல் இருந்த நாட்கள்  வீட்டின் முற்றத்தில் செத்துப் போன கரைப்பான் பூச்சி தலைக்குப்புற கிடக்கிறது

தேடிச் செல்

பறவையானது பஞ்சத்தின் நிமித்தம்  பொத்தி பொத்தி பாதுகாத்த தானியங்களை இருப்பு விகிதம் குறைவது புலனாகாதவாறு சாமர்த்தியமாகக்‌ களவாடும்  சிறு எறும்பு கூட்டம்‌ போல் சேமித்த நினைவுகள்  துலக்கமிழந்து   மெல்ல மெல்லக் காலாவதியாகின்றன வயிற்றுக் கோளாறால் அவதிப்படும்  வயோதிகன் பயன்படுத்திய  பழைய கழிவறையைப் போன்றதாகிவிட்ட நினைவுகளில்   நிகழ்பவையும்  சீராகப் பதியாமல்  குமைகின்றன  மூப்போ  வளர்ந்தெழும் பற்றற்ற போக்கோ  என்னைத் தொலைத்துவிட்டு  வேறெதையோ  தேடச் சொல்கிறது

புதிதாய் வேறொன்றுமில்லை

புதிதாய் ஒன்றுமில்லை வறண்டு காய்ந்த மனசில்   அடர்ந்த செழிப்பின் பால் தினந்தினம் பூக்கும் அன்பு மலர்கள்  மனம் நிறைந்து வழிந்திட ஒரு காதல் அரும்பியிருக்கிறது சுருங்கச் சொன்னால்  இலையைப் போல் சுய கனமற்று பெரு மரத்தின் பாரம் சுமக்கிறேன் இருத்தலில்  நம்பிக்கை பிறந்திருக்கிறது புதிதாய் வேறொன்றுமில்லை