செவ்வாய் இரவு
உறங்கச் சென்று
ஞாயிறு மதியம் விழித்திருக்கிறேன்
இடையில்
பகல் வந்ததா
இரவு விடிந்ததா
அறியேன்
உண்ணாத உணவுக்கும்
உளறல் பேச்சுக்கும்
புரியாத மருத்துவ அறிக்கைகளும்
விழுங்கிடாத
மில்லி கிராம் நரகமுமான
மாத்திரைகளே
சாட்சியங்கள்
நினைவூட்டவோ
நினைவகற்றவோ
நிலையுணர்த்தவோ
வலியுறுத்தவோ
வற்புறுத்தவோ
எதன் பொருட்டு வந்ததோ?
பால்கனி தொட்டிச் செடியில்
முளைத்த டேபிள் ரோஸ்
இரண்டு சாம்பல்
ஒரு கருப்பு நிற குட்டியை
ஈன்ற தாய்ப் பூனை
உக்கிரம் குறைந்த வெயில்
பைனலுக்கு முன்னேறிய கிரிக்கெட் அணி
நன்றாகத் தான்
இருந்திருக்கின்றன
நான் இல்லாமல் இருந்த நாட்கள்
வீட்டின் முற்றத்தில்
செத்துப் போன கரைப்பான் பூச்சி
தலைக்குப்புற கிடக்கிறது
Comments
Post a Comment