Skip to main content

சிலுவைராஜ் சரித்திரம்

எழுதியவர்: ராஜ் கௌதமன்
வகைமை: நாவல் [தன்வரலாறு]
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

ராஜ் கௌதமனின் தன்வரலாற்று நாவல் ‘சிலுவைராஜ் சரித்திரம்’. தலித் சமூகத்தில் பிறந்து வளர்ந்த சிலுவை என்ற தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கையை மைய களமாகக் கொண்டு தொடங்குகிறது. அதனூடாக ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்து இரண்டு முதல் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளின் நடுப்பகுதி வரையிலான காலக்கட்டத்தில் பின்பற்றி வந்த பண்பாட்டுப் பழக்க வழக்கங்களை, அரங்கேறிய அரசியல் நிகழ்வுகளை, சாதிய ஒடுக்குமுறைகளைச் சாமான்யனின் குரலில் தீர்க்கமாகப் பதிவுச் செய்கின்றது இந்நாவல்.

என்னுடைய வாசிப்பனுபவத்தில் இந்தளவிற்குக் கிண்டலும், கேலியும் புரையோடிக் கிடக்கும் தன்வரலாற்று நாவலை இதுவரையில் நான் வாசித்ததில்லை. ஒவ்வொரு பத்தியிலும், குறைந்தபட்சம் ஒவ்வொரு பக்கத்திலும் ஏதேனும் ஒரு வரி கண்டிப்பாகச் சிரிக்க வைத்துவிடும். அதற்குக் காரணம் ராஜ் கௌதமனின் எளிமையானதும், வசீகரமானதுமான எழுத்து நடையும், கதை கூறல் உத்தியுமே ஆகும். அவருடைய நிஜ இயல்புமே அவ்வாறாகத்தான் இருந்திருக்கிறது என்பதை நாவலின் போக்கில் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

தங்களுக்கான இடுகாட்டில் இனிமேல் பறக்குடியினர் பிணங்களைப் புதைக்கக் கூடாது என சாலியர்கள் தடை செய்கிறார்கள். ஊரே ஒன்று திரண்டு பறையர்களுக்கு எதிராக நிற்கிறது. அது பிரிட்டிசார் ஆண்டு கொண்டிருந்த காலம். அவர்கள் வேறு கதியில்லாமல் வெள்ளைக்கார பாதிரிகளை அணுகுகின்றனர். பறையர்கள் அனைவரும் கிறித்துவ மதத்துக்கு மாறினால் அந்த இடுகாட்டை அவர்களுக்கே பெற்றுத் தருவதாகப் பாதிரி உறுதியளிக்கிறார். நிர்க்கதியான மக்கள் சம்மதிக்கின்றனர். இடுகாடு கல்லறைத் தோட்டமாக மாறி அவர்களுக்குக் கிடைக்கிறது. இப்படியாகச் சிலுவையின் மூதாதையர், இந்து மதத்திலிருந்து கிறித்துவத்திற்கு மதம் மாறியவர்கள். சொந்த மதத்தில் நிலவிய சாதியப் பாகுபாடு, வக்கிரம், ஒடுக்குமுறைகளால் செத்த பிறகு பிணத்தைப் புதைக்கக்கூட இடமளிக்காத மனிதாபிமானமற்ற அடக்குமுறையாலேயே மதம் மாறுகின்றனர்.

ஆனால், ஏசுவின் பிள்ளைகளான கிறிஸ்தவர்களுக்குச் சாதி கிடையாது என்று பிரசங்கம் பண்ணும் சபையியிலும், சமூகத்திலும் அவர்கள் தொடர்ந்து கிறித்துவப் பறையர்களாகவே அடையாளப்படுத்தப் படுகின்றனர். ஆகையால் கல்வியும், நிறைவான தகுதியும் இருந்தும் சிலுவைராஜ்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அவனுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய அத்தனை வாய்ப்புகளும் அதிகாரத்தைத் தங்கள் கரங்களில் வைத்திருக்கும் உயர்சாதி கிறித்துவப் பிள்ளைமார், சைவ வேளாளர்களால் தட்டிப் பறிக்கப்படுகின்றன.

மதம் எதுவானாலும் இங்குச் சாதிதான் முக்கியம்(?).

மதம் மாறியதால் இனி ‘இந்து’ இல்லை. கிறிஸ்தவனாக இருந்தால் அவன் சாதியிலும், சமூகத்திலும் முன்னேறியவன் என்று சட்டம் சொல்கிறது. ஆதலால் அவனுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. அதுவே இந்து பறையராக இருந்தால் அவன் பின்தங்கியவன், தாழ்த்தப்பட்டவன் அதனால் அவனுக்கு இட ஒதுக்கீடு உண்டு. மதம் மாறினாலும் சாதியையே பிரதானமாகக் கொண்டு இயங்கும் சமூகத்தின் முரணை, வாழ்தலின் குறைந்தபட்ச உரிமைக்காக வேண்டி மாறிய மதத்திலும் அதே சாதியைக் கொண்டே அடக்கி ஒடுக்கும் அதன் சீழ் பிடித்த மூளையைக் கடுமையாகச் சாடி சிந்திக்கத் தூண்டுகிறான் சிலுவை.

“இப்போலாம் யார் சார் சாதி பாக்குறா” என்று பாசாங்கு செய்திடும் கூட்டத்திற்குப் பதிலாக, அப்பாவின் பெயரை, தெருவின் பெயரைக் கொண்டு ஒருவனது சாதியைக் கண்டுபிடிக்க முயலும் கீழ்த்தரமான புத்தியாட்களும், விண்ணப்பப் படிவத்தில் சாதி என்ற கட்டத்திற்கு எதிராக எஸ்.சி என்று பூர்த்தி செய்திருப்பது பத்தாமல் ‘என்ன சாதி’ என ஆங்காரமாகக் குரல் உயர்த்தும் அரசு அலுவலர்களுமே இதனை எழுதிக்கொண்டிருக்கும் இந்தநொடி வரைக்கும் சமூகத்தின் பல்வேறு படிநிலைகளிலும் விரவிக் கிடக்கிறார்கள் என்ற எல்லோரும் அறிந்த எளிய உண்மையை உரக்கச் சொல்கிறது. ஒப்புக் கொள்ள மறுக்கலாம் ஆனால் நிதர்சனத்தை மறைக்க முடியாதல்லவா?

சாப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தமிழ் இலக்கிய வரலாற்றை இறைச்சிக் காலம், பட்டினிக் காலம், பசுநெய்க் காலம், மரக்கறிக் காலம், மாட்டுக்கறிக் காலம் என ஐந்துவகையாகப் பிரிக்க முயன்று தனக்குள்ளாகவே சிலுவை நிகழ்த்திடும் உரையாடலை, உணவை முன்வைத்து இன்று முன்னெடுக்கப்படும் வெறுப்பு அரசியலோடு கச்சிதமாகப் பொருந்திப் போகிறது.

தொடக்கக் காலத்தில் இளைஞர்களுக்கு திமுக’வின் மீதிருந்த கவர்ச்சி, அண்ணாவின் மேலான நம்பிக்கை, அண்ணாவின் மறைவிற்கு பின்பான காலத்தில் திமுக கையிலெடுத்த சில அராஜகச் செயல்களால் மெல்ல அது வெறுப்பாக மாறிய விதம், சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு போட்டியாகத் தன் மகனைக் களமிறக்கிய கருணாநிதியின் தந்திரம், திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர் விலகல், கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே நிகழ்ந்த அறிக்கைப் போர், சி.பி.எம் உதயம், சி.பி.எம் பிளவு, சி.பி.ஐ.எம் உதயம், கிழக்கு பாகிஸ்தான் வங்க தேசமாக மாறியதில் இந்திரா காந்தியின் பங்கு, அவசரக் காலம், நக்சல்பாரி என அக்காலகட்டத்தின் அத்துணை அரசியல் நிகழ்வுகளையும் போகிற போக்கில் சிலுவையின் பார்வையினூடாக ஆழமாகப் பதிவு செய்திருப்பதைக் கவனிக்க வேண்டும். தொடக்கத்தில் சிலுவையும் திமுக அனுதாபியாக இருக்கிறான். அதற்கு அவன் எம்.ஜி.ஆர் ரசிகனாக இருந்தது முதல் முக்கிய காரணம். அக்காலத்தில் காங்கிரஸ்காரர்கள் சிவாஜி கணேசன் ரசிகர்களாகவும், எம்.ஜி.ஆர் ரசிகர்கள் திமுகக் காரர்களாகவும் இருந்திருக்கிறார்கள். மற்றொன்று இயல்பிலேயே அவனுக்குள் வேர்விட்டிருந்த நாத்திகம். பொருள்முதல் வாதம், கார்ல் மாக்ஸ் எழுதிய மூலதனம் முதலிய நூல்களை வாசித்த பிற்பாடு நாத்திகத்தோடு தீவிர ’மாக்ஸியவாதி’யாகிறான். அதே வேளையில் பாட்டாளி வர்க்க விடுதலையே சமூகத்தின் ஒட்டுமொத்த விடுதலை என அறைகூவல் விடுகின்ற தோழர்கள், ஏன் இந்தியா போன்ற சாதி வகைப்பட்ட சமூக அமைப்பில் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களின் விடுதலையே முழு விடுதலை எனப் பேச மறுக்கின்றனர் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. வர்க்க பேதைமையோடு இணைத்து சாதியப் பேதத்தையும் ஏன் கையிலெடுக்கவில்லை.? ஏன் இந்தத் தயக்கம்? ஏனென்றால் அவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களாக இல்லை. ஒருவேளை தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்திருப்பார்களேயானால் சாதியப் பேதங்களுக்கும் குரல் கொடுத்திருப்பார்கள்?

தோழர் ஒருவர் சிலுவையைச் சக்கிலியர் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். களியும், எருமைக்கறியும் உண்கிறார். பிள்ளைமார் சாதியைச் சேர்ந்த அவரைப் பொறுத்தவரை அது புரட்சியாகத் தெரிகிறது. ஆனால் சிலுவைக்கு அப்படித் தோன்றவில்லை. கோவணமும், குடிசையும் போகத்தானே புரட்சி. பிள்ளைமார் சாதிக்காரர் ஒரு சக்கிலியர்போல இருப்பது அவருக்குப் புரட்சியாக இருக்கலாம். ஆனால் சிலுவைக்கு? அப்படி அவன் மாறுவது புரட்சியாக இருக்காது. அது அவனோடு இயற்கை என்று தானே நினைப்பார்கள்? மேலும் சக்கிலியர் மாதிரி நடந்துகொள்வது ஒருவிதத்துல தோழருக்கு வேண்டுமானால், ‘தியாக’ என்ற பேர் உண்டாகலாம். அதுவே சிலுவையை, அதற்குத்தான் அவன் லாயக்கு என்று பேசுவார்கள்.

நாவல் முழுமைக்கும் இவை போன்ற சிந்தனைகள் சிலுவையின் அரசியல் தீக்குரலாகத் தெறிக்கின்றன.

இலக்கியத்தை முன்வைத்து சிலுவை வந்தடையும் வரையறையும் மிகவும் முக்கியமானதாகக் கருதுகிறேன். இலக்கியத்தை மட்டும் பிரதானமாகக் கொண்டு தரம், தரம் இன்மை பார்ப்பது கலை கலைக்கானது என்றும், இலக்கியம் உருவான வரலாற்றுச் சந்தர்ப்பங்களையும், அது கொணர்ந்திடும் சமூகப் பயன்பாட்டையும் இணைத்துப் பார்ப்பதன் மூலம் கலை மக்களுக்கானது என்றும் முன்வைக்கப்படும் கருதுகோள்களில், கலை கலைக்காக என்ற பிரிவுக்கு முதலாளித்துவ அரசியலையும், கலை மக்களுக்காக என்ற பிரிவுக்கு சோசலிச அரசியலையும், சோசலிச எதார்த்த வாதத்தையும் ஆதாரமாகக் கொண்ட கருத்தாக்கங்களில் “கலை மக்களுக்கானது” என்கிற அணிதான் தன்னைப் போன்ற சாமான்யர்களுக்குப் பொருத்தமானது என்று சிலுவை ஆழமாக நம்புகிறான்.

கலை மக்களுக்காகத் தானே!

மறுபுறம், சிறுவயதிலிருந்தே தந்தைக்கும் மகனுக்கும் இடையே பாசமும், ஒட்டுதலும் அறவே இல்லை. அடியாலும், தடியாலும் வெளுத்து வாங்குகிறார். அதற்கு, அடித்து வளர்க்காவிட்டால் கெட்டுப் போய்விடுவான் என்று வியாக்கானம் சொல்வதைக் கடுமையாக வெறுக்கிறான். சிலுவை வளர வளர அந்த இடைவெளி நீண்டு பெருகுகிறது. வேலை கிடைக்காமல் அல்லாடும் தருணத்தில் அவ்வுறவின் விரிசல் மேலும் பலவீனப்பட்டு உடைகிறது. சண்டை வலுக்கிறது. சிலுவை வீட்டை விட்டு வெளியேறுகிறான். கல்லூரி நாட்களில் படிப்பில் மட்டுமே தீவிரக் கவனம் செலுத்தி மற்றவற்றை ஒதுக்கித் தள்ளிய காரணத்தால் அவனுக்கு அன்னியோன்னியமான நண்பன் என ஒருத்தரும் கிடையாது. அவமானத்திலும், தனிமையிலும் உழலுகிறான். அவன் வயதையொத்த இளைஞர்கள் அனுபவிக்கும் வாழ்வைக் கண்டு ஆற்றாமையில் பெருமூச்சு விடுகிறான். விதவிதமான தற்கொலை எண்ணங்கள் முளைக்கின்றன. ஒவ்வொரு முறையும் ஏதோவொன்று தற்கொலையிலிருந்து தடுக்கிறது. சொந்த ஊரையும், அப்பா அம்மாவையும் தவிர வேறு நாதியற்றவனாகையால் அழுது கொண்டே வீட்டிற்குத் திரும்புகிறான். ஐந்து பைசாவிற்காக அப்பா அம்மாவிடம் அவமானப் படுகிறான்.

சிலுவை எடுத்துள்ள மதிப்பெண்ணும், கஷ்டப்பட்ட படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற எம்.ஏ படிப்பும் யாருக்கும் பொருட்டாகவே இல்லை. வெளியாட்கள் சாதியைச் சொல்லி அடிக்கிறார்கள். வீட்டில் உள்ளோர், வேலைக்குப் போகாமல் வெட்டியாக இருக்கிறான் எனத் தோளுக்கு மேல் வளர்ந்த பையனை உறவினர்கள் மத்தியில் வார்த்தைகளால் வெளுக்கிறார்கள். படிக்காமலிருந்திருந்தால் தெருவில் இருக்கும் மற்றவர்களைப் போல ஏதேனும் கூலி வேலைக்குச் சென்று கஞ்சியோ, கூழோ குடித்திருக்கலாம் என்ற மனநிலைக்கு உடைந்து போகிறான். தத்துவங்களும், கோட்பாடுகளும் படிக்கவும், பேசவும் நன்றாகத்தான் உள்ளது. ஆனால் கால் அணாவிற்கு பிரோஜனம் இல்லை என்று மனம் வெறுக்கிறான். இதன் விளைவாக கிறிஸ்துவப் பறையருக்கு இட ஒதுக்கீடு இல்லை. அதுவே இந்து பறையருக்கு இட ஒதுக்கீடு உண்டு என்ற தந்திரமான சட்டத்தை, அதே சட்டத்தால் தாக்க முடிவெடுத்து இறுதியில் இந்து மாதத்திற்கு மாறுகிறான் சிலுவை.

இதோடு நாவல் முடிகிறது.

“தொடரலாம்...” என்று நாவலை முடித்திருந்தார் ராஜ் கௌதமன்.

மிகுந்த ஆர்வத்தோடு தேடிப் பார்த்தேன். சிலுவைராஜ் சரித்திரத்தின் தொடர்ச்சியை, வேலைக்காக மதம் மாறிய சிலுவைராஜின் வாழ்வை “காலச்சுமை” என நாவலாக எழுதியிருக்கிறார். உடனடியாக வாங்கிவிட்டேன். அடுத்து சிலுவைராஜின் “காலச்சுமை”யை கையிலெடுத்திருக்கிறேன்.

டார்வினின் கூற்றுப்படி, தகுதி வாய்ந்தவை தாக்குப் பிடிக்கும்.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...