சாலையில் நின்று பெண்ணொருத்தி அழுதுக் கொண்டிருந்தாள் கண்ணீரைத் துடைக்க அவளது கைகள் ஏனோ முன்வரவில்லை அவளைச் சுற்றியிருந்த காற்று ஈரமாகியிருந்தது பெரும்புயலில் சிதைந்த காட்டைப் போல கூந்தல் கலைந்திருந்தது அடைமழையிலும் அழியாத வாசலில் வரைந்த கோலத்தைப் போல நெற்றியில் குங்குமம் நிறைந்திருந்தது நானும் காற்றும் அழுகையை நிறுத்த அவளுக்கு ஆறுதல் அனுப்பினோம் காரிகை மொத்த கண்ணீரையும் இன்றே அழுதுத் தீர்த்துவிட வேண்டுமென்று முடிவுச் செய்துவிட்டாள் போல நானும் காற்றும் தோற்றுக் கொண்டே இருந்தோம் ஒருகட்டத்தில் பொறுமையிழந்து நான் கிளம்பிவிட்டேன் ஆனால் தோற்று தோற்று மடியில் சாய்த்து சாய்த்து அவளைத் தொடர்ந்து ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தது அந்தப் பேரமைதியான காற்று...!!! கார்த்திக் பிரகாசம்...