பிணப் பூக்கள்
நான் ஒரு மலராகப்
பிறந்தேன்
ஏதோ ஒரு
மங்கையின் கூந்தலில்
மணம் பரப்ப வேண்டும்
அது அவள்
மனம் வரை பரவ வேண்டும்
ஏதோ ஒரு காதலன்
என்னைப் பரிமாறி
தன் மனம் பறிபோனதை
அவன் காதலியிடம் சொல்ல வேண்டும்
சொல்லிய நேரம் அந்தக் காதலி
என்னைப் பார்க்க
அவளின் சிவந்த முகம்
மேலும் சிவக்க வேண்டும்
அழகான நேரத்தில்
ஆசைக்குரியவர்களின் கழுத்தில்
மணமாலையாகத் தொங்க வேண்டும்
மணமானவர்களின்
மஞ்சத்தில் நிகழும்
முதல் கலவியில்
என் வாசனையும்
கலந்திருக்க வேண்டும்
என்று
ஏகப்பட்ட ஆசைகள்
மணமேடையில் மனம் மயங்கவிருக்க
விரும்பிய நான்
இன்று பிணத்தின் மடியில்
மண்டியிட்டுக் கிடக்கிறேன்
நான் ஒரு மலராகப்
பிறந்தேன்
வாழப் போவது
சில நாட்களே என்றாலும்
வாடிப் போவதற்காக ஒருநாளும்
நான் வருந்தியதில்லை
இன்றும் அதே நறுமணம் தான்
நல்கிக் கொண்டிருக்கிறேன்
ஆனால் யாருக்கும் இது
சுகமானதாக இருக்கவில்லை
எல்லாரும் என்னைக் கவலையின்
சின்னமாகச் சித்தரிக்கிறார்கள்
கூடைக் கூடையாக
குப்பையோடு குப்பையாக
கூடாரத்தின் ஓரத்தில் குவித்து வைத்திருக்கிறார்கள்
என்னைத் தலையில் சூடிக் கொள்ள
யாருக்கும் விருப்பமில்லை
பரவாயில்லை ஆனால்
என் தழையில்
ஏறி மிதிக்கிறார்கள்
சீக்கிரம் வாடிப் போக
பிணத்திடம் வேண்டிக் கொண்டிருக்கிறேன்
பாவம் அந்தப் பிணம்
என்னச் செய்யும்
யாரோ பிணமானதற்கு
என்னையும் சேர்த்து பிணமாக்கிவிட்டார்கள்
ஏனென்றால் நான் ஒரு
மலராகப் பிறந்தேன்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment