" நான் கிளம்புகிறேன் " என்றுச் சொல்லும் அந்தவொரு நிமிடத்திற்காக இரண்டு மணி நேரத்திற்கு முன்பிருந்தே மனதளவில் தயாராகிக் கொண்டிருப்பேன். வீட்டை விட்டு வெளியூருக்கு வந்து ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டாலும்கூட அவர்கள் கண் கலங்காமல் என்னை ஒருபோதும் வழியனுப்பியதில்லை. அதற்காகவே கிளம்பும் போது பெரும்பாலும் அம்மா அப்பாவின் கண்களைச் சந்திப்பதைத் தவிர்க்கப் போராடுவேன். ஒருவேளை கண்களைப் பார்த்துவிட்டால் அவ்வளவுதான். மனது பலவீனப்பட்டு உடைந்து போகும். இமைகள் நனையும். கண்ணீரை மறைக்க முடியாமல் கண்கள் தவிக்கும். " பாத்து போ.. ஒழுங்கா சாப்பிடு.. டீ குடிச்சிகிட்டே சாப்பாட்ட மறந்துட்டு சுத்தாத.. நைட் ரொம்ப நேரம் முழிச்சிகிட்டு இருக்காத.. சாப்புட்டு சீக்கிரம் தூங்கிப் பழகு.. போய்ட்டு போன் பண்ணு " என்று இதழ்களுக்கு ஓய்வளிக்காமல் கன்னங்கள் நனைய பாசவார்த்தைகளால் அணைத்துக் கொண்டே இருப்பாள் அம்மா. மறுபுறம் அப்பா, " கண்ணு, கைல காசு இல்லனா போன் பண்ணு. அக்கௌன்ட்'ல உடனே போட்டுவுடறேன். எப்படிடா அப்பாகிட்ட கேக்கிறதுனு பட்டினியோட கெடக்காத .. என்ன சரியா..?" என்பார். சரிப்பா.....