கருக்கலில்
கடற்கரையில்
காதலியுடன் கவிஞனவன்
நின்றிருந்தான்
கண்முன்னே
எத்தனைமுறை கண்டாலும்
சலிக்காத
அழகுக் குன்றிடாத
கடல்
காதலியை
காற்றிடம்
ஒப்படைத்துவிட்டு
சிந்தனைக் கடலில்
கால் நனைக்கலானான்
கடலெங்கே முடிகிறது
வானமெங்கே தொடங்குகிறது
அலையெங்கே பிறக்கிறது
மணலெங்கே மறைகிறது
நிலவெங்கே குடியிருக்கிறது
அலையோசையும்
காற்றோசையும்
கைகள் கோர்த்து
கவிஞனின்
காதுக்குள் கிச்சுமுச்சாடின
கவிஞன் மெய்மறந்து
கடலை ஆராய்ந்தான்
நிலவை நினைத்து
காற்று கரைந்தது
காணாமல் போனது
காற்றும் கைவிட்ட பிறகு
காதலி கவிஞனைக்
கண்டாள்
நீண்ட மெளனத்திற்கு
முத்தத்தால் முற்றுப்புள்ளி
வைத்தாள்
கவிஞன்
கடலைப் பார்த்து
காதலியை அணைத்தான்
கடலே பெண்ணாய் மாறி
கைகளுக்குள் அடங்கியது
போலிருந்தது
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment