கோலம்...!!!
சேலையைத் தூக்கி லாவகமாக இடுப்பில் செறுகிக் கொண்டு கையில் துடைப்பத்துடன் அம்மா. நீர் நிரம்பிய வாளியைத் தூக்கிக் கொண்டு பின்னால் நான். அம்மாவும் நானும் கோலம் போட வாசலில் இறங்கி நின்றோம் ..!
எங்களுக்குப் பொங்கல் பண்டிகையின் கொண்டாட்டம் முந்தைய நாள் இரவு போடும் கோலத்திலிருந்தே தொடங்கிவிடும். "இதுவரையில் போடாத கோலமாக வாசலில் பெரியதாக போட வேண்டும்" என்று இரண்டு மூன்று நாட்களாக மெனக்கெட்டு ஒரு கோலத்தை எங்கேயாவது பார்த்து வரைந்து வைத்திருப்பாள் அம்மா. பெரும்பாலும் அது போன வருடம் போட்ட அதே கோலமாகத் தான் இருக்கும் என்பது வேறு விஷயம். ஆனாலும் வரைந்த கோலத்தைப் பெருமிதமாக காட்டுவாள். நானும் நன்றாக இருக்கிறது என்றுச் சொல்லி வைப்பேன்.
எங்கிருந்தாலும் கோலம் போடும் நேரத்திற்குச் சரியாக வீட்டிற்கு வந்துவிடுவேன். இரவுச் சாப்பாடு முடித்துவிட்டு கையில் டீ'யுடன் கீழிறங்கி விடுவோம். சேலையை லாவகமாகக் கட்டிக் கொண்டு வாசலைப் பெருக்கிவிட்டு தண்ணீர்த் தெளிப்பாள். வரைந்து வைத்திருந்த கோலத்தை மனப்பாடமாக வாசலில் தீட்டுவாள். பார்க்க அதுவே ஒரு கவிதையாக இருக்கும். பிறகுதான் நம் வேலை. நானும் தங்கையும் ஆளுக்கொருபுறம் வண்ணம் கொடுப்போம்.வண்ணம் கொடுத்துக் கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டு அக்கா கமண்ட் அடிக்கும், "அடுத்த பொங்கலுக்கு கார்த்தி அவன் பொண்டாட்டியோட கோலம் போட்டு கலர் கொடுத்திட்டு இருப்பான்"...! மனதில் சிரித்துக் கொண்டே காதில் எதும் விழாதது போல் நான் பாட்டுக்கு வண்ணப் பொடியைத் தூவிக் கொண்டிருப்பேன். அம்மா சிலாகித்திருக்கையில் எதிரில் தங்கை என்னை பார்த்து முறைத்துக் கொண்டிருப்பாள். இதுவரையில் பல "அடுத்த பொங்கல்"கள் வந்துவிட்டன ஆனால் அந்தக்கா சொன்ன "அந்த அடுத்த பொங்கல்" மட்டும் இன்னும் வரவேயில்லை என்பது தனிக்கதை.
கிண்டல் கேலியுடன் ஒருவழியாக கோலம் போட்டு முடித்துவிட்டு இரண்டு மூன்றுத் தெருக்கள் சுற்றுவோம். பெரும்பாலும் அனைவரும் வாசலில் கோலம் போட்டு கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு இலவச அறிவுரைகளை அள்ளித் தெளித்துவிட்டு, அவர்கள் வரைந்திருக்கும் மாட்டையும், பானையையும் பார்த்து நக்கலடிப்போம். சுற்றிலும் புன்னகை வண்ண வண்ணமாக காற்றில் மிதந்துக் கொண்டிருக்கும். பனியில் நனைந்தவாறே கோலங்களை பார்த்து ரசித்துவிட்டு நடுநிசியில் வீடு வந்துச் சேர்வோம்.
காலையில் எழுந்து கோலத்தைப் பார்த்தால் அதில் முந்தைய இரவு நினைவுகள் வண்ண வண்ணமாய் மின்னிக் கொண்டிருக்கும்.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment