Skip to main content

எளிய மனிதர்கள் சூழ் உலகு

எழுபது முதல் எண்பதுக்குள் வயதிருக்கும். ஒல்லியான உருவம். ஒடிசலான கன்னங்கள். சராசரிக்கும் மிகக் குறைவான உயரம்.கண்ணாடியின் உதவியோடு கண்கள் ஆனாலும் கூர்விழிப் பார்வை. தலையையும் மார்பையும் நூலில் கோர்த்து கட்டியது போன்ற கோழிக் கழுத்து. வளைந்திடாத முதுகு. தடியில்லாமல் தடம் பதிக்கும் பாதங்கள். இடுப்பில் காவி வேட்டி. இடுப்பைத்தான் வேட்டி கட்டியிருக்கிறதென்று முழுமனதாக ஒப்புக் கொள்வது கொஞ்சம் கடினம். வேண்டுமானால் வேட்டியென்ற கொசுறுத் துணி இறுக்கிப் பிடிக்க முயன்றுக் கொண்டிருந்த இடத்தை 'இடுப்பு' என்று வைத்துக் கொள்ளலாம். அதே போல் அதை மேல்சட்டை என்று அவ்வளவு எளிதில் அங்கீகரித்துவிட முடியாது. சட்டையாகத் தான் இருக்கும் என்று நாமே அனுமானித்துக் கொள்ள வேண்டும்.

தினமும் மாலை சரியாக ஆறு மணிக்கு, இருபது முதல் முப்பது பாய்களை ஒற்றை ஆளாக தலையில் சுமந்துக்கொண்டு தி.நகர் அருணா உணவகத்திற்கு அருகில் உள்ள நடைபாதைக்கு வந்துவிடுவார். எவ்வளவு பனி அடித்தாலும் எட்டரை மணி வரை கண்டிப்பாக அமர்ந்திருப்பார். ஒற்றை ஆள் பாய் முதல் மூன்று நான்கு பேர் படுக்கக் கூடிய அளவிலான பாய்களை ரகத்திற்கு ஐந்து முதல் பத்து வரை விற்பனைக்கு வைத்திருப்பார்.

வட சென்னையில் அம்பேத்கர் மன்றங்களின் மூலம் நடத்தப்படும் மாலை நேர வகுப்புகளில் பயிலும் சிறுவர் மற்றும் மாணவ மாணவியர்கள் அமர்வதற்காகப் பாய் வாங்கித் தர வேண்டும் என்றொரு எண்ணம். கடைசி முறை அங்கே சென்றிருந்த போது மாணவர்கள் தரையில் கிழிந்த பாயில் அமர்ந்திருப்பதைக் காண நேர்ந்தது. விசாரித்ததில் பெரும்பாலான வகுப்புகளில் கிழிந்த நைந்து போன பாய்களில் தான் மாணவர்கள் அமர்ந்து படிக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.மொத்தமாக முப்பது முதல் முப்பத்தைந்து வரை தேவைப்படும் என்றுச் சொன்னார்கள்.

நண்பர்களின் உதவியோடு பணம் சேர்த்தேன். எங்கு வாங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது தான் இந்த தாத்தாவின் ஞாபகம் வந்தது. புத்தாண்டுக்கு முந்தைய தினம் தாத்தாவைப் பார்த்து விஷயத்தைச் சொல்லி ஐந்நூறு ரூபாய் முன்பணம் கொடுத்தேன். அரைமணி நேரம் கழித்து வர சொன்னார். நானும் டீ குடித்துவிட்டு அரைமணி நேரம் கழித்துச் சென்றேன்.

தயாராக பதினைந்து பாய்களைக் கட்டி வைத்திருந்தார். இந்த ராகத்தில் பதினைந்து தான் இருக்கிறது. "மீதியை வேறு ராகத்தில் தரவா" என்றார். 

"சரி".. என்றேன்.

"பத்து நிமிஷம் இரு. வீட்டுக்கு போய் எடுத்துட்டு வரேன்" என்றார். அப்பொழுது தான் தெரிந்தது மொத்தத்தையும் தலையில் சுமந்தே கொண்டு வந்திருக்கிறார் என்று.

"இருங்க, நானும் வரேன். உங்க கூட தூக்கிட்டு வந்தரேன்" என்றேன். தொடர்ந்து மறுத்தார். பின்பு ஒருகட்டத்தில் ஒப்புக் கொண்டார். நானும் நண்பர்கள் இருவரும் அவர் பின்னாலயே சென்றோம்.

கிட்டத்தட்ட ஐந்நூறு மீட்டர் நடந்திருப்போம். தாத்தா அசராமல் வந்தார்.

சந்து சந்தாகச் சென்று ஒரு சந்தின் சந்தில் தாத்தாவின் வீடு. கை கால்களை நீட்டிப் படுக்கும் அளவிற்கான அறை. அந்த ஓட்டு வீட்டிற்கு ஓடுகளே ஆடம்பரம் தான். ஒரு மூலையில் பழைய டீவி. அந்த கம்பெனி, டீவி விற்பனையை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டன என்று நினைக்கிறேன். டீவியின் பக்கவாட்டில் ஒரு சிறிய அடுப்பு. அதன் மேல் சின்ன குக்கர். மறு மூலையில் ரகம் வாரியாக பாய்கள். இவ்வளவு தான் வீடு.

தாத்தா ஈரோட்டுக்காரர். முப்பத்தைந்து வருடமாகச் சென்னையில் இவ்வாறு பாய் விற்றுக் கொண்டிருக்கிறார். கேட்டதும் நானும் நண்பர்களும் அசந்துவிட்டோம்.

தாத்தாவோடு பேசிக் கொண்டே மிச்ச பாய்களைச் சுமந்துக் கொண்டு தாத்தாவின் நடைபாதைக் கடைக்கு வந்தோம்.

காசை கையில் கொடுக்கும் போது தாத்தாவின் முகத்தைப் பார்க்க வேண்டுமே..! ஆனந்தம், மனநிறைவு, பரம திருப்தி எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு மெல்லிய சிரிப்பாய் ஒடிசலான கன்னங்களின் வழி வெளிவந்தது.

எல்லோரும் புத்தாண்டை வரவேற்க உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருந்த போது, நான் மட்டும் நடப்பாண்டை உளப்பூர்வமாக எந்தக் குறையுமில்லாமல் வழியனுப்பிய மகிழ்ச்சியில் பாய்களைத் தோளில் சுமந்து அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன்..

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...