Skip to main content

Posts

Showing posts from January, 2019

நான் காதலிக்கப்படுகிறேன்

பேரன்பே உருவாய் பிறந்திட்ட பெண்ணினால் காதலிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன் நான் காதலிக்கப்படுகிறேன் என்ன ஒரு உணர்வு இருக்கும் இரு விழிகளோடு இன்னொன்று இணைந்தது போல பறக்கவில்லை காதல் பாடல்களுக்குக் குதிக்கவில்லை மாறாக இயல்புநிலையில்தான் இருக்கிறேன் எதார்த்தமாகவே இதயம் துடிக்கிறது நிம்மதியைச் சுவாசிக்கத் தந்து நிம்மதியாய் சுவாசிக்க வைக்கிறது வேதனையை வெளியேற்றுகிறது மகிழ்ச்சியாய் வியர்க்கிறது காதலிக்கப்படும் மனித ஆத்மா இப்படித்தான் இருக்குமா.? அவள் பெண்தான் தேவதை அல்ல ஒருவேளை தேவதையாகக் கூட இருக்கலாம் ஆனால் என்னைக் காதலிப்பதனால் அவள் தேவதையாகிவிடவில்லை தேவதையாக இருப்பதனாலேயே அவள் என்னைக் காதலிக்கிறாள் நான் காதலிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன் கார்த்திக் பிரகாசம்...

டிரைவர்

முன்னே செல்லும் வாகனத்தின் பின்புறம் இப்படி எழுதியிருந்தது பெண் தேடும் போது கேவலமாகவும் ஆம்புலன்சில் போகும் போது கடவுளாகவும் தெரிபவன் டிரைவர் பின்னிருந்த வாகனத்தின் ஓட்டுநர் படித்து சில நிமிடங்கள் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டு கண்களைக் கவிழ்த்து விரிய விரும்பா இதழ்களை மேலாகக் குவித்து இடதுபுறமாக இழுத்து இறுதியில் இதழ்களை இயல்பாக்கினார் புன்னகையின் போர்வையில் என்னவென்று சொல்லமுடியாத ஏதோவொன்று இதழ்களின் ஓரத்தில் வழிந்தது அதன் மறைவில் இருவரும் முகம் தெரியாத நண்பர்களாகியிருந்தனர். கார்த்திக் பிரகாசம்...

மாயசுகம்

இது ஏதோ அறிகுறியா.? இல்லையென்றால் எப்போதோ படித்த அந்தக் கவிதை ஏன் இப்போது ஞாபகத்திற்கு வர வேண்டும்...? ஆட்கள் அரவமற்ற தனிபெரும் அருவியில் தானுமொரு துளியாகாமல் தள்ளிநின்று பறந்துவரும் சிறுமழைச் சாரலின் ஆலாபனையில் பாறையின் முதுகில் கண்களை மூடி அமர்ந்திருக்கும் மாயசுகம். மீண்டுமொரு முறை அன்றைய  நானாகிவிட்ட நான். கார்த்திக் பிரகாசம்...

இவர் தான் ஆசிரியர்

அடுத்ததாக நல்லாசிரியர் விருது பெற்றுள்ள நம் பள்ளியின் மூத்த ஆசிரியர் திரு.நௌசுத் கான் அவர்கள் பேசுவார்கள். உதவி தலைமையாசிரியர் அப்பெயரைக் கூறியதும் மாணவர்களின் கரவொலியில் மேடையே அதிர்ந்தது.வரவேற்பு பலகையில் அவரின் பெயரைத் தன் நெஞ்சில் தரித்திருந்த பட்டுத் துணிகள் காற்றில் அசைந்தாடின.அனைவரின் விழிகளும் ஆசிரியரின் உருவத்தைப் பருக வியப்புடன் விரிந்திருந்தன. அவர்களின் செவிகள் தானாகவே கூர்மையாகியிருந்தன. ஆசிரியர் எழுந்து மைக்கின் அருகில் வந்தார். "ஹெ ஹ் ஹெம்" என்று தொண்டையைக் கனைத்தார். கைகளை உயர்த்தி மாணவர்களின் ஆரவாரத்தை அமைதிப்படுத்திவிட்டு பேசத் தொடங்கினார். அன்பு மாணவ மணிகளே, நான் நல்லாசிரியர் விருதுப் பெற்றுள்ளதற்குப் பலரும் பாராட்டிப் பேசினார்கள். வாழ்த்தினார்கள். அவர்களுக்கு என் நன்றி மாலைகள் மரியாதையாக. மாணவ முத்துகளே..! முதலில் விருதென்ற ஒன்றை என் வாழ்வில் நான் பெருமையாகக் கருதுவதில்லை. எனக்கு பெருமையெல்லாம் நீங்கள் தான். உங்கள் வளர்ச்சி தான். விருது வாங்க வேண்டும் என்பது என் நோக்கமுமல்ல. அதற்காக நான் உழைக்கவுமில்லை. என் மாணவச் செல்வங்களை சமூகத்தில் சிறந்தவர்க...

இன்றும் இப்படித்தான்

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணொருத்தி தெருவில் என்னவோ பிதற்றிக் கொண்டுச் சென்றாள்.பிச்சைக்காரர்கள் தங்கள் கைக்குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு தொழிலுக்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.ஒரு பையன் தெருமுக்கில் நேற்று கழுவிய அதே காரை இன்றும் கழுவிக் கொண்டிருந்தான்.பெருமூச்சுடன் புகையைக் கக்கி முதல் அடியை தயங்கியபடி எட்டு வைத்தது அரசாங்கப் பேருந்து. குளித்தும் பவுடர் பூசியும் மறைந்திடாத தூக்கத்துடன் சொக்கிக் கொண்டிருந்த முகங்களை எவ்வித தயக்கமும் இல்லாமல் வழக்கம் போல் தனக்குள் நிறைத்தபடி முறைத்தது கல்லூரிப் பேருந்து. செத்த எலியின் உடலை தன் அலகால் கொத்தி இழுத்துக் கொண்டிருந்தது ஒரு காகம். இடிப்பது போல வந்து மயிரிழையில் எனக்கே உயிரை விட்டுச் சென்றது ஆட்டோ. இன்றும் இப்படித்தான் இயங்கத் தொடங்கியது நகரம் . கார்த்திக் பிரகாசம்...

அத்தம்மா

"பொம்பளையாட்டமா பேசறா... அக்கன்பக்கத்துல வாழணுமே; நாளைக்கு மூஞ்ச பாக்கணுமே; ஆத்ர அவசரத்துக்கு நாலு பேரு வேணுமேன்னு யோசிக்காம கொஞ்சங்கூட வாய்க் கூசாமல பேசறா அவ... என்ன மனுசியா இருப்பாளோ... மானங்கெட்டவ".. வாசலில் இருந்து வசவை வடித்துக் கொண்டே கண்ணைக் கசக்கியபடி வீட்டிற்குள் வந்தது அத்தை. விசாலம் அத்தை. பெயரைப் போலவே மனசும் விசாலம். அப்பழுக்கற்றவள். பருவ புரிதல்கள் உடலுக்குள் ஊடுருவத் துவங்கவதற்கு முன்னமே திருமணத்திற்குத் தீர்மானிக்கப்பட்டவள். ஆனால் அத்திருமணத்தின் தெளிவுகள் கண்முன்னே தென்படுவதற்குள்ளாகவே கணவனை இழந்துவிட்டாள்.இதே போல் கண்ணைக் கசக்கிக் கொண்டு ஒருநாள் வீட்டிற்கு வந்தவள் அதன்பின் எங்கள் வீட்டை விட்டு ஒருநாளும் சென்றதில்லை. வீட்டினுள்ளேயே இருப்பாள். எந்நேரமும் ஏதாவதொரு புத்தகத்தையோ, பேப்பரில் எழுதி வைத்த துணுக்குகளையோ வாசித்துக் கொண்டிருப்பாள். பிடித்த வரிகள் என்றால் தன் குறிப்புச் சேகரிக்கும் தொகுப்பில் எழுதிக் கொள்வாள். அர்த்த ராத்திரியில் எழுப்புகின்ற அச்சமூட்டும் துக்கக் கனவாய் அமைந்துவிட்ட தன் தங்கையின் திருமண வாழ்க்கையை எண்ணி அப்பா வேதனைப்படாத நாளில்லை. நன்கு...