Skip to main content

இவர் தான் ஆசிரியர்

அடுத்ததாக நல்லாசிரியர் விருது பெற்றுள்ள நம் பள்ளியின் மூத்த ஆசிரியர் திரு.நௌசுத் கான் அவர்கள் பேசுவார்கள்.

உதவி தலைமையாசிரியர் அப்பெயரைக் கூறியதும் மாணவர்களின் கரவொலியில் மேடையே அதிர்ந்தது.வரவேற்பு பலகையில் அவரின் பெயரைத் தன் நெஞ்சில் தரித்திருந்த பட்டுத் துணிகள் காற்றில் அசைந்தாடின.அனைவரின் விழிகளும் ஆசிரியரின் உருவத்தைப் பருக வியப்புடன் விரிந்திருந்தன. அவர்களின் செவிகள் தானாகவே கூர்மையாகியிருந்தன.

ஆசிரியர் எழுந்து மைக்கின் அருகில் வந்தார்.

"ஹெ ஹ் ஹெம்" என்று தொண்டையைக் கனைத்தார். கைகளை உயர்த்தி மாணவர்களின் ஆரவாரத்தை அமைதிப்படுத்திவிட்டு பேசத் தொடங்கினார்.

அன்பு மாணவ மணிகளே,

நான் நல்லாசிரியர் விருதுப் பெற்றுள்ளதற்குப் பலரும் பாராட்டிப் பேசினார்கள். வாழ்த்தினார்கள். அவர்களுக்கு என் நன்றி மாலைகள் மரியாதையாக. மாணவ முத்துகளே..! முதலில் விருதென்ற ஒன்றை என் வாழ்வில் நான் பெருமையாகக் கருதுவதில்லை. எனக்கு பெருமையெல்லாம் நீங்கள் தான். உங்கள் வளர்ச்சி தான். விருது வாங்க வேண்டும் என்பது என் நோக்கமுமல்ல. அதற்காக நான் உழைக்கவுமில்லை. என் மாணவச் செல்வங்களை சமூகத்தில் சிறந்தவர்களாக, சமத்துவ எண்ணம் படைத்தவர்களாக,மற்ற மனித உயிர்களுடன் சகோதரத்துவம் போற்றுபவர்களாக, சுயமரியாதைக் கொண்டவர்களாக, மானுடம் பறைச் சாற்றுபவர்களாக வளர்த்தெடுப்பதே வாழ்வில் என்னுடைய உன்னத நோக்கம். அதைச் சிறந்த முறையில் செயல்படுத்திட முனைப்புடன் உழைத்து வருகிறேன். செல்வங்களே...! உங்களுக்கு நன்றாகத் தெரியும். நான் உரையாடலை விரும்புபவன். ஆரோக்கியமான உரையாடல் அல்லது உரையாடலை முன்னெடுப்பது ஒரு ஆசிரியனாகச் சமூகத்தின் அவசியமென்றே கருதுகிறேன்.

என்னுடைய வேதியியல் ஆசிரியர் அடிக்கடிச் சொல்வார்கள் "பெற்றோர்கள் பகுதிநேர ஆசிரியர்கள்...! ஆசிரியர்கள் முழுநேர பெற்றோர்கள்...!"என்று. இவ்வரிகள் நான் மாணவனாக இருந்த காலத்திலேயே மனதின் ஆழத்தில் நன்கு பதிந்துவிட்டன.சொல்ல போனால் இவ்வரிகள் தான் என் சிந்தையை ஆசிரிய வாழ்வை நோக்கித் திருப்பிய உந்துசக்தி. அந்த வரிகளின் வீரியம் இன்றுவரை குறையவில்லை. குறைய போவதும் இல்லை. ஒருவேளை குறைந்தால் அன்று நான் ஆசிரியர் பணியிலோ அல்லது உயிருடனோ இருக்கமாட்டேன். இன்றுவரை என்னிடம் பாடம் கற்க வரும் பிள்ளைகளை நான் பெற்றெடுத்த பிள்ளைகளாகவே கருதுகிறேன். அவ்வழியே நடக்கவும் செய்கிறேன்.ஏனென்றால் ஆசிரியர்கள் தான் நல்ல நேர்மையான சமூகத்தை அமைப்பதற்கான அஸ்திவாரம் என்பதை நான் ஆழமாக நம்புகிறேன். 

மாணவப் பிள்ளைகளே...! உங்களிடம் சிலவற்றைப் பகிர்ந்துக் கொள்ள விரும்புகின்றேன். ஒன்றை நன்றாகப் புரிந்துக் கொள்ளுங்கள். வெறும் மதிப்பெண்களுக்காக மட்டும் படிக்காதீர்கள். மதிப்பெண்கள் அவசியம்தான் ஆனால் அதுவே ஆதரமாகிவிடாது. அறிவைப் பெருக்கிக் கொள்ளுங்கள். பகிர்ந்துக் கொள்ளுங்கள்.உங்களுடன் அருகில் அமர்ந்திருக்கும் சகாவை மதிப்பெண்களைக் கொண்டு மதிப்பிடாதீர்கள். மாறாக அறிவைக் கொண்டு, திறமையைக் கொண்டு, மனித நேயத்தைக் கொண்டு மதிப்பிடுங்கள். மதிப்பெண்ணுக்கும்  மதிப்பீட்டுக்கும் சம்மந்தமே இல்லை. ஒருவனை அவன் மதிப்பெண் கொண்டு மதிப்பிட்டால் நாம் தான் முட்டாள் என்பதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள் செல்வங்களே.

புத்தகங்களைத் தேடித் தேடி வாசியுங்கள். தன் வரலாற்றை, உலக வரலாற்றை அறிந்துக் கொள்ளுங்கள். கவிதைகளையும், நாவல்களையும் விட்டுவிடாதீர்கள். கவிதை, நாவல்கள் மூலமே நீங்கள் பல தரப்பட்ட மனிதர்களையும், அவர்களின் வாழ்வியலையும் விளங்கிக் கொள்ள இயலும். மேலும் அது, நாம் வாழ்கின்ற வாழ்க்கையிலிருந்து சற்று விலகி நின்று வேடிக்கைப் பார்க்க வைக்கும். நமக்கு வாய்த்திடாத ஒரு வாழ்க்கையை நம்மை வாழ வைக்கும். கற்பனைச் சூழ்நிலைகளை நமக்குள் எழுப்பி அதன்பால் முடிவெடுக்க உத்வேகமளிக்கும். இது முக்கியமானச் சூழ்நிலையில் சரியான முடிவையெடுக்கப் பெரிதும் உதவும் மாணவச் செல்வங்களே.

'பேச்சை இருமல் இடைமறித்தது. சில நிமிடங்களுக்குத் தொடர்ந்து இருமிக் கொண்டே இருந்தார்'.

"நிசப்தம்... நிசப்தம்... நிசப்தம்"

ஆசிரியரின் ஒவ்வொரு அசைவையும் மாணவர்கள் அமைதியாகக் கவனித்தனர்.

காற்றும் ஓசை எழுப்பாமல் தவிழ்ந்துச் சென்றது.

தண்ணீர் குடித்துவிட்டு தொண்டையைச் செருமினார். மீண்டும் பேச்சைத் தொடங்கினார்.

"இவ்விருதிற்கென எனக்குக் கிடைத்திட்ட ரொக்கத் தொகையை நம் பள்ளியின் நூலாக மேம்பாட்டிற்காக அளிக்கிறேன்." 

மாணவர்கள் ஆர்ப்பரித்தனர்.கரவோசை எட்டுத் திக்கும் எக்காளமிட்டது.மற்ற ஆசிரியர்களும்    ஒருவரையொருவர் பார்த்து பெருமிதமாகப் புன்னகையித்தனர். ஒருசில ஆசிரியரின் கண்கள் கலங்கியும் இருந்தன.

ஆரவாரத்திற்குப் பிறகு, "மாணவச் செல்வங்களே...உங்கள் வளர்ச்சியும், சமூகத்தில் நீங்கள் ஈட்டிடும் நன்மதிப்பும் தான் எனக்குப் பெருமை. அதுவே எனக்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும், ஆத்ம திருப்தியையும் தரக் கூடியது... வாழ்க. வளர்க"  என்றுக் கூறி தன் பேச்சை முடித்தார்.

மலையையும் அசைத்தெடுத்திடும் கரவொலி பள்ளியின் ஒவ்வொரு சுவரிலும்  பட்டு எதிரொலித்தது. அங்குக் குழுயிருந்த மாணவர்களின் சிலிர்ப்பு, வெயிலை மயிர்ச் கூச்சத்தால் குத்தி விலக்கியது .

"ஆசிரியர்ன்னா. இவர் தான்டா ஆசிரியர். என்னா மனுஷன்." என்றுப் பேசிக் கொண்டு நடந்த சில மாணவர்களின் பேச்சுத் துணுக்குகளைக் காற்றின் காதுகள் களவாடிக் கொண்டன. 
 
மூர்ச்சையாகிருந்த இன்னும் சில மாணவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பாமலேயே வீட்டிற்கு நடந்தனர். 

கார்த்திக் பிரகாசம்... 

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...