Skip to main content

அத்தம்மா

"பொம்பளையாட்டமா பேசறா... அக்கன்பக்கத்துல வாழணுமே; நாளைக்கு மூஞ்ச பாக்கணுமே; ஆத்ர அவசரத்துக்கு நாலு பேரு வேணுமேன்னு யோசிக்காம கொஞ்சங்கூட வாய்க் கூசாமல பேசறா அவ... என்ன மனுசியா இருப்பாளோ... மானங்கெட்டவ"..

வாசலில் இருந்து வசவை வடித்துக் கொண்டே கண்ணைக் கசக்கியபடி வீட்டிற்குள் வந்தது அத்தை.

விசாலம் அத்தை. பெயரைப் போலவே மனசும் விசாலம். அப்பழுக்கற்றவள். பருவ புரிதல்கள் உடலுக்குள் ஊடுருவத் துவங்கவதற்கு முன்னமே திருமணத்திற்குத் தீர்மானிக்கப்பட்டவள். ஆனால் அத்திருமணத்தின் தெளிவுகள் கண்முன்னே தென்படுவதற்குள்ளாகவே கணவனை இழந்துவிட்டாள்.இதே போல் கண்ணைக் கசக்கிக் கொண்டு ஒருநாள் வீட்டிற்கு வந்தவள் அதன்பின் எங்கள் வீட்டை விட்டு ஒருநாளும் சென்றதில்லை. வீட்டினுள்ளேயே இருப்பாள். எந்நேரமும் ஏதாவதொரு புத்தகத்தையோ, பேப்பரில் எழுதி வைத்த துணுக்குகளையோ வாசித்துக் கொண்டிருப்பாள். பிடித்த வரிகள் என்றால் தன் குறிப்புச் சேகரிக்கும் தொகுப்பில் எழுதிக் கொள்வாள்.

அர்த்த ராத்திரியில் எழுப்புகின்ற அச்சமூட்டும் துக்கக் கனவாய் அமைந்துவிட்ட தன் தங்கையின் திருமண வாழ்க்கையை எண்ணி அப்பா வேதனைப்படாத நாளில்லை. நன்கு பதிந்துவிட்ட காய்ந்த கண்ணீர்த் தடத்துடனே காணப்படும் அவளின் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் அப்பாவின் முகத்தில் பாவக் கோடுகள் நெளியும். மனது பொறுக்காமல் ஒரு சமயம், அப்பா மறுமணம் குறித்த பேச்சை எடுக்கும் போது, "செத்த பொணத்துக்கு எத்தனமொற கொள்ளி வைப்பீங்க" என்றுக் கேட்டுவிட்டாள். அதுதான் கடைசிமுறை. அதன்பின் அவளது மறுமணப் பேச்சை வீட்டில் யாரும் எடுக்கவில்லை.

அத்தைக்கு என்மேல் கொள்ளைப் பிரியம். ராசா ராசா'வென்று அன்புப் பொங்கக் கூப்பிடும். அவள் கூப்பிடுவதே கொஞ்சலாய், ரட்சிக்கும் சுகமாய் இருக்கும். அத்தை முதல்முறை எங்கள் வீட்டிற்கு வரும்போது எனக்கு ஆறேழு வயதுக்குள் தான் இருந்திருக்கும். சதா எந்நேரமும் அழுதபடியே இருக்கும் அவளைப் பார்த்தால் பயமாய் இருக்கும். அவள் அருகிலேயே செல்லமாட்டேன்.

நன்றாக நினைவிருக்கிறது. அன்று அம்மாவும் அப்பாவும் ஏதோவொரு உறவினரின் குடும்ப நிகழ்ச்சிக்காக வெளியில் செல்ல தயாராகிக் கொண்டிருந்தார்கள். அப்பா எவ்வளவோ கெஞ்சித்தும் அவர்களுடன் செல்ல அத்தை மறுத்துவிட்டாள். சரியென்று அவளுக்குத் துணையாக என்னை வீட்டிலேயே விட்டுவிட்டு அம்மாவும் அப்பாவும் சென்றுவிட்டார்கள். நான் பக்கத்து வீட்டு பையனுடன் விளையாடச் சென்றுவிட்டேன். நானும் பக்கத்து வீட்டுப் பையனும் தெருவில் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்கும் போது, நான் தவறி விழுந்ததில் தாடையில் அடிபட்டு இரத்தம் கொட்ட ஆரம்பித்துவிட்டது. அலறிக் கொண்டே வீட்டிற்கு ஓடினேன். புத்தகத்தை மடியில் வைத்து படித்துக் கொண்டிருந்த அத்தை, அலறலைக் கேட்டதும் விழுந்தடித்து வந்து என்னை அணைத்தது.சேலையில் ரத்தத்தைத் துடைத்து, சமையற்கட்டில் இருந்து மஞ்சளை எடுத்து வந்து, ஒழுகிய மிச்ச ரத்தத்தைப் பஞ்சால் வழித்துவிட்டு, தாடையில் தடவிக் கொடுத்தது. கண்ணீர் வடிய மடியில் கிடத்தி ஆறுதல்படுத்தியது. அதிலிருந்து என்னை எப்போதும் தன் அணைப்பிலேயே வைத்திருக்கிறது.

அன்று அந்தக் குடும்ப நிகழ்ச்சிக்காகச் சென்ற அப்பாவும் அம்மாவும் திரும்பி வரவேயில்லை. விபத்தில் இறந்துவிட்டதாக அத்தை தான் பின்புச் சொன்னது. நான் விவரம் தெரியாமல் கொஞ்ச நேரம் அழுந்திருந்து விட்டு ஏற்கனவே தாடையில் அடிவாங்கிய மயக்கத்தில் இருந்ததால் அப்படியே தூங்கிவிட்டேனாம்.

அன்றுமுதல் வசவைச் சிந்திக் கொண்டே வரும் இந்த நிமிடம் வரை, சுமந்து பெற்ற பிள்ளையாகத் தான் என்னை வளர்த்து வருகிறது. ஒருநாள் ஒருமுறையேனும் அண்ணன் பெற்ற மகன் தானேயென்று நினைத்ததில்லை.கோபத்தில் கூட திட்டியதில்லை.

அழுதுக் கொண்டிருப்பதை பார்த்துக் கேட்டேன்.

"அத்தம்மா..! எதுக்காக இப்போ கண்ணக் கசக்கிக் கிட்டு கெடக்க"

சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, பக்கத்து வீட்டில் குடியிருக்கும் வாசுகி அக்காவுடன் நடந்த வாய்ச் சண்டையைச் சொல்ல ஆரம்பித்தது.

"ம்ம்ம்... என்ன பண்றது.! உன்னய மாதிரி ஆம்பள புள்ளய வச்சிருந்தா பரவால்ல. செவனேனு கெடக்கலாம். நான் பொம்பள புள்ளயில பெத்து வெச்சிருக்கேன். அதுக்கு சீர் செனத்தி செஞ்சி ஒருத்தன் கைல புடிச்சிக் குடுக்குற வரைக்கும் பாதி உசுரு தான். அதுவும் வயசுக்கு வந்துட்ட பிறகு ஒவ்வொரு நாளும் நெருப்புல நிக்குற மாதிரி பாத்துக்க. காலைல வீட்ட விட்டுபோனதல இருந்து சாயந்தரம் திரும்பவும் வீடு வந்து சேர்ற வரைக்கும் கண்கொத்தி பாம்பா வாசல்லயே கண்ண வெச்சி ஒக்காந்து இருக்கனும். ஒவ்வொரு நாளும் எங்க எவனோ கொத்திட்டு போய்டுவானோன்னு அடிவயித்துல மல கணக்கா கனக்கும்". அதெல்லாம் அனுபவிச்சுப் பாத்தா தான் தெரியும்.

"என்னடி பெருசா பொம்பள புள்ளய பெத்துட்டன்னு இல்லாத கஷ்ட பெருமயல்லாம் சொல்லி பீத்திக்கிறவ".

பொம்பள புள்ளய பெத்தா பாதி பாரம் தாண்டி. கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டா கடம முடிஞ்சிது. கட்டிட்டு போறவன் பாத்துப்பாண்ணு ராவுக்கு நிம்மதியா தூங்கிறலாம். அதே ஆம்பள புள்ளனா சாகுற வரைக்கும் சொமக்கணும் பாத்துக்க. அவன படிக்க வெச்சி, தொழில் அமச்சிக் கொடுத்து, பொண்ணுப் பாத்து கட்டி வெச்சி அவன் பெத்தெடுக்குற புள்ளங்களுக்கு பீத்துணி கழுவி அதுங்கள வேற வளத்தெடுக்கணும். கண்ணா காக்கணும். எனக்குன்னு என்ன செஞ்சிங்கன்னு கேட்டுடாத அளவுக்கு வெச்சிக்கணும்டி. பின்ன செத்தா கொள்ளிப் போட போறது அந்தப் பையன் தான. கடம முடிஞ்சிருச்சின்னு எப்பொவாவது விட்ற முடியுமா.? அப்புறம் போய் சேர்ந்த பிறகு நெத்திக்காசு வெச்சி, வாய்க்கரிசி போட்டு யாரு கட்டய தூக்கிப் போட்றதாமா.!

"ஓஹோ...நீ அப்டி வர்றீயா.. இந்தக் காலத்துல எந்தப் பையன் பெத்தவங்கள பாத்துக்குறான். எப்படா சாவுங்க செலவுக் கொறயும் எடம் காலியாகும்னு தான் கெடக்காறனுங்க. பெத்தவங்களுக்கு மரியாதெல்லாம் அவங்கச் சொத்து சேத்து வெச்சிருந்தா மட்டும் தாண்டி... பெருசா பேச வந்துட்டா...."

அடியேய்..! ஊருல ஒண்ணு ரண்டு அந்தமாதிரி இருக்கும். அதவெச்சி பேசாத. அதெல்லாம் நாம வளத்துறதுல தான் இருக்கு. எம்புள்ள அப்டிலாம் விட்றமாட்டான் பாத்துக்க.

பாக்குறேண்டியம்மா. பாக்குறேன். உன்ன வெச்சிருக்கானா இல்ல வெரட்டி விட்றானான்னு... "அய்யய்யயோ...! என்னமோ இவளே பத்து மாசம் வகுத்துல சொமந்து பெத்த மாதிரில்ல இந்தாதண்டிக்கி மல்லுக்கட்றா. வளத்த புள்ளக்கே இந்த வாய் பேசுறா. இதுலே இவளே சொமந்து பெத்திருந்தனா அவ்ளதான் போலருகே யப்பா சாமி ..."


அழுதுக் கொண்டே சொல்லி முடித்தது.

சிறிது மௌனத்திற்குப் பின்பு தழுதழுத்தக் குரலில் அதுவே பேசத் தொடங்கியது.

"ஏம்பா ராசா. கடசிக் காலத்துல அத்தய பாத்துப்பல்ல...இல்ல அநாதையா சாகட்டும்னு விற்றுவியா... இந்த ஒலகத்துல இப்போ ஒன்னய மட்டும் தான்யா எனக்குத் தெரியும்... ஒலகமே நீதான்யா.. வயசுக்கு வரதுக்குள்ள பெத்தவங்க இல்லாம போய்ட்டாங்க... புருஷன்னு ஒருத்தன் வந்தான் அவனும் பொழுது விடியறதுக்குள்ள போய்ச் சேந்துட்டான். அவன் மூஞ்சி கூட இப்போ நெனப்புல இல்ல.. கூடப் பொறந்த பொறப்புன்னு சொல்லிக்க உங்கப்பன் இருந்தான். அவனையும் கட்டையில போற காலன் காவு வாங்கிக்கிட்டான். நாளைக்கு நான் போய்ச் சேந்துட்டா குழிக்குள்ளத் தூக்கிப் போட ஒறவுன்னு சொல்லிக்க ஒன்னவிட்ட வேற நாதி இல்ல ராசா."

அத்தைச் சொல்லச் சொல்ல எனக்குக் கண்ணீர் முட்டியது. தொண்டைக் குழிக்குள் இருந்து ஏதோவொன்று கண்ணீர் கயிற்றை இழுத்துப் பிடிப்பது போலிருந்தது. நெஞ்சுக்குள் அடைப்பட்டுக் கிடந்த வார்த்தைகளை ஒலிக்க வைக்கப் பெரிதும் சிரமப்பட வேண்டியிருந்தது .

"ஒன்னய என்னைக்காவது அத்தைன்னு நெனைச்சிருப்பனா. பெத்தவளா தான நெஞ்சில வச்சிருக்கேன். ஓம்மனசு நோகுற மாதிரி இதுவரைக்கும் ஒண்ணாவது பண்ணிருப்பனா இல்ல பேசிருப்பனா..! சொல்லு..? எனக்கு மட்டும் ஒன்னய விட்டா வேற யாரு இருக்கா.? ஒன்னய அநாதையா விட்டுட்டு நான் பாட்டுக்கு எங்கையாவது போய்டுவன்னு நெனச்சியா... மத்தவங்க சொன்னாக் கூட நீ எப்புடி அத நம்புன.. எம்புள்ள என்னய மகாராணி மாதிரி வச்சிக்கிவானு சொல்லிட்டு வரமாட்ட.. ஒண்ணு சொல்றேன் நல்லா கேட்டுக்க. என்னைய பெத்தவ இருந்திருந்தா கூட நான் இந்த அளவுக்கு பாசமா இருந்திருப்பானான்னு தெரில ஆனா ஓம்மேல உசுரையே வச்சிருக்கேன். "

வார்த்தைகள் உடைந்து வலுவிழந்து அவளது கைகளைப் பற்றி அழுதேன்.

முடியைக் கோதியவாறே தலையை நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டு, "என்ன இது. சின்னப்புள்ளயாட்டும் கண்ண சிந்திக்கிட்டு... செரி செரி. கண்ணத் தொடைச்சிக்க. நான் போய் டீ போடுறேன். ஆளுக்கு ஒருவாய் குடிக்கலாம்" என்று சொல்லியவாறு முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு சமயலறைக்குள் சென்றது.

கலங்கிய கண்களைத் துடைத்து விட்டு நிமிர்ந்துப் பார்த்தேன். கூரையோட்டின் இடுக்குகள் வழியாக வீட்டிற்குள் நடப்பதை வேவு பார்த்துக் கொண்டிருந்தது வெயில்.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...