"எல்லாம் நன்றாகப் போகிறது" என்று நம்பிக் கொண்டிருந்தேன். அந்தக் கண்மூடித்தனமான நம்பிக்கையில் எதையுமே நான் உற்றுக் கவனிக்கவில்லை. ஆழ்ந்து யோசிக்கவில்லை. அதனால் நிழலுலகில் கண்மூடித்தனமாகவும் நிஜ வாழ்வில் பார்வையிருந்தும் குருடியாகவுமே வாழ்ந்திருக்கிறேன் - ஏமாந்திருக்கிறேன். கண்களைத் திறக்காமலேயே எதிரிலிருப்பது என்னவொரு ரம்மியமான இயற்கைக் காட்சியென்று பேரானந்தத்தில் குதூகலித்தவாறு திளைத்திருக்கிறேன். அதை அப்படியே ஆழ்மனதிற்கும் கடத்தி அது உருவாக்கி வைத்திருக்கும் மாய சிறைக்குள்ளே சுதந்திர கீதம் பாடிக் கொண்டு சுதந்திர காற்றைச் சுவாசிப்பதாய் நினைத்து எரியூட்டப்பட்ட பிணங்களின் வாடையைச் சுமந்து வரும் சுடுகாட்டுக் காற்றை சுவாசித்துக் கொண்டிருந்திருக்கிறேன். ஆதவனின் வரிகளைப் போல், நம்ப வேண்டியதை விடுத்து நான் நம்ப விரும்புவதை மட்டுமே இத்தனை நாளாய் நம்பிக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது இப்போது தான் என் புத்திக்கு உரைக்கிறது. இதோ எதிரே மேசையில் இருக்கும் அந்த வெள்ளைத் தாள் எனது ஒரேயொரு கையெழுத்தை எதிர்நோக்கிக் காற்றில் சடசடத்துக் கொண்டிருக்கிறது எப்போதோ நான் வாசித்தக் கவிதையை ஞாபகப்படுத...