Skip to main content

அந்தவொரு தருணம்

"தலையில் மல்லிகைப் பூ. கன்னங்களில் ரோஸ் பவுடர். உதட்டில் அடர் நிறத்தில் சாயம். பெரும்பாலும் சிவப்பு அல்லது ரோஸ். கருப்பு நிற ஜாக்கெட். சிவப்புக் கலர் சேலை. கையில் ஒரு ஹேண்ட் பாக்" இந்தக் கோலத்தில் தான் பெரும்பாலும் என்னைப் பார்த்திருப்பீர்களென்று தெரியும்.

என்னைக் கடக்கும் போதெல்லாம் உங்களின் முகபாவனைகளைக் கவனித்திருக்கிறேன். அது பெரும்பாலும் இந்த இரண்டில் எதுவோவொன்றாக தானிருக்கும். ஒன்று சாக்கடையில் மிதக்கும் செத்த எலியைப் பார்ப்பது போன்ற அருவருப்பான பார்வை. இன்னொன்று தெருவினோரத்திலிருக்கும் குப்பைத் தொட்டிக்குப் பக்கத்தில் பசியால் 'மியாவ் மியாவ்' என்றுக் கத்தியிருக்கும் பூனையைப் பார்ப்பது போன்ற "நான் இரக்கமானவன்" எனும் பார்வை.

ஆச்சரியம் என்னவென்றால் இதில் முன்பொரு காலத்தில் என்னுடன் படுத்தவர்களும் உண்டு. யோனியைத் தேடி வந்தவர்களுக்கு முகம் நினைவில் இருக்க நிச்சயமாக வாய்ப்பில்லை ஆனால் அவர்களின் முகங்களை என்னால் சொல்ல முடியும். என்னுடன் படுத்த ஒவ்வொருவரின் முகத்தையும். சதைப் பிண்டமென - கொடூரமாக அழுத்தி - வெறியுடன் மிதித்து - குரல் வளையை நெறித்து பிராண்டிய அவர்தம் நகங்கள் தீட்டிய தடயங்களும் - சிகரெட் சூட்டுத் தழும்புகளும் - பல்லால் கடித்த காயங்களும் அவர்களின் முகத்தை மறக்கவிட்டதில்லை.

இது போதாதென்று உங்களின் வசவுச் சொற்களையும் அவ்வபோது கேட்டிருக்கிறேன்.

"பொழைக்கிறதுக்கு வேற வழித் தெரிலனா செத்துத் தொலைய வேண்டியது தானா. எதுக்கு ஒடம்ப வித்துப் பொழைக்கணும். மூஞ்ச தெரியாதவன் கூடலாம் படுத்து சம்பாரிக்கறது ஒரு பொழப்பா. அதுக்கு நாண்டுக்கிட்டு சாகலாம். குடும்பம் நடத்துற எடத்துல வந்து அசிங்கம் பண்ணிக்கிட்டு. பொம்பளனா மானம் இருக்கணும்"

என்னையோ அல்லது நான் செய்யும் தொழிலையோ நியாயப்படுத்துவதாக நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டாம். ஆனால் இதனை நான் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும்.

உடலை விற்று பிழைக்க வேண்டுமென்பது என் வாழ்நாள் ஆசையோ அல்லது லட்சிய கனவோலாம் இல்லை. எனக்கு மட்டுமல்ல எந்தவொரு பெண்ணுக்கும் அப்படியொரு ஆசை இருக்காது. நான் விபச்சாரியானதற்கான காரணத்தை விடுங்கள். தந்தையே சீரழித்தான் - காதலனென்று சொல்லி ஏமாற்றி கயவனிடம் விற்றுவிட்டான் - அம்மா தான் முதல்முறையாக ஒருவனுடன் படுக்கச் சொன்னாள் என்று ஏகப்பட்டதை நீங்கள் ஏற்கனவே செய்தித்தாள்களில் படித்தறிந்து உங்களது பொது அறிவில் சேமித்து வைத்திருப்பீர்கள். அதில் ஏதோவென்று தான் நான் உடலை விற்பதற்கான காரணமும் கூட என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நான் சொல்ல வந்தது அதையல்ல.

உடலை விற்கும் நிலைக்கு என்னைத் தள்ளியது ஒரு தருணம்.

"ஒரேயொரு தருணம்"

வாழ்வா சாவா என்பதை தீர்மானிக்கும் ஒரு தருணம்.

"எஸ். இட்ஸ் ஜஸ்ட மொமண்ட்".

"பட் நாட் ஈஸி ஆஷ் யூ திங்க்".

அந்தவொரு தருணம் தான் என் வாழ்க்கையையே புரட்டி போட்டது. அதன் இரக்கமற்ற கரங்களினால் உடம்பில் ரத்தம் சொட்ட சொட்ட அடித்து அடியாழத்திற்குத் தள்ளியது. இதயத்தைத் துடிக்க விடாமல் நசுக்கியது.

'நீங்கள் மறுகேள்வி கேட்க வருவது'

"ஒருதடவ சூழ்நில அந்த மாதிரியாருச்சி.. சரி. ஏன் நீ அதவிட்டு வெளிய வந்து வேற வேல செய்யல"

'அது தானே'

புரிகிறது.

அந்தக் கேள்வியை என்னைப் பார்த்துக் கேட்பதற்கு முன்னாள் உங்களை நீங்களே ஒருமுறை கேட்டுக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் இந்தச் சமூகத்தின் கொடூர விலங்கே அதற்குக் காரணம். வாழ்வில் ஒருமுறை கையேந்தி விட்டால் வாழ்நாள் முழுவதும் அவன் பிச்சைக்காரன். ஒருமுறை உடலை விற்றுவிட்டால் சாகும் வரையில் அவள் விபச்சாரி. தன் கூரிய நகங்களினால் முகத்தில் அந்த அழிக்க முடியாத அடையாளத்தை தீட்டி விடுகிறது இச்சமூகம். ஏந்திய ஒரு கையை இறக்க விடாமல் அது பார்த்துக் கொள்கிறது. உடலை விற்றவளின் உடலில் விளம்பர அட்டையை நிரந்தரமாக பதித்து விடுகிறது.

உடலை எரித்தால் தான் அது எரியும்.

இந்த பாதாளத்தில் இருந்து நான் மீண்டுவர முயன்ற போதெல்லாம் மனித தலைக் கொண்ட கொழுத்த மாமிச பாம்புகள் என் தொடைகளின் இடுக்கில் நாக்கை நீட்டி தன் உடலினால் என் கால்களை இறுகப் பிணைத்துக் கொண்டன. காப்பாற்றுவதற்காய் மேலே நின்றுக் கொண்டிருந்தவர்களின் கரங்களை பிடித்து வெளியே வர முயற்சித்த போதோ, அவர்கள் மற்றொரு கரத்தில் தங்களின் குறியை வெளியே எடுத்து நீவியவாறு புன்னகைத்து நின்றிருந்தனர்.

நீங்கள் சொன்னது போல எனக்கும் சிலசமயம் செத்து விடலாம் போலிருக்கும். ஆனால் நான் ஏன் சாக வேண்டும். எனக்கு வாழவேண்டி ஆசையாய் இருக்கிறது.

ஒன்றே ஒன்று கடைசியாக...

"யோனியைத் தேடியலையும் யோக்கியவான்களே. சுய ஒழுக்கத்தை - குடும்ப கௌரவத்தைத் தன் யோனிக்குள் அடைக் காத்திருக்கும் குத்துவிளக்குகளே"

நான் விபச்சாரி ஆனதற்கும் - இன்னும் விபச்சாரியாகவே இருப்பதற்கும் - நீங்கள் விபச்சாரி ஆகாமல் இருப்பதற்கும் காரணம் அந்தவொரு தருணம் மட்டுமே.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...