Skip to main content

அம்மாவின் காதலன்

காலையில் இருந்து பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள் அம்மா. வெகுநாட்களுக்குப் பிறகு வாசலில் பெரிய ரங்கோலி கோலமாகப் போட்டு, அமர்க்களமாக கலர் பொடிகள் தூவி மத்தியில் சாணியை பிள்ளையாராக மாற்றி அமர வைத்திருந்தாள். தலைக்கு குளித்து ஈரத்தை முழுவதும் துவட்டாமல் துண்டுடன் சேர்த்துக் கூந்தலைச் சுற்றிக் கொண்டை போட்டிருந்தவள்,இத்தனை நாளாய் ஒளித்து வைத்திருந்த ஏதோவொரு அழகை இன்று அனிச்சையாக அள்ளித் தெளித்தாள். நிரந்தரமாக பதிந்துவிட்ட அந்தக் கருவளையத்தை மறைத்துக் காட்ட பெரும் சிரமப்பட்டிருப்பாள் போலிருக்கிறது. பெரும் வெற்றிக் கிட்டிருக்கிறது. மஞ்சள் பூசிய முகத்தில் முன்னெப்போதும் கண்டிராத குதூகலமும், பிரகாசமும் பொங்கி வழிந்தன.

தேங்காய் சில்லுகள் மிதக்கும் வெண்டக்காய் புளிக் குழம்பு, முட்டைகோஸ் கூட்டு, அவரைக்காய் பொரியல், கத்திரிக்கா முறங்கா சாம்பார், ரசம், அப்பளம் என சமையற்கட்டில் இருந்து மிதந்து வந்த வாசம் வீடு முழுவதும் பரவி தூசி துரும்பென யாவற்றுக்கும் வந்தனம் சொல்லியது.

"இன்னைக்கு ஏதாவது விஷேசமா மா"

'இல்லடா கிருஷ்ணா'

"அமாவாசை பௌர்ணமி ஏதாவது"

'அதெல்லாம் ஒண்ணுமில்லடா'

அப்றம் என்ன சமையல்லாம் தடபுடலா இருக்கு.? கிருஷ்ணா கேட்டான்.

....

....

பதில் சொல்லாமல் வேறேதோ சிந்தனையில் இருந்தாள். ஆனால் அவளுக்கே தெரியாமல் முகத்தில் புன்சிரிப்பு பூத்தவாறிருந்தது. ஒருவேளை அது வெட்கமாகக் கூட இருக்கலாம்.

ராமாபுரம் ராஜா மாமா. குட்ட பாவாடை போட்ட காலத்தில் இருந்தே அவளுக்குத் தெரியும். கட்டுமஸ்தானவன் என்றுச் சொல்ல முடியாது. அதற்காக அழகில்லாதவன் என்றும் அர்த்தமாகிவிடாது. எட்டாம் வகுப்பிலிருந்து ஒரே பள்ளிக்கூடம். எப்போதும் வெறுப்பேற்றிக் கொண்டே இருக்கும் அவனைப் பார்த்தால் ஆரம்பத்தில் கோவம் கோவமாய் வரும். நாலு வார்த்தை நறுக்கென்று கேக்க வேண்டும் போலிருக்கும். இருந்தாலும் பின்னாலேயே சுற்றிச் சுற்றி வருவது ஒருமாதிரி சுகமாய் இருப்பதால் சிவந்த முகத்தை மட்டும் அவனுக்குக் காட்டிவிட்டு திரும்பியவுடன் வெட்கம் ததும்பும் முகத்திலிருந்து புன்னகையை வழிய விடுவாள். திரும்பிய முகத்திலிருந்து வழியும் வெட்கத்தை அவனும் அறிந்தே வைத்திருந்தான். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் சமயம், காலையில் பள்ளிக்கூடத்துக்கு நடந்துச் சென்றுக் கொண்டிருந்த போது சைக்கிளில் வேகமாக இடிப்பது போல வந்த அவன், "ஏய்.. பொண்டாட்டி.. ஓரமா போடி" என்று சத்தமாகக் கத்திச் சொல்லிவிட்டு வந்த வேகத்தில் 'கிளிங் கிளிங்' சைக்கிள் பெல் அடித்து போய்விட்டான். பக்கத்தில், எதிரில் நடந்து வந்துக் கொண்டிருந்த பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளெல்லாம் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவமானத்தில் அவளுக்கு அழுகைப் பெருக்கெடுத்தது. பள்ளிக்கூடத்துக்குப் போகாமல் வீட்டிற்கே திரும்பி வந்துவிட்டாள்.

"என்னது.. நான் அவனுக்குப் பொண்டாட்டியா. அவன் எனக்கு புருஷனா. முடியவே முடியாது. அவங்கூடெல்லாம் மனுசி வாழ முடியுமா. திமிரு புடிச்சவன்." புலம்பித் தீர்த்தாள். மனசுக் கிடத்து துடித்தது. இருந்தாலும் வீட்டில் அதைப் பற்றி வாயே திறக்கவில்லை.

அன்றைய ராஜ இரவில் ராஜ கனவுகளாக வந்தன. கனவில் அவள் அவனுக்குப் பொண்டாட்டியாக இருந்தாள்.

ராஜ புருஷா.. ராட்சஸா.. அவனைக் கொஞ்சினாள். அவன் முத்தமிட்டான். அன்றைய புலரியின் சாட்சியாக அவள் மனதில் முழுவதுமாக அவன் குடியேறியிருந்தான்.

'ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்'

குக்கர் விசில் அடித்து கடந்த காலத்தில் இருந்து ஆவி போல வெளியே வந்தாள் அம்மா.

"அம்மா.. சொல்லும்மா..." கிருஷ்ணா விட்டபாடில்லை.

சிறிது மௌனத்திற்குப் பிறகு,

"நம்ம ராமாபுரம் ராஜா சித்தப்பா இருக்காங்கல. அவங்க பெரிய பொண்ணுக்கு - அதான் ராதா அக்காக்கு - கல்யாணம் முடிவாயிருக்கு. அடுத்த மாசம் பதினஞ்சாம் தேதி குன்றத்தூர்ல கல்யாணம். அதுக்கு பத்திரிக்க வச்சு அழைக்க அவங்க இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வராங்க. அதான் விருந்துக்கு சமைச்சிட்டு இருக்கேன்"

"ஓ.! அப்படியா.. ராதா அக்காக்குக் கல்யாணமா" சிரித்த முகத்தில் பதில் கிடைத்த திருப்தியுடன் சமயலறையில் இருந்து கிளம்பினான் கிருஷ்ணா.

அடுப்பை நிறுத்திவிட்டு முகத்தில் உயிர்த்திருந்த வியர்வைத் துளிகளை முந்தானையால் துடைத்தெறிந்தாள் அழுத்தமாக அப்பியிருந்த கடந்த காலச் சுவடுகளையும் சேர்த்து...

ஏனோ நெஞ்சினில் இன்னமும் குமைந்துக் கொண்டிருக்கும் அந்தப் பால்யகால காதலை அவள் கிருஷ்ணாவிடம் சொல்லவில்லை.

ராஜா மாமா இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவார்.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...