Skip to main content

Posts

Showing posts from March, 2022
அம்மா தான் முதன்முதலில் சொன்னாள் "ஆம்பள பையன் அழக் கூடாது" கணக்கு வரவில்லையென டியூசன் டீச்சர் கண்டபடி திட்டியதில் தேம்பித் தேம்பி அழுத போது தங்கச்சி கண்டித்தாள் "பையனா பொறந்துட்டு அழுவாத அசிங்கம்" தொடர் வீட்டுப் பிரச்சினைகளினால் கசந்த பொழுதொன்றில் மனைவி அவமதித்தாள் "நீயெல்லாம் ஒரு ஆம்பளையா கண்ண கசக்கிட்டு ஒக்காந்திருக்க" ஒரே ஒரு ஆசை தான் அழுது தீர்க்க வேண்டும் அருவருக்கவோ ஆறுதலுக்கோ  அருகில் யாருமில்லாமல் அழ வேண்டும் மொத்த பிரபஞ்சமும் கண்ணீரில்  நனைய அழ வேண்டும் நானே மூழ்கிடும் வரை அழ வேண்டும் குறியும் மீசையும் அழுகிடும் வரை அழ வேண்டும் அன்றைய நாள் உளமார சிரிப்பேன் அழுதுகொண்டே
மஞ்சள் வெயிலில் தொப்பலாய் நனைந்து ஒளிக் கீற்றுகள்  சொட்டு சொட்டாய் சொட்டிக் கொண்டிருக்கும் பசுமையான வெளியில் மனம் கரை(மறை)ய நின்றிருந்தேன் பக் பக் பக் மெல்லொலியுடன் வெண்ணிற வாத்து ஒன்று அருகில் வந்து முறைத்தது முகமன் கூறினேன் 'இங்கு உனக்கென்ன வேலை' வாத்து கேட்டது அனுபவிக்க வந்தேன் எதை? உன்னை மஞ்சள் வெயிலை மோனம் உறைந்த இந்த பசுமையான வெளியை முகம் மலர்ந்த வாத்து தன்னிலை வழுவாமல் பாயும் நீரோடையைக் காட்டியது குளத்தில் நீச்சலடிக்கும் பறவையைக் காட்டியது முடிவில்லா எல்லையில் சாந்தமே‌ எல்லாமுமாய்  அமர்ந்திருக்கும் பல்லடுக்கு மலையைக் கதிரவனின் கெஸ்ட் ஹவுஸ் எனக் காட்டியது இலைகளின் சரச ஒலியை  இனிய சுவரங்களெனச்  செவிகளில் ஊட்டியது குட்டி யானையின் மேல் பல வண்ண தட்டான்களைக் காட்டியதும்  யாரோ ஒருவர் வீசி உடைந்த பீர் பொத்தலில் குத்தி   உயிர்விட்ட கூரலகு பறவையின்  சிதறிக் கிடக்கும் குருதித் தடத்தில் நின்று தான்  இவற்றையெல்லாம் ரசித்துக் கொண்டிருக்கிறாய்  சொல்லிவிட்டுச் சட்டென்று மறைந்தது   வாத்து    பாதத்தில் ஒட்டிக் கொண்ட பறவையின்...
ஒரு வார்த்தையில் என்ன இருக்கிறது? ஒரு வார்த்தையில் தான் எல்லாம் இருந்தது நானும் இருந்தேன் நீயும் இருந்தாய்!
சுருக்கு பை அளவுக்குச் சுருங்கிவிட்டது தூரமெல்லாம் உலகில் எந்த மூலையிலிருந்தால் என்ன தொழில்நுட்பத்தின் கரம் பற்றி முகத்துக்கு முகம் நோக்கி நினைத்த மாத்திரத்தில் கதைக்கலாம் என்கிறாய் எனக்கிருப்பது ஒரே சந்தேகம் தொடுதிரையில் முத்தமிட்டால் நின் நெற்றியில் ஈரம் படிந்திடுமா?

யாரவள்

அவள் யாரென்று கேட்பவர்களுக்கு என்னவென்று சொல்வது எழுதி முடிப்பதற்குள்  நினைவிலிருந்து அகன்ற  கவிதை 
துயர மசி  நிரம்பிய எழுதுகோலினால்  ரோஜாவிலும்  இழவு வாசம்
கருவறையிலிருந்தது நினைவில்லை கல்லறையில் இருக்கப் போவது பற்றி போதிய புரிதலில்லை இருக்கும் இடத்தில் இருளையும் புழுக்கத்தையும் நிறைத்துக் கொள்கிறேன் வாழ்வையும் மரணத்தையும் ஒருசேரத் தழுவிய படி

நிராதரவு

நாளைக்குப் பயணம் மறுபடியும் பார்க்க இயலுமோ இயலாதோ இதுவரையில் சொல்ல நினைத்துத் தவிர்த்ததையெல்லாம் அடை மழையாய் கொட்டித் தீர்த்திருக்கிறாள் கடிதத்தில் இருபது வருடத் தவிப்பை இரண்டு பக்கங்களில் இளைப்பாற முயலும் கூச்சமற்ற அழுகையின் விசும்பல் ஒரே மூச்சில் படித்துவிட முடியுமென்னால் ஆனால் நிறுத்தி நிறுத்தி அனுபவிக்கிறேன் காதலின் பெருஞ்சுகத்தை வழிந்தோடும்‌ கண்ணீரினூடே எத்தகைய உறவு எவ்வளவு காதல் எல்லாவற்றையும் பொய்யாயேனும் கடக்கக் காலத்திற்கும் ஓர் கடிதம் போதுமானதா நிராதவரான காதல் அநாதையாய் புரள்கிறது காற்றில் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் நேற்றே கிளம்பிவிட்டாள் அவள்

ஒரு கவிதை என்ன செய்துவிடும்

ஒரு கவிதை என்ன செய்துவிடும் நொடி நேரத்தில் காலங்காலமாய் சுமந்து திரிந்த வெத்து பிம்பங்களைச் சுக்கு நூறாக்கி சுயத்தை நிர்வாணமாக்கும் கர்வத்தின் கூடாரத்தைச் சம்மட்டி அடியாய் வீழ்த்தும் ஆதிக்கத்தின் கொடுங்கோலைக் கட்டெறும்பு கடியால் அசைத்துப் பார்க்கும் உலகத்தில் இல்லை உயிர்களில் புது உலகம் பிறக்கும் புதிர் விளங்கும் குழந்தைமை முதுமை வாலிப பருவங்களைக் கைகோர்த்து ஒன்றாய் நடை பழக்கும் சமயங்களில் தற்கொலை எண்ணத்திலிருந்தும் காக்கும் கேளாத மனதின் குரலுக்குச் சோராமல் செவி சாய்த்து ம் கொட்டும் குறைந்தபட்சம் வாழ்வதற்கு ஒரு காரணத்தைத் தரும்

நகல்

வேரை  விஞ்சி நிற்கும் கனி கடலை விஞ்சி நிற்கும் அலை நிஜத்தை விஞ்சி நிற்கும் நகல் படைப்பை விஞ்சி நிற்கும் படைப்பாளி

நினைவூட்டல்

என் மரணத்தைப்‌ பற்றி  யோசித்ததே இல்லை இதுவரை மதியம் நெருங்கிய நண்பனொருவன் இறந்துவிட்டான் சீக்கிரம் போய்விட்டான் என சக நண்பர்கள் அழுகிறார்கள் புலம்புகிறார்கள் சபிக்கிறார்கள் இல்லாதவொன்றை ஆனால் நண்பனின் மரணச் செய்தியில் ஓர் குறிப்பு இருந்ததை யாருமே கவனிக்கவில்லை தத்தம் மரணத்திற்கான நினைவூட்டல் அது ராகவி