மஞ்சள் வெயிலில்
தொப்பலாய் நனைந்து ஒளிக் கீற்றுகள்
சொட்டு சொட்டாய் சொட்டிக் கொண்டிருக்கும் பசுமையான வெளியில்
மனம் கரை(மறை)ய நின்றிருந்தேன்
பக் பக் பக் மெல்லொலியுடன்
வெண்ணிற வாத்து ஒன்று
அருகில் வந்து முறைத்தது
முகமன் கூறினேன்
'இங்கு உனக்கென்ன வேலை' வாத்து கேட்டது
அனுபவிக்க வந்தேன்
எதை?
உன்னை
மஞ்சள் வெயிலை
மோனம் உறைந்த இந்த பசுமையான வெளியை
முகம் மலர்ந்த வாத்து
தன்னிலை வழுவாமல் பாயும்
நீரோடையைக் காட்டியது
குளத்தில் நீச்சலடிக்கும் பறவையைக் காட்டியது
முடிவில்லா எல்லையில் சாந்தமே எல்லாமுமாய்
அமர்ந்திருக்கும் பல்லடுக்கு மலையைக்
கதிரவனின் கெஸ்ட் ஹவுஸ் எனக் காட்டியது
இலைகளின் சரச ஒலியை
இனிய சுவரங்களெனச்
செவிகளில் ஊட்டியது
குட்டி யானையின் மேல்
பல வண்ண தட்டான்களைக்
காட்டியதும்
யாரோ ஒருவர் வீசி
உடைந்த பீர் பொத்தலில் குத்தி
உயிர்விட்ட கூரலகு பறவையின்
சிதறிக் கிடக்கும் குருதித் தடத்தில் நின்று தான்
இவற்றையெல்லாம் ரசித்துக் கொண்டிருக்கிறாய்
சொல்லிவிட்டுச் சட்டென்று மறைந்தது
வாத்து
பாதத்தில் ஒட்டிக் கொண்ட பறவையின்
குருதி கறை உடலெங்கும்
பரவியது
பசும்வெளி தொலைந்து
பாலைவனத்தில் நின்றிருந்தேன்
மஞ்சள் வெயில் எரித்துக் கொண்டிருந்தது
Comments
Post a Comment