அம்மா தான் முதன்முதலில் சொன்னாள்
"ஆம்பள பையன் அழக் கூடாது"
கணக்கு வரவில்லையென
டியூசன் டீச்சர் கண்டபடி திட்டியதில்
தேம்பித் தேம்பி அழுத போது
தங்கச்சி கண்டித்தாள்
"பையனா பொறந்துட்டு அழுவாத அசிங்கம்"
தொடர் வீட்டுப் பிரச்சினைகளினால்
கசந்த பொழுதொன்றில்
மனைவி அவமதித்தாள்
"நீயெல்லாம் ஒரு ஆம்பளையா
கண்ண கசக்கிட்டு ஒக்காந்திருக்க"
ஒரே ஒரு ஆசை தான்
அழுது தீர்க்க வேண்டும்
அருவருக்கவோ
ஆறுதலுக்கோ
அருகில் யாருமில்லாமல் அழ வேண்டும்
மொத்த பிரபஞ்சமும் கண்ணீரில்
நனைய அழ வேண்டும்
நானே மூழ்கிடும் வரை
அழ வேண்டும்
குறியும் மீசையும் அழுகிடும் வரை
அழ வேண்டும்
அன்றைய நாள் உளமார சிரிப்பேன்
அழுதுகொண்டே
Comments
Post a Comment