ஆழமானவொன்றைத் தேடி அருகிலிருந்ததைத் தொலைத்துவிட்டேன் மனம் தவிர்த்து யாவும் அழுகி சீழ் வடியும் கட்டத்தில் காலம் கனிந்திருக்கிறது அருகிலிருந்ததன் ஆழம் அறிய
அழுது தீர்த்துவிட்டேன் சொற்கள் தேயுமளவு புலம்பிவிட்டேன் மனமின்னும் மீளவில்லை மரணப் படுக்கையில் உயிரைச் சீராக வெளியேற்றும் சுகமற்ற ஜீவனாய் பேயறைந்து நின்றிருந்தேன் ஆறுதல் சொல்லவோ அரவணைக்கவோ ஆட்கள் இருந்தனர் ஆனால் முகங்களில்லை அவர்களுக்கு கண்முன்னே உயிர் கசிய இறந்து கொண்டிருந்தது நானல்ல மனிதமும் அவர்களும் தான்
திருச்சிற்றம்பலத்தைப் போலத் துரித நேரத்தில் உருவானதில்லை ஷோபனாவின் அன்பு நெடுங்கால பாசி போலக் கண்டுணரப் படாமல் கூடவே படர்ந்து கிடந்தது மழலையின் கரங்களில் அகப்பட்ட விலையுயர்ந்த பொருள் போன்றது அது இருப்பினும் ஷோபனாவின் அன்பை உணர்ந்து கொள்ள தன் அன்பை துட்சமென கருதும் ஓர் உறவில் வீழ்ந்து நோக வேண்டியிருக்கிறது என்னவாயினும் ஒரு கட்டத்தில் தன்னைத் தேடித் திரும்பி வரும் அன்பை ஷோபனா வீம்புக்கேனும் வெறுத்து ஒதுக்குவதில்லை யாராலும் புரிந்து கொள்ளக்கூடிய ஆனால் எல்லோராலும் விளங்கிக்க முடியாத அன்பு ஷோபனாவின் பலவீனமல்ல தூய அன்பின் பலவீனம்
நிலமும் மழையும் மத்தளம் கொட்டி ஆர்ப்பரிக்கின்றன பெரும் பண்டிகைக்கான உற்சாகத்தில் மஞ்சள் குளித்து தயாராகிறது மாநகரம் சோர்ந்து போன சோலையில் புதிதாய் ஓர் வாசனை சுதந்திர உலகின் புது அத்தியாயம் எழுதிட வேர்களின் சாயலில் மலரொன்று பூத்திருக்கிறது