Skip to main content

Posts

Showing posts from May, 2023

காணாமல் போன ஐந்து நாட்கள்

செவ்வாய் இரவு உறங்கச் சென்று ஞாயிறு மதியம் விழித்திருக்கிறேன் இடையில் பகல் வந்ததா இரவு விடிந்ததா  அறியேன் உண்ணாத உணவுக்கும் உளறல் பேச்சுக்கும் புரியாத மருத்துவ அறிக்கைகளும் விழுங்கிடாத  மில்லி கிராம் நரகமுமான    மாத்திரைகளே  சாட்சியங்கள்  நினைவூட்டவோ நினைவகற்றவோ நிலையுணர்த்தவோ  வலியுறுத்தவோ வற்புறுத்தவோ எதன் பொருட்டு வந்ததோ? பால்கனி தொட்டிச் செடியில் முளைத்த டேபிள் ரோஸ் இரண்டு சாம்பல்  ஒரு கருப்பு நிற குட்டியை  ஈன்ற தாய்ப் பூனை உக்கிரம் குறைந்த வெயில்  பைனலுக்கு முன்னேறிய கிரிக்கெட் அணி  நன்றாகத் தான் இருந்திருக்கின்றன நான் இல்லாமல் இருந்த நாட்கள்  வீட்டின் முற்றத்தில் செத்துப் போன கரைப்பான் பூச்சி தலைக்குப்புற கிடக்கிறது

தேடிச் செல்

பறவையானது பஞ்சத்தின் நிமித்தம்  பொத்தி பொத்தி பாதுகாத்த தானியங்களை இருப்பு விகிதம் குறைவது புலனாகாதவாறு சாமர்த்தியமாகக்‌ களவாடும்  சிறு எறும்பு கூட்டம்‌ போல் சேமித்த நினைவுகள்  துலக்கமிழந்து   மெல்ல மெல்லக் காலாவதியாகின்றன வயிற்றுக் கோளாறால் அவதிப்படும்  வயோதிகன் பயன்படுத்திய  பழைய கழிவறையைப் போன்றதாகிவிட்ட நினைவுகளில்   நிகழ்பவையும்  சீராகப் பதியாமல்  குமைகின்றன  மூப்போ  வளர்ந்தெழும் பற்றற்ற போக்கோ  என்னைத் தொலைத்துவிட்டு  வேறெதையோ  தேடச் சொல்கிறது

புதிதாய் வேறொன்றுமில்லை

புதிதாய் ஒன்றுமில்லை வறண்டு காய்ந்த மனசில்   அடர்ந்த செழிப்பின் பால் தினந்தினம் பூக்கும் அன்பு மலர்கள்  மனம் நிறைந்து வழிந்திட ஒரு காதல் அரும்பியிருக்கிறது சுருங்கச் சொன்னால்  இலையைப் போல் சுய கனமற்று பெரு மரத்தின் பாரம் சுமக்கிறேன் இருத்தலில்  நம்பிக்கை பிறந்திருக்கிறது புதிதாய் வேறொன்றுமில்லை 
'நல்வரவு'  பலகையுடன் பளபளவென மின்னிடும் புதிதாய் கட்டப்பட்ட  தனியார் மருத்துவமனைக்கு நன்கு அலங்கரிக்கப்பட்ட நவீன இடுகாட்டின் சாயல்
கனவு கண்ட காதலனின் உருவத்திற்குள் கச்சிதமாகப் பொருத்தப் பார்க்கிறாள் நானோ  நிரந்தர உருவமற்றவன் அருவத்தின்‌ போதி நிழலில் தவம் கிடப்பவன்‌  அன்பைத் திரித்து  கருணையின் சிலுவையில் சாத்துகிறாள் தூக்கிச் சுமக்கவும் வலுவில்லை தூர எறியவும் மனமில்லை மெசியாவின்  காயங்களில் வழிகிறது  என் குருதி

அறம்

சிறுத்தையும் மானும் முத்தமிட்டு ஆரத் தழுவிடும் புகைப்படமொன்று அபூர்வ காட்சியெனப் பகிரப்பட்டிருந்தது சட்டெனக்  குடிநீர்த் தொட்டியில்  நரகலைக் கலந்த வன்மம் நினைவில் வருகிறது  மிருகமாய் இருத்தலில்  விடுபடும் மிருகம் மனிதனாய் இருக்க முடிந்திடாத மனிதனுக்குச் சொல்லும்  பேருண்மை அறம்

உன் வருகைக்காகவே

சமீபத்தில் ஒலிக்கிறது நமக்கான பிரார்த்தனை கீதம்  அருகில் வந்துவிட்டாய் போலும் தழும்புகளில் குருதி வழியக் காயங்கள் மீண்டும் மினுக்கின்றன  வீசும் தென்றலின் சொஸ்தப்படுத்தும் நேசம்  நாளங்களில் விரவுகிறது முகங்கள் பார்த்திடும் முன் பதித்த பூவிதழ் முத்தங்கள்  கோடையின் பனிக்கால ரோஜாவாகிட அடுத்த சந்திப்பு வரைக்குமான  புது காயங்களைக் கைவசம் வைத்திருப்பாயென்று அறிவேன் இந்த முறையாவது மறு சாத்தியத்திற்கான  சிறு எதிர்பார்ப்பைக் கூட  உண்டாக்கி சென்றுவிடாதே  மற்றபடி  உன் வருகைக்காகவே காத்திருக்கிறேன்!