அறுபது வருடத்துக்கும் கூடுதலாக ஓய்வின்றி ஓடியாடி உழைத்த ஓர் உடல், இன்று தன் ஜீவனை இழந்து வீட்டின் மத்தியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கிறது. கொஞ்ச நஞ்ச உழைப்பா.? செருப்பை மறந்த கால்கள் வீங்கிப் போய் தன் அசல் அமைப்பையே தொலைத்திருந்தன. சேர்ந்தாற்போல இரண்டு நாட்கள் மனுஷன் வீட்டில் தங்கிப் பார்த்ததில்லை. 'காய்ச்சல் தலைவலி' என்று ஒரு தடவையேனும் மருத்துவமனைக்குச் சென்றதாக நினைவில் இல்லை. எந்த நோயாக இருந்தாலும், "அம்மா வைத்து தரும் ஒரு டீ போதும். உடம்பை விட்டு தலைத்தெறிக்க ஓடிவிடும்' என்பார் சிரித்துக் கொண்டே. ' குருகிய கால இலக்கு, வாழ்நாள் இலக்கு' என்று இலக்கைத் திடமாக நிர்ணயித்துக் கொண்டு அதை நோக்கி சளைக்காமல் உழைப்பதையும், பிள்ளைகளுக்கு ஊக்கமளித்து உற்சாகமூட்டுவதையும் உங்களிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன். ஏன் சிலசமயம் பொண்டாட்டியை எப்படி நடத்தக் கூடாது என்பதையும் கூட உங்களிடமிருந்து தானே கற்றுக் கொண்டேன். 'சொந்தபந்தம் விதிக்கும் நிர்பந்தங்கள், ஊர் உலகம் பேசும் நாலு வார்த்தைகளைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் ஸ்திரமாக காட்டாற்று வெள்ளம் போன்ற உங்களுடையச் செய...