Skip to main content

அப்பா இறந்துவிட்டார்

அறுபது வருடத்துக்கும் கூடுதலாக ஓய்வின்றி ஓடியாடி உழைத்த ஓர் உடல், இன்று தன் ஜீவனை இழந்து வீட்டின் மத்தியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கிறது. கொஞ்ச நஞ்ச உழைப்பா.? செருப்பை மறந்த கால்கள் வீங்கிப் போய் தன் அசல் அமைப்பையே தொலைத்திருந்தன. சேர்ந்தாற்போல இரண்டு நாட்கள் மனுஷன் வீட்டில் தங்கிப் பார்த்ததில்லை. 'காய்ச்சல் தலைவலி' என்று ஒரு தடவையேனும் மருத்துவமனைக்குச் சென்றதாக நினைவில் இல்லை. எந்த நோயாக இருந்தாலும், "அம்மா வைத்து தரும் ஒரு டீ போதும். உடம்பை விட்டு தலைத்தெறிக்க ஓடிவிடும்' என்பார் சிரித்துக் கொண்டே. '

குருகிய கால இலக்கு, வாழ்நாள் இலக்கு' என்று இலக்கைத் திடமாக நிர்ணயித்துக் கொண்டு அதை நோக்கி சளைக்காமல் உழைப்பதையும், பிள்ளைகளுக்கு ஊக்கமளித்து உற்சாகமூட்டுவதையும் உங்களிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன். ஏன் சிலசமயம் பொண்டாட்டியை எப்படி நடத்தக் கூடாது என்பதையும் கூட உங்களிடமிருந்து தானே கற்றுக் கொண்டேன். 'சொந்தபந்தம் விதிக்கும் நிர்பந்தங்கள், ஊர் உலகம் பேசும் நாலு வார்த்தைகளைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் ஸ்திரமாக காட்டாற்று வெள்ளம் போன்ற உங்களுடையச் செயல்பாடுகளை நீங்கள் இல்லாமல் என்னால் எதிர்கொள்ள முடியுமா.?

"முதல்முறையாக மிச்ச வாழ்க்கையை நினைத்துப் பயமாக இருக்கின்றது"

"அமுதனின் நெஞ்சுக்குள் துக்கம் அடைத்தது. மூச்சு முட்டுவது போல் இருந்தது." அப்பா இல்லாமல் இனி வாழ்க்கையை எப்படி அதன் வழிச் செலுத்துவது.?

"அதோ.. உங்கள் கோபக்கார மனைவி. கதறியழுகிறாள். இவள் இப்படி கதறியழுது நான் பார்த்ததேயில்லை. நீங்களும் பார்த்திருக்கமாட்டீர்கள் என்று தான் நினைக்கிறேன். தங்களைப் பற்றிய மொத்த நினைவுகளையும் இன்றே கண்ணீரில் கரைத்துவிட முயல்கிறாள் போலிருக்கிறது. பாவம்.. அவளால் அது முடியுமா.?

ஒவ்வொரு மாதக் கடைசியிலும், "வங்கியில் வைத்திருக்கும் பணத்தை விட, வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது" என செல்லமாக உங்கள் கன்னத்தில் இடிப்பாளே.! நீங்கள் கூட பொய்க் கோபம் காட்டுவீர்களே.!". இனி அந்த புத்தக அலமாரியைப் பார்க்கும் போதெல்லாம் உங்களை நினைத்து உடைந்து போவாளே..! என்னச் சொல்லி அவளைத் தேற்றுவேன்.?

உங்களின் செல்ல மகள். கால்மாட்டிலேயே பித்துப் பிடித்தது போல் அமர்ந்திருக்கிறாள். எனக்குத் தெரியும். உங்களுக்கு என்னைவிட அவளின் மீது பாசம் அதிகம். உங்களின் அம்மா (என் பாட்டி)இறந்த பிறகு இவளை அம்மா என்று அழைப்பதைப் பழக்கமாக்கிக் கொண்டீர்கள். என்னப் பிரச்னையென்றாலும் அவளை நீங்கள் கடித்துக் கொண்டதில்லை. 'ஒருவனைக் காதலிருக்கிறேன்' என திடீரென்று ஒருநாள் அவள் வந்து நின்ற போதும் கூட பதற்றப்படாமல், கோபப்படாமல் அவளின் நெற்றியில் முத்தமிட்டு புன்னைகையில் சம்மதம் தெரிவித்தீர்கள்.
அந்தக் காட்சி இப்பொழும் கண்ணீரின் ஒளிச் சிதறல்களில் எனக்குத் தெரிகிறது.

அப்பா... பக்கத்தில் இருந்தாலும் தூரத்தில் இருந்தாலும் எப்போதும் நான் உங்களைக் கூர்ந்துக் கவனித்திருக்கிறேன். உங்களின் நிரந்தர உடையான, காலர் முழுதும் அழுக்கான வெள்ளைச் சட்டையையும், ஓரத்தில் கிழிந்திருக்கும் நீலநிற கட்டம் போட்ட வெள்ளை லுங்கிகயையும் நினைவிலிருந்து எப்படி என்னால் அகற்ற இயலும். அதே போல நீங்களும், உங்களின் குழிலென்ஸ் கண்ணாடி பார்வையின் எல்லைக்குள்ளேயே என்னை எப்போதும் காத்திருந்தீர்கள் என்பதை உணர்ந்தே இருந்திருக்கேன்.

நிறமற்ற ஆனால் பல நினைவுகளைச் சுமந்துக் கொண்டு வழிந்தோடும் கனமான மௌன கண்ணீரைத் துடைத்துக் கொண்டான் அமுதன்.

அவன் உள்ளத்தில் மற்றுமொரு உணர்ச்சி உறைந்தோடியது. "இனி நான் யாருக்கும் கட்டுப்பட்டவன் அல்ல.என்னைக் கண்காணிக்க இனி இவ்வுலகில் யாருமில்லை. என் சிந்தனைகளை யாரிடமும் சொல்லி பரிசீலிக்க வேண்டிய அவசியம் இல்லை. எவருடைய முடிவுக்காகவும் நான் காத்திருக்க வேண்டிய தேவையும் இனி இருக்காது. என்னைச் சார்ந்திருப்பதாக அல்லது நான் சார்ந்திருப்பதாக கருதிய ஓர் உயிரும் இன்றோடு இல்லை. இவ்வளவு நாள் வாழ்வது போல வாழ்ந்துக் கொண்டிருந்தேன். இனிமேல் தான் நான் என் உண்மையான வாழ்க்கையை வாழத் தொடங்கப் போகிறேன். இவ்வளவு நாள் மனதின் ஏதோவொரு ஓரத்தில் அரித்துக் கொண்டிருந்த குற்றவுணர்ச்சி இல்லாமல் இனி வாழலாம். ஆம்.. என் வாழ்க்கையை, எனக்கே எனக்கான என் வாழ்க்கையை நான் வாழப் போகிறேன்".

"அமுதன் திகைத்தான். இதென்ன விபரீத உணர்ச்சி." இத்தனை நாளாய் அப்பாவின் இறப்பில் மூலம் நான் ஒரு சுதந்திரத்தை எதிர்பார்த்திருந்தேனா.? அமுதனின் உடம்பெல்லாம் நடுங்கியது. இதே உணர்ச்சி முன்பொரு சமயம் ஏதோ ஒரு புத்தகம் வாசிக்கும் போது இருந்தது. இது அதன் நீட்சியை போலிருந்தது.

நானா இவ்வாறு நினைக்கிறன்..! அமுதனின் இதயத் துடிப்பு வெளியில் கேட்கும் பறை இசையுடன் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தது. வியர்த்துக் கொட்டியது. கண்ணீரின் உப்பும், வியர்வையின் உப்பும் ஒன்றோடொன்று கலந்தன.

கண்களை அகலத் திறந்து பனிக்கட்டியைப் போல அமைதியாய் உறைந்து நின்றான் அமுதன். இமைகளின் கடைசி இலையில் கண்ணீர்த் துளியொன்று விழாமல் தொங்கிக் கொண்டிருந்தது.

"பொணத்தத் தூக்கப் போறோம். முகத்த பாக்கறவங்கலாம் கடைசியா ஒருதடவ பாத்துக்கோங்க..." உரத்த குரலொன்று அமுதனின் பனிக்கட்டி அமைதியை ஈட்டியால் கிழித்தது.

கடைசியாக ஒருமுறை அப்பாவின் முகத்தைப் பார்த்து அமுதன் மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.. "அப்பா...! உங்கள் இடத்தை என்னால் பூர்த்திச் செய்ய முடியாது. உங்கள் அளவுக்கு உழைப்பையும் என்னால் தரமுடியுமா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. ஆனால் உங்களை மனதில் கொண்டு இதன்பின்னான என் வாழ்க்கையைப் பூர்த்திச் செய்துக் கொள்ள எனக்குப் போதிய அறிவுரைகளையும்,அனுபவத்தையும் நீங்கள் ஏற்படுத்தி தந்திருக்கிறீர்கள் என்று உறுதியாக உணர்கிறேன். அதன்வழி என் பயணத்தைத் தொடர்வேன். அதே போல உருவம் மட்டுமே தொலைந்த நீங்களும், உங்களின் குழிலென்ஸ் கண்ணாடி பார்வையின் எல்லைக்குள்ளே வைத்து இனியும் என்னை காத்து கண்காணித்து வழி நடத்துவீர்கள் என ஆழமாக நம்புகிறேன்.

இனி 'நிரந்தர ஓய்வெடுங்கள். தங்கள் பணியை செவ்வனே முடித்திட்ட ஆத்ம திருப்தியுடன் உறங்குங்கள்'..."

"சென்று வாருங்கள்".

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...