"ஜிப்ஸி" ராஜு முருகனின் "ஜிப்ஸி" நூலைப் படித்து முடித்த நேரம், ஒரு நாடோடியாய் வாழ மனம் நாட்டம் கொள்கிறது. ஆனால் அது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதை புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் வேதனையுடன் வெளிப்படுத்துகின்றன. நாம் பார்க்க மறுத்த/மறந்த பல நாடோடிக் குழுக்களின் முகங்களை உண்மை பிசகாமல், அலங்கார வார்தைகளால் உணர்வுகளை அசிங்கப்படுத்தாமல் அவர்களின் வாழ்க்கையை அவர்களினூடே வாழ்ந்து நம்மையும் அவர்களோடு வாழ வைத்திருக்கிறார். அன்றாட வாழ்க்கையில் நாம் மிக எளிதாகக் கடந்துச் செல்லும் சர்க்கஸ் மனிதர்கள், ரோட்டில் கயிறு மேல் நடந்து வித்தை காட்டுபவர்கள், இரவு நேரத்தில் தெருக்களில் குறி சொல்லிச் செல்லும் குடுகுடுப்பைக்காரர்கள், ராமர் கிருஷ்ணர் அனுமர் என சாமி வேடமிட்டு தெருவில் காசுக் கேட்டு வருபவர்கள் மற்றும் சவுக்கால் தன்னை அடித்துக் கொள்பவர்கள் என நாம் சிறிதும் நினைத்துப் பார்க்காத மனிதர்களைப் பற்றியெல்லாம் நெஞ்சத்தில் நெகிழ வைக்கிறது. இந்தப் புத்தகத்தை படித்தப் பின், கண்டிப்பாக மேற்கூறிய மனிதர்களை நாம் எளிதாக கடந்து சென்று விட முடியாது.. கார்த்திக் பிரகாசம்... ...