அதிலொன்றும் ஆச்சரியமில்லை. உலகம் புரிந்திடாத, உறவுமுறைகளின் புதிர்கள் தெரிந்திடாத பருவத்திலேயே அழகானத் தோழமையுடன், ஆழமான அன்புணர்வுடன் ஒரு சிநேகிதி கிடைக்கப் பெற்றிருந்தால் இச்சமயம் நீங்களும் ஒரு கவிஞனாக இருந்திருப்பீர்கள். கலையை ரசிப்பவனாக இருந்திருப்பீர்கள். அது உண்டாக்கும் ஒவ்வொரு உணர்ச்சியையும் ஆழ்ந்து நேசிப்பவனாக இருந்திருப்பீர்கள். அதனை உடலெங்கும் பரவவிட்டு, ஒவ்வொரு நொடியிலும் இருத்தலின் சுகத்தை அனுபவித்திருப்பீர்கள். இருத்தலின் சுகத்தில் இல்லாமல் போகும் வழியையும் கண்டடைந்திருப்பீர்கள். அது சொர்க்கத்திற்குச் செல்லும் வழியல்ல. நம் சொர்க்கத்தை நாமே கட்டமைத்துக் கொள்ளும் வழியென்று அறிந்திருப்பீர்கள். எனக்கும் அவளுக்கும் இடையில் இருக்கும் புரிதல் மற்றவர்களுக்கு புரியாது. வேறாரும் அவ்விடைவெளிக்குள் புகுந்திடவும் முடியாது. அது எங்கள் இருவருக்கு மட்டுமே சொந்தமான நிரந்தர புகலிடம். உடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும், கிணற்றில் நீர் இறைப்பது போல நெஞ்சில் உணர்வுகளைத் தொடர்ந்து இறைத்துக் கொண்டேயிருப்பாள். எழுத முயற்சித்தால் காகிதத்தில் அவளது முகமே தெரியும். கொட்டித் தணியும் உணர்வுகளுக்கும், ...