எதைப் பற்றியும் யாரைக் குறித்தும் கவலைப்படாத நாட்கள் அவை. காலையில் சீக்கிரம் எழுவதென்பது எப்போதுமே நடக்காத ஒன்று. தூக்கம் தெளிந்து நானாக எழும் வேளையே காலை. "அந்த"க் காலை வேளையில் சட்டைப் பையில் நோட்டாக இருந்தால் ஒரு பொட்டலம் பட்டச் சோறு. சில்லறையாக இருந்தால் ஒரு டீ இரண்டு சால்ட் பிஸ்கட். அதுதான் அன்றைய நாளுக்கான ஆகாரம். அடுத்த வேளைச் சாப்பாட்டிற்கு நண்பர்கள் யாராவது அலுவலகத்திலிருந்து வரும்வரை காத்திருக்க வேண்டும். பணம் தர முகம் சுளிக்காத நண்பனாயிருந்தால் உரிமையுடன் கூடுதலாக ஒரு ஆம்லேட் இல்லையென்றால் நாலு இட்லி மட்டும். வேலைத் தேடி வேலைத் தேடி அலுத்திருந்தது. இல்லாத உடம்பு இன்னும் இத்துப் போகத் தொடங்கியது. தாடியைத் தடவிக் கொள்வதிலும், சுயஇன்பம் காண்பதிலுமே பெரும்பாலான பகல் பொழுதுகள் கரைந்தன. 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே', "ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடிப் போகாது" பாடல் வரிகள் சோகத்தின் வடிகாலாகவும் அதே வேளையில் புது தெம்பைத் தருவதாகவும் இருந்தன. கடல் பேரன்பு. கடலலை பெரும் தத்துவ ஆறுதல். சென்னையில் வசிப்பதில் மிக முக்கியமா...