எதைப் பற்றியும் யாரைக் குறித்தும் கவலைப்படாத நாட்கள் அவை. காலையில் சீக்கிரம் எழுவதென்பது எப்போதுமே நடக்காத ஒன்று. தூக்கம் தெளிந்து நானாக எழும் வேளையே காலை. "அந்த"க் காலை வேளையில் சட்டைப் பையில் நோட்டாக இருந்தால் ஒரு பொட்டலம் பட்டச் சோறு. சில்லறையாக இருந்தால் ஒரு டீ இரண்டு சால்ட் பிஸ்கட். அதுதான் அன்றைய நாளுக்கான ஆகாரம். அடுத்த வேளைச் சாப்பாட்டிற்கு நண்பர்கள் யாராவது அலுவலகத்திலிருந்து வரும்வரை காத்திருக்க வேண்டும். பணம் தர முகம் சுளிக்காத நண்பனாயிருந்தால் உரிமையுடன் கூடுதலாக ஒரு ஆம்லேட் இல்லையென்றால் நாலு இட்லி மட்டும்.
வேலைத் தேடி வேலைத் தேடி அலுத்திருந்தது. இல்லாத உடம்பு இன்னும் இத்துப் போகத் தொடங்கியது. தாடியைத் தடவிக் கொள்வதிலும், சுயஇன்பம் காண்பதிலுமே பெரும்பாலான பகல் பொழுதுகள் கரைந்தன. 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே', "ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடிப் போகாது" பாடல் வரிகள் சோகத்தின் வடிகாலாகவும் அதே வேளையில் புது தெம்பைத் தருவதாகவும் இருந்தன.
கடல் பேரன்பு. கடலலை பெரும் தத்துவ ஆறுதல். சென்னையில் வசிப்பதில் மிக முக்கியமான வசதிகளுள் ஒன்று 'கடற்கரை'. ஒவ்வொரு நாளும் அந்திசந்தி வேளையில் கடலின் மடியில் தலைவைத்து கிடப்பேன்.சுற்றி ஆயிரம் பேருக்கு மேல் இருந்தாலும் நானும் கடலும் தனியாக இருப்போம். நான் பேசமாட்டேன். கடலும் பேசாது. ஆனால் எங்களுக்குள் உரையாடல் நிகழ்ந்தவாறிருக்கும். யாருக்கும் தெரிந்திடாத என்னைப் பற்றிய பல ரகசியங்களை அது அறிந்து வைத்திருந்தது. குறிப்பாக அடுத்தவேளை சாப்பாட்டிற்கு என்னிடம் காசில்லை என்பதை எப்போதும் அறிந்தே வைத்திருந்தது. நிகழ்காலத்தையும் இறந்த காலத்தையும் இழுத்துச் சென்று எனக்கான எதிர்காலத்தைக் கொண்டு வர அலைகள் பிரயத்தனப்படுவது மனதுக்குச் சுகமாக இருக்கும். அந்த நுரைச் சுகத்தில் என்னையும் நேரத்தையும் கொஞ்சம் தொலைத்துவிட்டு, கடல் தடவிக் கொடுத்த ஆறுதலுடன் அடுத்த நாளைச் சந்திப்பதற்கான ஊக்கத்துடன் திரும்புவேன். வேலை ஒருநாள் கிடைக்கும். வேலை ஒருநாள் கண்டிப்பாகக் கிடைக்கும்.
அறிமுகச் சொல் சொல்லியிருந்த நண்பனின் அப்பா இறந்த ஒரு துர்நாளன்று அவன் வேலைச் செய்த அலுவலகத்தில் எனக்கு வேலைக் கிடைத்தது. ஒன்பதாயிரத்து நானூறு சம்பளம். அதிகாலை அல்லது இரவுமுறைப்பணியானால் ஒரு நாளைக்கு கூடுதலாக அறுபது ரூபாய். ஆறு மாதத்திற்குப் பின் பணி செய்யும் திறனைப் பொறுத்து பணி நிரந்தரம். ஞாயிறு விடுமுறை. இரண்டாவது நான்காவது சனிக்கிழமை விடுமுறை.
"மகன் லட்சக் கணக்கில் சம்பாதிக்கணும்" என்று எதிர்பார்க்கும் அப்பாவின் ஆசைக்கு நான் ஒன்பதாயிரத்து சொச்ச சம்பள வேலையில் சேர்ந்திருப்பது ஒருபோதும் சந்தோசத்தைத் தராது என்று நன்றாகத் தெரியும். ஆனால் ஊர் விட்டு ஊர் வந்து சொந்தக் காலில் நின்று இரண்டு வேளைச் சாப்பிடவே அல்லாடிக் கொண்டிருந்த எனக்கு வறுமையைப் போக்க வந்த வசந்தமாக - பெய்யப் போகும் பெரும் மழையின் முதல் துளியாக அந்த வேலை நம்பிக்கைத் தந்தது.
அயர்ன் செய்த சட்டையை பாண்ட்டுக்குள் விட்டு அதை பெல்ட்டால் இழுத்துக் கட்டி - கால்களை பூட்ஸுக்குள் சொருகி - கழுத்தில் அடையாள அட்டைத் தொங்க - முதல் நாள் அலுவலகத்திற்கு சாலையில் கர்வ கம்பீரமாய் நடந்துச் சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது. இப்போதும் முகத்தை ஆக்ரமிக்கிறது அந்தப் பரவச புன்னகை. என்னோடு சேர்த்து மொத்தம் பத்தொன்பது பேர் புதிதாக இணைந்திருந்தனர். பாதிக்கு மேல் பெண்கள். அதில் அவளும் ஒருத்தி. இல்லை அவள் போக மற்றவர்கள் மீதி.
அவளுக்குச் சொந்த ஊர் மதுரை. ஆனால் புடம் போட்ட வட சென்னைக்காரி. நடையிலும் பாவனையிலும் சுகந்தமான வடசென்னையின் வாசம் வீசும். பழைய வண்ணாரப்பேட்டையைத் தாண்டியுள்ள மகாராணியில் இருந்தது அவளின் அத்தை வீடு. அங்கிருந்து தான் நந்தனத்திலிருக்கும் அலுவலகத்திற்குத் தினமும் வந்து போவாள்.
ஒருநாள் உன் "ட்ரெஸ்ஸிங் சென்ஸ்" நல்லா இருக்கு என்று எங்கள் நட்புறவை அவளே தொடங்கினாள். எந்த மெனக்கெடலும் இல்லாமலே பெரும் அழகியாக இருந்தவள் பழக பழக இனிமையாய் இருந்தாள். பெயருக்குப் பின்னால் அவள் அப்பாவின் பெயரை இணைத்து சொல்லும் போது அவ்வளவு கம்பீரமாக இருக்கும். அவளிடம் எனக்குப் பிடித்ததும் அந்தக் கம்பீரம் தான்.
சொல்லாமல் கொள்ளாமலேயே எங்களுக்குள் காதல் வளர்ந்தது. நாங்கள் காதலர்களாக இருந்தோம். காதலர்களாகப் பேசினோம். காதலர்களாக ஊரைச் சுற்றினோம். காதலர்களாக வாழ்ந்தோம்.
வேலை தேடிய நாட்கள் எனக்குள் அதீதமாக திணித்திருந்த பழக்கங்களில் ஒன்று "சுயமைதுனம்". வேலைக் கிடைத்து காதலி அமைந்தப் பிறகும் கூட அந்த பழக்கத்தை என்னால் விட்டொழிக்க முடியவில்லை. இன்றுவரை அது நீடிக்கவே செய்கிறது
ஒவ்வொரு முறை சுயமைதுனம் அனுபவத்த பிறகும் அவளின் நினைவுகள் மனதை ஆக்கிரமிக்கும். ஏனென்றே தெரியாது. சுடு கோலால் நெஞ்சை போட்டு பொசுக்கும். "அவளுக்கு நான் உண்மையாக இல்லையா - தொடர்ந்து அவளைக் காயப்படுத்திக் கொண்டே இருக்கிறேனா - அவளின் உடல் மட்டும்தான் என் பிரதான தேவையா - குறைபாடற்றவன் என்ற மாயப் போர்வையைப் போர்த்திக் கொண்டு தினம்தினம் அவளைக் குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்குகிறேனா" என்று சிறுவலையில் சிக்கிக் கொண்ட பிரம்மாண்ட மீனைப் போல மனம் கிடந்து துடிக்கும்.
அந்த நிமிடங்கள் கொடூரமானவை. என் மீதே எனக்கு ஆத்திரமாய் இருக்கும். ஆத்திரம் தேம்ப வைக்கும் கண்ணீராய் உருமாறும். வானத்துக்கும் மேகத்துக்கும் நடுவில் சிக்கிக் கொண்ட மழையைப் போல, தொண்டைக் குழிக்கும் கண்களுக்கும் இடையில் எப்போது வேண்டுமானாலும் வெடித்துவிட சமயம் பார்த்து உருண்டுக் கொண்டிருக்கும். "உனக்கும் உன் காதலுக்கும் நான் தகுதியானவன் தானா..? சத்தியமாக எனக்குத் தெரியவில்லை.. என்னைப் போன்ற உண்மை இல்லாதவனை நீயேன் காதலித்தாய்.? உன் காலில் விழுந்து அழ வேண்டும் போலிருக்கிறது. வேண்டாம் தடுக்காதே. என்னை அழ விடு"
இயல்பு நிலைக்குத் திரும்புவதற்குள் மனதளவில் பலமுறை இறந்திருப்பேன்.
இதயத் துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக சீராகும். இமையின் கடைசி இழையில் ஒட்டி பிசு பிசுத்திருந்த கண்ணீர் காய்ந்திருக்கும். உடலில் நடுக்கம் குறைந்திருக்கும். ஒருவழியாக கால்கள் ஓரிடத்தில் நிற்கும். இப்போது மனம் பொறுமையாகப் பேசும்."அவள் எந்தளவுக்கு என்னைக் காதலிக்கிறாள் என்று நன்றாகத் தெரியும்... நானும் அவளை அதைவிட ஒருபடி மேலாகவே காதலிக்கிறேன். அதன்பால் தானே அவளின் மீது அதீத அக்கறையாகவும், பாசமாகவும் இருக்கிறேன். மட்டுமில்லாமல் சில சமயங்களில் கண்டிக்கவும் செய்கிறேன்.. அவள் என்னவள். என்னை மடியில் சாய்த்து அரவணைக்க வந்த தேவதை. நான் அவளது தந்தை போல அவள் மீது அன்பு செலுத்துவேன். என் மகளைப் போல பேணுவேன்.
அடுத்த நிமிடமே அவளுக்குப் போன் போடுவேன். எப்போதோ அவளைக் காயப்படுத்தியதற்கு - குற்றவுணர்ச்சியில் உழல வைப்பதற்குக் கழுவாயாக "மிஸ் யூ" சொல்லி வைப்பேன். "என்ன திடீர்னு" என்றவாறு குழையும் அவளது குளிர்ந்த குரலில் எனக்கான பாவ மன்னிப்புக் கிடைத்துவிட்டதாய் நம்பிக்கைக் கொள்வேன்.
குளிர்ந்த குரல் என்றதும் ஞாபகம் வருகிறது. அவளுக்கு சாதனா சர்கத்தின் மீது கொள்ளை இஷ்டம். 'உன்னை அள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து கைக் குட்டையில் ஒளித்துக் கொள்வேன்' முடிப்பதற்குள் அவசர அவசரமாக புறங்கையில் இதழ்களை இறுக்கமாகக் குவித்து எச்சில்படாமல் ஒரு முத்தம் வைப்பாள். எச்சில் முத்தத்திற்கான இடம் வேறு.
அவள் அக்காவிற்கு வரதட்சணையாக கிலோ கணக்கில் வெள்ளியும் தங்கமும் கொடுத்து கல்யாணம் முடித்தார்களாம். மாமா ஏதோ வெள்ளி தொழில் செய்கிறாராம். கோடிக் கணக்கில் சம்பாதிப்பவராம். அதுமட்டுமில்லாமல் மதுரையில் பல கட்டிடம் மற்றும் வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார்களாம். அதுவே மாதம் பல லட்சம் சேருமாம். அவள் சொல்லும் போது எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. நடுத்தர வர்க்கத்தின் அடர்த்தியான வறுமைக் கோட்டிற்கு மேலே ஒருநாளும், கீழே எத்தனை நாளென்றும் தெரியாமல் தினம்தினம் அல்லல்படுவது தான் நான் வளர்ந்த சூழ்நிலை. ஆனால் அவள் என்னைவிட ஆயிரம் மடங்கு தைரியமானவள். காசெல்லாம் பிரதானமில்லை. நாம் ஒன்றாக சந்தோசமாக வாழ முடியும் என்று எப்போதும் எனக்கு நம்பிக்கையூட்டிக் கொண்டே இருப்பாள். சொல்லப் போனால் அவள் தந்த நம்பிக்கையில் தான் காதலில் நான் ஊன்றி நின்றேன். இல்லையென்றால் இந்தக் காதலெல்லாம் நமக்கு ஒத்து வராது என்று ஓரமாக ஒதுங்கிக் கொண்டு, போன காதலை எண்ணியெண்ணித் துக்கப்பட்டு அது தரும் சுகத்திலேயே மிச்சக் காலத்தை தள்ளியிருப்பேன். இதைச் சொல்வதற்கு எனக்கு எவ்வித வெட்கமோ கூச்சமோ இல்லை. ஏனென்றால் உண்மை அது தான்.
எங்களது உறவைப் பற்றி, நாங்கள் மணம் முடிக்க விரும்புவதைப் பற்றி அவள்தான் என் பெற்றோரிடம் பேசினாள். அவளது பெற்றோரிடமும் அவளே தான் பேசினாள். நான்தான் முன்னமே சொன்னேனே. அவள் என்னைவிட ஆயிரம் மடங்கு தைரியமானவள். உறுதியானவள். வீட்டில் முதலில் மறுத்தார்கள். பிறகு இசைந்தார்கள்.
ஹ்ம்ம்ம்... திரும்பிப் பார்த்தால் அதற்குள் பதினைந்தாண்டுகள் பயணித்துவிட்டோம். இப்போதும் அவள்தான் என்னைவிட அதிகம் சம்பாதிக்கிறாள். குடும்பத்தை வழி நடத்துகிறாள். எங்களுக்கிடையேயான புரிதலை, மிக அழகாக வார்த்தெடுக்கிறாள்.
உப்பரிகையின் சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறு சிலந்திகள் பின்னும் சிக்கலான வலையைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறேன். நாற்காலியின் கைப்பிடியில் வந்தமர்ந்து என் தலைமுடியைக் கோதுகிறாள். நான் அவளது மார்பில் சாய்ந்துக் கொண்டேன். சேர்த்தணைத்துக் கொண்டு எங்களுக்குப் பிடித்த அந்தக் கவிதையை மீண்டுமொரு முறை பாடினாள்.
நாம் வாழ்வோம்
மகிழ்ச்சியாக வாழ்வோம்
வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்
சண்டையிடுவோம்
பிணக்குக் கொள்வோம்
கெஞ்சுவோம்
உடனே ஒன்றுக் கூடுவோம்
மதிப்போம்
கொஞ்சுவோம்
முத்தமிடுவோம்
அணைத்துக் கொள்வோம்
உடலின் புதிர்களை ஒன்றாக ஆராய்வோம்
நான் நானாகவே இருக்கிறேன்
நீ நீயாகவே இரு
நாம் நாமாக இருப்போம்
வாழ்த்தலுக்கும் உயிர்த்தலுக்கும்
காதலே அடிப்படை
காதலிப்போம்
வாழ்தலின் சுகத்தை அனுபவிப்போம்
தீரா பயணத்தின் பாதையைக்
கூட்டாகக் கண்டடைவோம்...
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment