மாலை ஐந்து மணி. மதுரை இரயில் நிலையத்தில் சென்னை எக்ஸ்பிரஸிற்காக காத்திருந்தேன். வழக்கமாக தாமதமாய் வரும் ரயில், அன்று வழக்கத்தை விட தாமதம். மிகவும் பழகிப் போன விஷயம் தான். ஆதலால் குறைபட்டுக் கொள்ள ஒன்றுமில்லை. மக்கள் வெள்ளம் நடைமேடையை தொப்பலாய் நனைத்து ஆங்காங்கு குட்டை போல் தேங்கியிருந்தது. தமிழ்நாட்டில் எத்திசையில், எந்த நேரத்தில் நின்றாலும் சென்னைச் செல்லும் கூட்டத்திற்கு மட்டும் குறைச்சலே இருக்காது என தோன்றியது. உடன் யாரும் இல்லாததால், ஓடை நீர் நனைக்காத காட்டுச் செடியை போல ஓரமாய் ஒதுங்கி அமர்ந்து கொண்டேன். பொருத்தமான உத்தேசமறிந்து அரசாங்கம் செயல்படுத்திய அதிமுக்கியத்துவமான திட்டங்களில் முதன்மையானது இரயில் நிலையங்களில் இலவச வைஃபை. சரியான நேரத்திற்கு வந்த பயணிகள் மட்டுமல்லாமல் தாமதமாக வந்த பயணிகளும், இன்னும் வராத இரயிலைக் கோபத்தில் திட்டி, ஒருகட்டத்தில் முற்றிலும் பொறுமையிழந்து அரசாங்கத்தை சபிப்பதை முழுமையாகத் தடுத்துக் கொண்டிருந்தது இந்த இலவச வைஃபை. கூட்டத்தோடு கூட்டமாக நானும் காதில் ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு முகப்புத்தகத்தில் மேய்ந்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் தோள்பட்டையின்...