மாலை ஐந்து மணி.
மதுரை இரயில் நிலையத்தில் சென்னை எக்ஸ்பிரஸிற்காக காத்திருந்தேன். வழக்கமாக தாமதமாய் வரும் ரயில், அன்று வழக்கத்தை விட தாமதம். மிகவும் பழகிப் போன விஷயம் தான். ஆதலால் குறைபட்டுக் கொள்ள ஒன்றுமில்லை. மக்கள் வெள்ளம் நடைமேடையை தொப்பலாய் நனைத்து ஆங்காங்கு குட்டை போல் தேங்கியிருந்தது. தமிழ்நாட்டில் எத்திசையில், எந்த நேரத்தில் நின்றாலும் சென்னைச் செல்லும் கூட்டத்திற்கு மட்டும் குறைச்சலே இருக்காது என தோன்றியது. உடன் யாரும் இல்லாததால், ஓடை நீர் நனைக்காத காட்டுச் செடியை போல ஓரமாய் ஒதுங்கி அமர்ந்து கொண்டேன்.
பொருத்தமான உத்தேசமறிந்து அரசாங்கம் செயல்படுத்திய அதிமுக்கியத்துவமான திட்டங்களில் முதன்மையானது இரயில் நிலையங்களில் இலவச வைஃபை. சரியான நேரத்திற்கு வந்த பயணிகள் மட்டுமல்லாமல் தாமதமாக வந்த பயணிகளும், இன்னும் வராத இரயிலைக் கோபத்தில் திட்டி, ஒருகட்டத்தில் முற்றிலும் பொறுமையிழந்து அரசாங்கத்தை சபிப்பதை முழுமையாகத் தடுத்துக் கொண்டிருந்தது இந்த இலவச வைஃபை.
கூட்டத்தோடு கூட்டமாக நானும் காதில் ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு முகப்புத்தகத்தில் மேய்ந்துக் கொண்டிருந்தேன்.
சிறிது நேரத்தில் தோள்பட்டையின் பின் யாரோ சுரண்டுவது போலிருந்தது. திரும்பி பார்க்காமலேயே போனின் ஓடிக்கொண்டிருக்கும் காணொளியின் சத்தத்தைக் கூட்டினேன்.
மீண்டும் ஒரு சுரண்டல். இந்த முறை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக..
ஏதாவது சொல்லியிருக்கக் கூடும் ஆனால் ஹெட்செட் வெளியுலகத்துக்கு காதை செவிடாக்கியிருந்ததால் எதுவும் கேட்கவில்லை.
எழுபது முதல் எண்பதுக்குள் வயதிருக்கும். ஒல்லியான உருவம். ஒடிசலான கன்னங்கள். சராசரிக்கும் மிகக் குறைவான உயரம்.கண்ணாடியின் உதவியோடு கண்கள் ஆனாலும் கூர்விழிப் பார்வை. தலையையும் மார்பையும் நூலில் கோர்த்து கட்டியது போன்ற கோழிக் கழுத்து. வளைந்திடாத முதுகு. தடியில்லாமல் தடம் பதிக்கும் பாதங்கள். இடுப்பில் காவி வேட்டி. இடுப்பைத்தான் வேட்டி கட்டியிருக்கிறதென்று முழுமனதாக ஒப்புக் கொள்வது கொஞ்சம் கடினம். வேண்டுமானால் வேட்டியென்ற கொசுறுத் துணி இறுக்கிப் பிடிக்க முயன்றுக் கொண்டிருந்த இடத்தை 'இடுப்பு' என்று வைத்துக் கொள்ளலாம். அதே போல் அதை மேல்சட்டை என்று அவ்வளவு எளிதில் அங்கீகரித்துவிட முடியாது. சட்டையாகத் தான் இருக்கும் என்று நாமே அனுமானித்துக் கொள்ள வேண்டும்.
'காசெல்லாம் இல்லை வேண்டுமென்றால் சாப்பாடு வாங்கித் தருகிறேன்' என்று யாசகம் வேண்டுபவனிடம் சொல்வதற்கெனவே பொதுப்புத்தியில் நிரந்தரமாய் பதிந்து போன செதுக்கப்பட்ட முக பாவத்துடன், ஹெட்செட்டை ஒருபக்கமாக கழட்டிவிட்டு, என்ன ஐயா..? சொல்லுங்க என்றேன்.
"நான் சொல்ற நம்பருக்கு ஒரு நிமிஷம் போன் போட்டு தறீங்களா" என்றார் ஈரமான குரலில். ஏந்தி பழகிடாத கரங்களில் கூச்சம் கசிந்தது.
போனை நோண்டியவாறே நோட்டமிட்டேன். அவரிடம் போன் இல்லை.
முகப்புத்தகத்தில் மேய்ந்து கொண்டிருந்ததை தடுத்திட்ட கடுப்புடன், ம்ம்ம். சொல்லுங்க.. என்றேன்.
நம்பர் சொன்னார். முதல் முறை போகவில்லை. மீண்டுமொரு முறை முயற்சித்தப் போது இணைப்பு கிடைத்தது. போனை அவர் கையில் கொடுத்தேன்.
டேய்.! தாத்தா பேசுறேன் டா. நான் மதுரைக்கு வந்துட்டேன். இங்க இருந்து சென்னைப் போயிட்டு அப்டியே பாண்டிச்சேரி போயிடறேன். ஆயா'வ நல்லாபடியா பாத்துக்கோடா. பாவமடா அவ. அவகிட்ட சண்ட போடாதடா. ஹலோ..! ஹலோ..! ஹலோ..!
இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது..
போனை என் கையில் கொடுத்த போது அவரின் கண்கள் தெம்பில்லாமல் கலங்கி இருந்தன. தலையை அசைத்தவாறே வார்த்தையேதும் பேசாமல், கைகூப்பிவிட்டு திரும்பி மெல்ல நடந்தார்.
அந்த மனிதர் யார். அவரின் உண்மையானச் சூழ்நிலை என்னவென்று எதுவும் தெரியவில்லை. ஆனால் இந்த தள்ளாத வயதில் வாழ்க்கையின் ஏதோ ஒரு இக்கட்டானச் சூழ்நிலையில் சிக்கியிருக்கிறார் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. ஏதோவொரு ஆற்றாமை அவரைத் தனிமையில் தள்ளி தாழிட்டிருக்கிறது.
கூரிய குற்ற உணர்ச்சியில் மனதை தள்ளிவிட்டு சத்தமின்றி மெல்ல நகர்ந்தது அந்த முகம்.
ஓடிச்சென்று அவரிடம், டீ காபி ஏதாவது சாப்பிடுறீங்களா என்றேன். மறுப்பேதும் வராததால் அருகில் இருந்த டீக்கடையில் இரண்டு டீ சொன்னேன்.
அவர் எதுவும் பேசவில்லை.
டீ வந்தது.
சூடான டீயை உறிஞ்சியதால், சட்டென்று சுட்டுவிட்ட கிளாசை பின்னுக்கு இழுத்துவிட்டு உதடுகளில் தேங்கியிருந்த துளியை வெறுங்கையால் துடைத்துவிட்டு சொன்னார்.
அடிச்சாலும் ஒதச்சாலும் பேர பிள்ளை பாசம் போகல அவளுக்கு. ஆனா என்னால தாங்க முடில தம்பி. அவனோட அப்பனும் ஆத்தாளும் செத்தப்ப மூக்கு சளிய சப்பிக்கிட்டு என் பொண்டாட்டி மடியிலேயே கிடந்தான். அன்னிலிருந்து சொமக்குறோம். அவன் கேட்டதெல்லாம் வாங்கி தந்து, விரும்புன பொண்ணையே கல்யாணம் பண்ணி வச்சு ராஜா மாதிரி அழகு பாத்தோம். இப்போ வீடு வாச,காடு காணி எல்லாத்தையும் அவன்பேருக்கு மாத்தி எழுதிக்கிட்டு, போட்டத சாப்புட்டுட்டு வாய் பேசாம கெடக்கிருதா இருந்தா கெடங்க இல்லனா எங்கையாச்சும் போய் செத்து தொலைங்கனு சொல்றான்.
மனசு கேக்கல தம்பி. வந்துட்டேன். அவளையும் வந்துருனு சொன்னேன். பாவிக்கு கடைசி காலத்துல என்மேல நம்பிக்க இல்லாம போச்சு. காடு காணிணு ஓடிஓடி ஒழைச்ச ஒடம்பு. இப்போ நகர கூட தெம்பில்லாம கிழிஞ்ச பாய் மேல ஒரு நலிஞ்ச பாயா ஒட்டிக் கெடக்கா அடிச்சாலும் ஒதச்சாலும் இந்த மண்ணுலயே என் உசுரு கெடந்து போகட்டும்னும்னு.
க்ளாஸிலிருந்து நடனமாடிக் கொண்டே மேலெழுந்த புகை காற்றில் கலந்து மறைந்தது.
அதிகமா நேசிச்சிட்டா இது ஒரு பிரச்சனை தம்பி. கடைசி காலத்துல அவளுக்கு முன்னாடி போய் சேந்தரனும்னு புருசனும், அவருக்கு முன்ன நான் போய்டணும்னு பொண்டாட்டியும் மனசுக்குள்ள வேண்டிகிட்டே நாள தள்ளனும். ஒருவிதத்துல பாத்தா சுயநலம் தான்.பயத்துனால வர்ற சுயநலம். அவ செத்ததுக்கப்பறம் தூக்கிச் சுடுகாட்ல போடவாவுது நாலு பேர் வேணுமேனு தான் அவள அங்கயே விட்டுட்டேன். வற்புறுத்தல.
நீங்க எங்க போறீங்க..?
கால் போன போக்குல போறேன். இந்த உசுரு எங்க போகணும்னு இருக்கோ அங்க போகட்டும்.
இரண்டு கிளாஸிலும் டீ அப்படியே இருந்தது.
இரயில் வருவதற்கான அறிவிப்பை கணினி குரல் கரகரத்தது.
நடைமேடை பரபரப்பானது. டீக்கு காசு கொடுத்து சில்லறையை பர்சில் போட்டுவிட்டு கவனித்தால், அந்தப் பெரியவர் கூட்டத்தில் எங்கோ கலந்திருந்தார்.
அஸ்தமிக்கும் சூரியனைக் கிழித்துக் கொண்டு வருவது போல், பெரும் உஷ்ண மூச்சோடு வந்து நின்றது இரயில்.
கார்த்திக் பிரகாசம்...

அருமையான பதிவு தோழரே ❤️
ReplyDeleteநன்றி தோழி🖤
Delete👌🏽
ReplyDelete