Skip to main content

Posts

Showing posts from February, 2022

நாஞ்செலியன்

கொழுத்த மார்புகளைத் தூக்கிச் சுமக்கும் வலி சொல்லி மாளாது பாறாங்கல்லைத் தொங்கவிட்டது போல சமயங்களில் முகத்தைக் காணாமல் வன்மத்தைக் கக்கியிருக்கிறேன் பொருத்த அளவிலான மார்புடல்களில் மாநகர பேருந்தில் தினசரி கசங்கும் முலைகளின் கணக்கில் எனதிரு முலைகளுக்கும் 'அழுத்தமான' இடமுண்டு பால்மடியெனப் பகடி செய்யும் ஆண்களிடம் வருத்தமில்லை ஆனால் பெண்களின் இழிவான பார்வைச் சீண்டலில் குறுகி அம்மணமாகிறேன் முலைவரிச் சட்டம் ஆண்களுக்குப் பொருத்தமெனில் அறுத்தெறிந்திருப்பேன் நாஞ்செலியின் ஆண் உருவாய் ராகவி

வழி

நீ கடந்து போகச் சொன்ன பாதையில் செல்கிறேன் சொன்னபடியே உன்னை நினைவூட்டும்படியாக ஒன்றுமில்லை நானும் கூட மறக்கவே முயல்கிறேன் ஆனால் பார் பிடித்த சட்டையில் நேற்று தேநீர் கொட்டிவிட்டது கறையில் திட்டு திட்டாய் உன் பிரிவின் சாயம் கடைசி வார்த்தை எழுதிடாமல் மசி தீர்ந்திட்ட பேனா விரலிடுக்கில் நின் விரல் விட்டுச் சென்ற பிசுபிசுப்பு ஈரத்தோடு சாய்ந்தாடுகிறது உன் பெயர் கொண்ட நட்புகள் பாவம் அவர்களறியாமல் உன்னைச் சுமந்து வருகிறார்கள் என்னிடம் கழுவிடும் போது பாத்திரம் கீறிக் கசிகிறது இளஞ்சிவப்பில் ஒரு சிறு துளி நம்மிருவருக்கும் ஒரே வகை இரத்தம் உன்னை நினைவூட்டும் என்பதால் பாடல்கள் கேட்பதில்லை இப்போதெல்லாம் இருப்பினும் தென்றலையும் மழையையும் என்ன செய்வதென்று தெரியவில்லை நாம் எடுத்த நிழற்படங்களை அழித்துவிட்டேன் தன் வண்ணத்தை ஒட்டிவிட்டுப் பறக்கும் வண்ணத்துப்பூச்சியைத் தடுக்க முடியவில்லை பஞ்சாரத்திற்குள்ளேயே இருந்தாலும் பாம்பின் கண்களைக் கொண்டு நீளும் இரவில் நிம்மதியாய் உறங்கிடுமா கோழிக் குஞ்சு சிதறிப் போன மனம் சிறுசிறு இழப்புக்கெல்லாம் உந்தன் இழப்பையே பிரதிபலிக்கிறது பூதாகரமாக உறக்கத்தை உனக்கும் கனவுகளை நமக்க...

அலைவுறுதல்

ஒரே சமயத்தில் தனிமையை விரும்புபவளாகவும் அதேசமயம் தனிமையைக் கண்டு அஞ்சுபவளாகவும் அதன் பகடியில் சுயத்தை அருவருப்பவளாகவும் தன்னிலே வெறுப்பை உமிழ்பவளாகவும் இருக்கிறேன் எப்போது கிடைக்குமெனக் கிடையாய் கிடந்து கிடைத்த மாத்திரத்தில் விரும்பியதையே வெறுத்துத் தள்ளுகிறேன் ஏனிந்த அலைவுறுதல் அவசியமற்ற மெனக்கெடல் முடிந்திடுமே என பதற்றமா விலகிடுமே எனப் பாதுகாப்பின்மையா? முடிந்தாலும் விலகினாலும் வலித்திடும் நெஞ்சை வலிந்து சுமந்திடும் பாரமே ராகவி

சனியனே

சனியனே... குழந்தையைத் திட்டினார் குழந்தை சிரித்தது திட்டியவர் சனியனானார் ராகவி...

நான்களாகிய நான்

எழுதி அழிக்கப்பட்ட வார்த்தையைப் போல் அடுத்த நொடியில் அடையாளங்களைத் துறப்பது ஆடைகளை அவிழ்ப்பது போல் அவ்வளவு எளிதாய் இல்லை பெயரும் முகமும் பதிவில்லாத இடத்திலும் அடையாளமற்று அலைந்திடும் வேளையில் என்னுடனே என் சட்டைப் பையிலே தங்கியிருக்கிறது ஒரு நான் ஒவ்வொன்றாய் தொலைத்தாலும் புதிதாய் முளைத்துவிடுகிறது ஒரு நான் தீர்ந்தபாடில்லை பிறகு தான் புரிந்தது நான் என்பது ஒரு நான் அல்ல அது நான்களின் தொகுப்பு கடைசி நான் தீர்ந்தாலும் வேறொரு நானாய் இருந்தே தீருவேன் நான் ராகவி
இல்லாமல் இருப்பதில்  என்ன வலி இருந்துவிடப் போகிறது இருந்தும் இல்லாமலானதைக் காட்டிலும் கார்த்திக் பிரகாசம்...

வாழ மறந்த வாழ்வு

குழந்தைகளின் கதைகளில் கெட்டவர்கள் இல்லை பூ பூச்சி ட்ராகன் டைனோசர் எல்லாம் மனிதர்கள் திருடியவன் தீங்கிழைத்தவன் என எல்லோருக்கும் மன்னிப்பு உண்டு கண்டிப்பாக சட்டம் இல்லாத சாட்சியம் அவசியமில்லாத முகம் கோணியதும் வெள்ளந்தி சிரிப்புடன் பழம் விடும் சிறு குழந்தையே வாழ மறந்த வாழ்வுக்கான பெரும் ஆறுதல் கார்த்திக் பிரகாசம்...

நான் மறந்துவிடுவேன்

யாரும்‌ ரசிப்பதற்குள் நான் ரசித்திட வேண்டும் யாரும் கருத்திடுவதற்குள் நான் கருத்திட வேண்டும் யாரும் எழுதிடுவதற்குள் நான் பதிவிட வேண்டும் யாரும் சொல்வதற்குள் நான் சொல்லிவிட வேண்டும் இப்படி முனைப்புடன் செயல்படுபவன் ஆனாலென்ன வந்த வேகத்தில் தொலைத்து அடைந்த சுகத்தில் அலுத்து யாரும் மறப்பதற்குள் நான் மறந்துவிடுவேன் என்னையும் சேர்த்து கார்த்திக் பிரகாசம்...

போலவே

இந்தப் பாடலும் அந்தப் பாடலை போலவே உள்ளது உனக்கென்ன பிரச்சனை..? இந்தப் பாடலும் அவளை அந்தக் காதலை நினைவூட்டுகிறதே கார்த்திக் பிரகாசம்...

மற்றுமொரு முறை

அவள் பிறந்து  முப்பது வருடங்களாகிவிட்டன இன்றைய திகதிக்கு இறந்தபின் வரும்  மூன்றாவது பிறந்த நாள்  வாழ்த்து மடலாகத் தொடங்கி   நினைவஞ்சலியாக  மாறி அழுகிறது அவளுக்கான பிறந்தநாள் கவிதை  வாடிய பின்னும் மலரும்  பிரியமானவளின் பிறந்தநாள் மலர்க் கொத்துக்குள் மறைத்து வைத்து அவளின் மரணச் செய்தியை கரங்களில் திணிக்கிறது மற்றுமொரு முறை கார்த்திக் பிரகாசம்...