Skip to main content

வழி

நீ
கடந்து போகச் சொன்ன
பாதையில் செல்கிறேன்
சொன்னபடியே
உன்னை நினைவூட்டும்படியாக
ஒன்றுமில்லை

நானும் கூட மறக்கவே
முயல்கிறேன்

ஆனால் பார்
பிடித்த சட்டையில் நேற்று
தேநீர் கொட்டிவிட்டது
கறையில் திட்டு திட்டாய்
உன் பிரிவின் சாயம்

கடைசி வார்த்தை எழுதிடாமல்
மசி தீர்ந்திட்ட பேனா
விரலிடுக்கில் நின் விரல்
விட்டுச் சென்ற பிசுபிசுப்பு ஈரத்தோடு
சாய்ந்தாடுகிறது

உன் பெயர் கொண்ட நட்புகள்
பாவம்
அவர்களறியாமல்
உன்னைச் சுமந்து வருகிறார்கள்
என்னிடம்

கழுவிடும் போது பாத்திரம் கீறிக்
கசிகிறது இளஞ்சிவப்பில்
ஒரு சிறு துளி
நம்மிருவருக்கும் ஒரே வகை
இரத்தம்

உன்னை நினைவூட்டும் என்பதால்
பாடல்கள் கேட்பதில்லை இப்போதெல்லாம்
இருப்பினும்
தென்றலையும் மழையையும்
என்ன செய்வதென்று தெரியவில்லை

நாம் எடுத்த நிழற்படங்களை
அழித்துவிட்டேன்
தன் வண்ணத்தை ஒட்டிவிட்டுப் பறக்கும்
வண்ணத்துப்பூச்சியைத்
தடுக்க முடியவில்லை

பஞ்சாரத்திற்குள்ளேயே இருந்தாலும்
பாம்பின் கண்களைக் கொண்டு
நீளும் இரவில்
நிம்மதியாய் உறங்கிடுமா
கோழிக் குஞ்சு

சிதறிப் போன மனம்
சிறுசிறு இழப்புக்கெல்லாம்
உந்தன் இழப்பையே
பிரதிபலிக்கிறது
பூதாகரமாக

உறக்கத்தை உனக்கும்
கனவுகளை நமக்கும்
பலி கொடுத்துவிட்டு
நீ சொன்ன பாதையில்
மெள்ள நடக்கிறேன்
உன்னை நினைவூட்டும்படியாக
ஒன்றுமில்லை
உருக்குலைந்து போன
என்னைத் தவிர

ராகவி...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...