Skip to main content

Posts

Showing posts from 2024

பிரபஞ்சத்தின் மூத்த மொழி காதல்

சவுக்குமர நிழல் - ஜெயந்த் காய்கிணி தமிழில்: நஞ்சுண்டன் தொகுப்பு: சிவபிரசாத் மறைந்த கவிஞர், மொழிபெயர்ப்பாளர் நஞ்சுண்டன் அவர்களின் மொழிபெயர்ப்பில் சிவபிரசாத் தொகுத்துள்ள “பால் மீசை” தொகுப்பில் இடம் பெற்றுள்ளது கன்னட கவிஞரும், எழுத்தாளருமான 'ஜெயந்த் காய்கிணி' எழுதிய "சவுக்குமர நிழல்" என்னும் சிறுகதை. ஒரு மாதத்திற்கு முன்பு, இன்ன காரணம் என்றதறியாமல் கைதாகி சிறையிலிருக்கும் தன் கணவனை வேறு சிறைக்கு மாற்றுகிறார்கள் என்ற தகவலறிந்து அதிகாலையிலேயே எழுந்து அவனுக்கு மிகவும் பிடித்த அரிசி பாயசத்தோடு அவனது நினைவுகளையும் வேகாத வெயிலில் சுமந்து கொண்டு கால்கடுக்கக் கிளம்புகிறாள் மனைவி நாகம்மா. மலைக்கு அந்தப்பக்கமுள்ள சாலை வழியாகத்தான் காவல்துறை வாகனம் எப்படியும் சிறைக்குச் சென்றாக வேண்டும். கண்ணுக்கெட்டிய தொலைவின் எல்லையில் கானலில் நெளியும் சாலையில் ஒரு கண்ணைத் தைத்துக் கொண்டே நடக்கிறாள். ஊரார் பலரும் அவ்வழியாகக் கடந்து செல்கின்றனர். கேட்பவர்களிடம் ஏதேனுமொரு பொய்யை அங்கிருத்தலுக்கான காரணமாகக் கூறுகிறாள். நற்மனிதரான வாத்தியார் ஒருவர் வருகிறார். அவரிடம் மட்டும் உண்மையை உடைக்கிறாள். “உன்...

மூத்த அகதி - வாசு முருகவேல்

நான் ஏன் பதட்டமாகிறேன்? நான் ஏன் பலகீனமாக உணர்கிறேன்? நான் ஏன் ஒதுங்கிக் கொள்கிறேன்? இப்படி எழும் அத்தனைக் கேள்விகளுக்கும் ஒரேயொரு பதில்தான் இருக்கிறது. ‘என் பெயர் அகதி’ என்பதுதான் அந்தப் பதில். முன்னுரையில் வாசு முருகவேல் மேற்குறிப்பிட்டுள்ள இவ்வரிகளே நாவலின் அடிநாதம். எந்த இடத்திலும் துவக்கைகளின் சப்தம் இல்லை. எத்தரப்பை முன்வைத்தும் போர்க் குறித்தான நியாய தர்க்கங்களோ, எதிர்ப்புகளோ முன்வைக்கப்படவில்லை. மாறாக இந்நாவல் அறிமுகப்படுத்தும் களம் வேறொன்று. போர் குடித்த மரணங்களைக் காட்டிலும், போர்ச்சூழலினால் சொந்த மண்ணையும், நாட்டையும் இழந்து வெவ்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்த / இடம்பெயர்ந்திட முயற்சிக்கும் அகதியாய் ஆக்கப்பட்டவர்களுக்கு இச்சமூகம் கைமாறாகத் தந்திடும் இரக்கமும், கருணையுமற்ற வாழ்க்கையின் கொடுமையைப் பட்டவர்த்தனமாகப் பதிவு செய்கிறது நாவல். பேசும் மொழி புரிந்திடாத, கலாச்சாரம் அறியாத அந்நிய நாடாய் இருந்தால்கூட பரவாயில்லை என மனதை ஆற்றுப்படுத்த முயலலாம். ஆனால் காலங்காலமாக எம் இரத்தம், எம் சகோதர சகோதரிகள், எம் தொப்புள் கொடி உறவுகள் என மார்புயர்த்தி முழங்குமொரு நாட்டில் தொடுக்கப்படும் அந...

மென்முறை - நாராயணி கண்ணகி

தற்காலிக பணியின் சொற்ப சம்பளத்தில் தான் உண்டு, தன் வேலையுண்டு என முடிந்தமட்டும் மனைவி பிரேமா மற்றும் குழந்தைகளோடு இல்லறத்தைச் சந்தோசமாகப் போக்கிக் கொண்டிருக்கிறான் நடராஜி. வருடத்திற்கொரு முறை அல்லது இரண்டு வருடத்திற்கொரு முறை எனச் சீரற்ற இடைவெளியில் காலங்காலமாக நடுத்தர வர்க்கத்தின் தலை மேல் தொங்கும் "வீட்டு வாடகை" எனும் வாள் மற்றுமொரு முறை கழுத்தைப் பதமாய் வெட்ட, வேறொரு வீட்டிற்குக் குடிபெயர்கிறான். எதிரே அரசியல், ரவுடியிசம், பஞ்சாயத்து போன்றவற்றில் ஈடுபடும் "ஜி.ஏ" என்ற முக்கிய புள்ளியின் வீடு. குடிபெயர்ந்த அடுத்த நாளிலிருந்தே, "ஜி.ஏ" வின் அடாவடித்தனங்களால் அச்சமும், பதற்றமும் அடையும் நடராஜி, வேறு வீட்டிற்கு மாறி உடனடியாக தலைவலியிலிருந்து விடுபட முயல்கிறான். "விருப்பமில்லை. வேற ஆளைப் பார்த்துக் கொள்ளுங்கள்" எனத் துணிந்து சொல்லும் தைரியமின்றி, எதிர்ப்பும் காட்டாமல் , மறுப்பும் சொல்லாமல் தனக்குள்ளேயே அல்லல்வுறுகிறான். ஆனால் வழக்கத்திற்கு மாறாக மனைவி பிரேமாவிற்கு வீடும், சுற்றமும் பிடித்துவிடுகிறது. ஆதலால் "ஜி.ஏ" மீதான நடராஜின் அதிருப்திய...

பித்து - கணேசகுமாரன்

தற்கொலையில் தொடங்கி ஒரு கொலையில் முடிகிறது நாவல். எதிர்பாராதவிதமாய் நிகழ்ந்திட்ட தன் சகோதரனின் தற்கொலையினால் கடும் நோய்மையில் விழும் ராமலிங்கம், தீவிர மன உளைச்சலினால் புரிந்த மற்றொரு காரியத்தால் தீவிர குற்றவுணர்ச்சிக்கு ஆளாகிறான். அன்யனோன்யமான உறவை அணு அணுவாகச் சிதைக்க விரும்பினால், தொடர்ச்சியாக ஒரு குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கி, அதனை நிரந்தர உணர்வாக மாற்றிவிட்டால் போதும். உறக்கத்திலும் விழித்திருக்குமது மனிதனைச் சீரழிக்கும் வேலையை சுயமாகக் கவனித்துக் கொள்ளும். அதுவும் நோய்மையை உண்டு கொழுத்திடும் குற்றவுணர்வு கொஞ்சம் கொஞ்சமாக அரித்து ராமலிங்கத்தின் சுயத்தை முழுவதுமாக சிதைக்கிறது. எத்துக்கால் போகும் போக்கில் நடக்கிறான். ஏதோ ஒரு பாடலின் தொடக்க ஹம்மிங் போல் ஒரு குரல் அவன் காதுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறது. பேசுவதற்குக் கூட ஆளில்லாமல் தனக்கு தானே பேசிக் கொள்கிறான். வழியில் சந்திக்கும் காவி சாமியார்கள், சிவபாணம் தருகிறார்கள். அங்கும் இங்கும் திரிந்து, கடைசியில் தூரத்திலிருந்து கவர்ந்திழுக்கும் மலையை நோக்கிச் சென்று திருவண்ணாமலையை அடைகிறான். ராமலிங்கம் திருவண்ணாமலைக்குச் சென்றதும் கதை வேற...

மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் - ராஜா சந்திரசேகர்

கணப்பொழுதில் இலகுவாக நடந்து முடிந்துவிடும் எத்தனையோ தருணங்களை ராஜா சந்திரசேகரின் கவிதைகள் ஆழமாகப் பேசுகின்றன. // சபிக்கப்பட்டவனின் கவிதையில் தேவனின் சொற்கள் இருந்தன "பிரான்சிஸ் கிருபா"வை நினைவுபடுத்தும் இந்த வரிகளை எளிதில் கடக்க முடியவில்லை. // வேறு வேறு அலைகளால் தன்னைத் திருத்திக் கொள்கிறது கடல் // பாறை நான் உடைபட அன்பின் பூவொன்றை மேல் வை // எல்லோரிடம் தப்பித்து வந்து என்னிடம் அகப்பட்டுக் கொண்டேன் // நம்பிக்கையின் மேல் அரும்பி இருந்த பனித்துளி உலரவே இல்லை // எழுதும் போது இடம் பெற்று திருத்தும் போதும் நீக்கப்பட்ட சொல் நான் // நாம் காதலைப் பற்றி பேசவே இல்லை நாம் பேசிய எல்லாவற்றிலும் அது இருந்தது // என்னைச் சேர்த்து கூட்டினாலும் பூஜ்யமே வருகிறது // என் பசி கூப்பிட்டு அவர் பசிக்கு ஏதாவது வாங்கித் தரச் சொன்னது // பெரு வனப் புல் நான் என்ற பெருமிதம் எனக்குண்டு - கார்த்திக் பிரகாசம்

மீராசாது - கே ஆர் மீரா - மொழிபெயர்ப்பு - மோ.செந்தில் குமார்

மீராசாது - கே ஆர் மீரா மொழிபெயர்ப்பு - மோ.செந்தில் குமார் வன்மம்.. பித்தேறிய காதலின் வன்மம். உதறித் தள்ளிய காதலை, அந்தக் காதலாலேயே வஞ்சித்துப் பலி தீர்க்கும் மிக நேர்த்தியான படைப்பு. நாவல் இப்படித் தொடங்குகிறது, "காதல் பால் போன்றது. நேரம் ஆக ஆகப் புளித்துப் போகும், திரிந்து போகும், விஷமாகிவிடும். மாதவன், எனக்கு அந்த விஷத்தைக் கொடுத்தான். நான் சாகவில்லை, அதற்குப் பதிலாக அவனைக் கொன்றுவிட்டேன்" சொல்லப்போனால், கதையின் முடிவுமே இதுதான். வாசகனுக்குச் சிறப்பான வாசிப்பனுபவத்தைத் தந்திடும் வகையில் எந்தவொரு இடத்திலும் மொழிபெயர்ப்பை வாசிக்கிறோம் என்ற எண்ணமே எழாத அளவிற்கு, செறிவான மொழியில் செம்மையாக மொழியாக்கம் செய்திருக்கிறார் மோ.செந்தில் குமார். உண்மையைத் தெரிந்து கொள்ள, திரும்பிச் செல்லவே முடியாத தூரங்கள் பயணிக்க வேண்டியிருக்கிறது.🖤
  நான்கைந்து பக்கங்களுக்குள் ஓர் வாழ்வியலைக் கடத்திவிடுகின்ற சிறுகதை வடிவத்தின் மீது வாசிக்கத் தொடங்கிய நாள் தொட்டே பெறும் ஆர்வமும், ஈர்ப்பும் எனக்குண்டு. அதிலும் இந்த வருடம் தொடங்கியது முதல் தொடர்ச்சியாக மிக நல்ல நல்ல கதைகளை வாசிக்கக் கடவுகிறேன். கந்தர்வனின் “சனிப்பிணம்” மற்றும் “தினம் ஒரு பாண்டியன் எக்ஸ்பிரஸ்” உதிரிகள் கலை இலக்கிய இதழில் வெளியாகியுள்ள நெய்வேலி பாரதிக்குமார் எழுதிய “குத்துக்கல்லு”, பாலைவன லாந்தரின் “இசை”, செளம்யா எழுதிய “மூளி” நா.கோகிலன் எழுதிய "கால தாமதமாக வந்துகொண்டிருக்கிறது" ஒவ்வொரு கதையும் தன்னளவில் தனித்து ஒளிரும் மாணிக்கங்கள். ஒவ்வொரு கதையை பற்றியும் விரிவாக எழுத வேண்டும்.