வகைமை: நாவல்
எழுதியவர்: பாவெல் சக்தி
வெளியீடு: எதிர் வெளியீடு
பாவெல் சக்தியின் முந்தைய படைப்புகளான ‘நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள்’, “தொல் பசிக் காலத்துக் குற்ற விசாரணை அறைக்குள் மூடி முத்திரையிடப்பட்ட 8 தடயக்குறிப்புகள்’, ‘தீ எரி நகர மந்திரக்கிழவனின் செக்கர் நிறத்தொரு மரணம்” ஆகியவற்றை வாசித்திருக்கிறேன். [புத்தகத்தின் தலைப்புகளே வாசிப்பதற்கான குறைந்தபட்ச ஈர்ப்பை உண்டாக்கிவிடும்]
அவருடைய இரண்டாவது நாவல் 'பகை பாவம் அச்சம் பழியென நமக்கு பெருஞ்சித்திரச் சொற்கள்'
பாவெல் சக்தியின் கதை மாந்தர்கள் பெரும்பாலும் சாமானியர்கள். நீதிமன்ற வளாகத்தில் கால் வைக்கத் தேர்ந்த அவர்களது வாழ்வின் மறுபக்கத்தை வக்கீலுக்கான அடுக்கடுக்கான கேள்விகளின் மூலம் புலனாய்வு செய்வது அவரது தனிச்சிறப்பு. சாமானியர்கள் ஒரு பக்கம் என்றால், குற்றப் பின்னணி கொண்டவர்களைக் காபந்து செய்யச் சட்டத்தை வளைக்கும் வழக்குரைஞர்களும், அவர்களுக்கு உறுதுணையாகப் பணத்தை வாங்கிக் கொண்டு வேலை செய்யும் அதிகாரிகளும் மறுபக்கம்.
பாவெல் சக்தியின் பெரும்பாலான கதைகளில் தொடக்கம் முதலே ஒருவகையான இறுக்கம் விரவியிருக்கும். கதையின் போக்கில் ஆங்காங்கே சில பகடிகள் வெளிப்பட்டாலும் அடுத்த வரியிலேயே அது இறுக்கத்தை மேலும் தீவிரப்படுத்துவதாகவே இருக்கும். இந்த நாவல் அதிலிருந்து சற்று மாறுபட்டிருக்கிறது. கதையின் போக்கானது 'பகை' , 'பாவம்' , 'அச்சம்' , 'பழி' என நான்கு அத்தியாயங்களாக விரிகிறது.
காதல் மனைவி, அன்பான குழந்தை, கனவுகள் குறித்த விசாரணை என ஜாலியாக தொடங்குகிறது நாவல். ஆனால் அது பரபரப்பான திரில்லரை நோக்கிய நகர்விற்கான அடித்தளம் என்பதை அடுத்த சில பக்கங்களிலேயே வாசகனால் விளங்கிக் கொள்ள முடியும். பணத்தால் அதிகாரத்தையும், சட்டத்தையும் தனக்கு ஏற்றார் போல் வளைத்துக் கொள்ளும் குற்றவாளிகளும், அவர்கள் புரியும் குற்றங்களின் செய் நேர்த்தியும், அதற்கு அவர்கள் கொடுக்கும் தத்துவ விளக்கங்களும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. "காதலுக்கும், கடவுளுக்கும் சம்மந்தம் இல்லை", "காதலுக்குச் சாத்தான்தான் கடவுள்", "கடவுளுக்குப் பழியின் சாயல்" போன்ற தத்துவ விசாரணைகள் வாசிப்பின் சுவாரசியத்தைக் கூட்டுகின்றன. முதல் மூன்று [பகை, பாவம், அச்சம்] அத்தியாயங்களைக் கடந்து நான்காவதான "பழி" யில் முற்றிலும் வேறொரு தளத்தை வந்தடைகிறது நாவல்.
Comments
Post a Comment