வகைமை: சிறுகதைகள்
எழுதியவர்: கவிதைக்காரன் இளங்கோ
வெளியீடு: யாவரும் பதிப்பகம்
ஏதேனும் இலக்கிய நிகழ்வில் கவிதைக்காரன் இளங்கோ உரையாற்றுகிறார் என்று தெரிந்தால், மறுயோசனையே இன்றி அந்நிகழ்வுக்குச் செல்ல முடிவு செய்து விடுவேன். கவிதை, நாவல், சிறுகதைகள் குறித்த அறிமுக மற்றும் விமர்சன நிகழ்வுகளின் போதான அவரது உரைகளில், அதன் மையவோட்டத்தின் ஒரு சிக்கலான சாராம்சத்தை தனித்தனி கூறுகளாகப் பிரித்து ஆய்வு செய்யும் பகுப்பாய்வானது, வாசிப்பிலும், இலக்கியத்தை அணுகும் முறைமையில் என்னளவில் பல புதிய திறப்புகளை உண்டாக்கியிருக்கின்றன.
அவரது அறிமுக உரையைக் கேட்டுவிட்டு வாங்கிய புத்தகங்களும் உண்டு. உதாரணத்திற்குச் சுஜாதா செல்வராஜின் "கடலைக் களவாடுபவள்" கவிதைத் தொகுப்பு, 'ஏக்நாத்'தின் "சாத்தா" நாவல் [சட்டென நினைவில் தோன்றியவை].
பெரும்பாலான உரைகளில் ஒருவித PSYCOLOGICAL TOUCH இருப்பதை உணர்ந்திருக்கிறேன். ஒருவேளை "உளவியல்" படித்திருக்கிறாரோ எனப் பலமுறை யோசித்திருக்கிறேன். அவரிடம் நேரடியாகக் கேட்கச் சந்தர்ப்பம் வாய்த்ததில்லை. ஆனால் "பனிக்குல்லா" சிறுகதைத் தொகுப்பை வாசிக்க எடுத்ததுமே அதற்கான விடை கிடைத்தது.
என் ஊகம் தவறவில்லை. கவிதைக்காரன் இளங்கோ உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார்.
"பனிக்குல்லா" தொகுப்பில் வரும் கதாபாத்திரங்களில் ஒன்றிரண்டு தவிர மற்ற அனைவருமே பக்குவப்பட்ட முதிர்ச்சித் தன்மையோடு இருக்கிறார்கள். இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு விடயம் அவர்கள் அனைவருமே பெண்கள். இத்தொகுப்பின் பலமாக அதைத்தான் கருதுகிறேன்.
அப்படியாகப் பக்குவப்பட்ட முதிர்ச்சித் தன்மை வெளிப்படும் கதைகளாக "முள்" , "வளைவு" , "தொட்டிச் செடி" போன்றவை உள்ளன.
"முள்" கதையில், "சக மனிதர்கள் தங்கள் நிஜ இயல்பை வெளிப்படுத்தும் தக்க தருணத்துக்காகக் காத்துக் கொண்டிருப்பவர்களாகவே எப்போதும் படுகிறார்கள்". "வளைவு" கதையில் "புடவையில் போய் அதை டிக்ளேர் பண்ணும்போது என்னை ரொம்ப வலிமையா உணர்ந்தேன். எனக்குன்னு ஒரு தனி ஐடென்ட்டிட்டி உருவான மாதிரி ஃபீல் இருக்கு". "தொட்டிச் செடி" என்ற கதையில், "எல்லாத்தையும் வெளிப்படையா என்கிட்டே பேசியே, என்னைத் தயார் பண்ணிட்டாரோன்னு தோணுது" போன்ற பகுதிகளைச் சொல்லலாம்.
அந்த முதிர்ச்சித் தன்மையே சில பகுதிகளில் வாசகனைக் கதையிலிருந்து அந்நியப்படுத்தி அவ்விடங்களில் கதைசொல்லி நேரடியாக வெளிப்படுவதையும் காண முடிகிறது. உதாரணமாக "தையல்", மூன்றாம் கண் , "வெயிலுக்கு இதமாய் ஒரு கோல்ட் காஃபி" போன்ற கதைகள்.
எனக்கு மிகவும் பிடித்த கதை, "முள்". முற்காலத்தில் மீன் முள்ளினால் நேரவிருந்த காலத்தின் பிழையானது சரியான நேரத்தில் தவிர்க்கப்படுகிறது. ஆனால் அந்த துரோகத்தை நினைவுக் கூறும் இடத்தில் "சாப்பிட்டு முடித்த தட்டில்.. மூன்று மீன் முட்கள் மட்டும் மிஞ்சின. அது என்னை இம்சித்தது. பரவாயில்லை. இத்தனைக் காலம் மீன் சாப்பிடுவதைப் புறந்தள்ளாமல் கவனமாக என் உணவில் உட்கொண்டு வந்திருக்கிறேன்"எனக் கதை சொல்லிச் சொல்கிறான். என்னைப் பொறுத்தவரையில் கதையின் 'கிளாசிக்கல் டச்' இது. இந்த இடத்தில் ஒருவித தனித்துவத்தைக் கதை அடைகிறது என்றும் சொல்வேன். அதன் பின்பாக "வளைவு" மற்றும் "நேற்று என்று ஒன்று இருந்தது" கதைகளைச் சொல்லலாம். இவற்றில் "முள்" , "நேற்று என்று ஒன்று இருந்தது" என்ற இரண்டு கதையின் முடிவுகளிலும் நடந்த சம்பவத்தைக் கதையாக எழுதத் தொடங்குகிறான் கதை சொல்லி.
ஓரிரு நாட்களுக்கு முன்பு "பனிக்குல்லா" சிறுகதை கல்கியில் வெளியாகி பதினோர் ஆண்டுகள் ஆகிவிட்டன என்று முகநூலில் பதிவிட்டிருந்தார் கவிதைக்காரன் இளங்கோ. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் அதற்கு முந்தைய இரவுதான் "பனிக்குல்லா" சிறுகதைத் தொகுப்பை வாசிக்க எடுத்தேன். அவரிடம் பகிர்ந்து கொண்ட WE USED TO BELIEVE IN CHAOS THEORY என்று சொன்னார்.
ஆம் அண்ணா..
LIFE IS AN ETRNAL CYCLE
Comments
Post a Comment