Skip to main content

சபாஷ் திருப்பதி...!!!

பெரியளவில் பக்தி இல்லாவிட்டாலும் முதல்முறை என்பதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கியது நண்பர்களுடனான திருப்பதி பயணம். அதிகாலையில் தி.நகரில் எங்களின் ஆஸ்தான டீக்கடையின் டீயுடன் பயணத்தைத் தொடங்கினோம்.மூன்றரை மணிநேர ரயில் பயணத்திற்கு பிறகு திருப்பதியை அடைந்தோம்.

நண்பர்களில் ஐந்துபேர் மட்டும் படிக்கட்டில் நடந்து செல்லலாம் என்று முடிவு செய்து மீதியானர்வர்களுக்கு பேருந்து வைத்துவிட்டு நாங்கள் நடக்க ஆரம்பித்தோம்.

அலுப்பரியில் இருந்து மேலே செல்ல மொத்தம் 3550 படிக்கட்டுக்கள். ஒன்பது கிலோமீட்டர் தொலைவு. முதல் 500 படிக்கட்டுக்களை அடைந்ததும் அவசரப்பட்டு முடிவு எடுத்துவிட்டோமோ என்று சிறிய கவலை எட்டி பார்த்தது. ஆனால் அடுத்த 500 படிக்கட்டுக்களை கடந்த நேரம் கீழே இறங்கும் போதும் படிக்கட்டுக்களிலேயே இறங்கிவிடலாம் என்று முடிவு செய்துவிட்டோம்.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வயது பாரபட்சம் இல்லாமல் படியேறிக் கொண்டிருந்தார்கள். அனைவர் முகத்திலும் ஏதேதோ முணுகல்களாய் வேண்டுதல்களும் கவலைகளும் ஏதொரு திருப்தியும் ஒருசேர கலந்தோடியிருப்பதை காண முடிந்தது. படியேறயேற வழியெங்கிலும் கடைகள். குடிநீர் குழாய்கள். குறிப்பிட்ட இடைவெளிகளில் கழிப்பறைகள். சுத்தமான கழிப்பறைகள். தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகள். சாப்பாட்டு மற்றும் தின்பண்ட கடைகளில் நியாமான விலை. ஆதலால் செலவு பார்க்காமல் நிறைய தின்பண்டங்களை சாப்பிடவும், நீர் ஆகாரங்களை கொள்ளவும் முடிந்தது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு படியேறும் சிரமமே தெரியாமல் நடந்தோம். ஓய்வு நேரத்தையும் சேர்த்து நான்கு மணிநேரங்கள் ஆகியிருந்தது. உச்சியை அடையும்போது நண்பர்கள் எல்லோர் முகத்திலும் எதையோ சாதித்த ஒரு திருப்தி.

உச்சியை அடைந்ததும் ஒரு டீயைக் குடித்துவிட்டு முன்பதிவு செய்யப்பட்ட தேவஸ்தான அறைக்குச் சென்றோம். இரண்டு கட்டில் மற்றும் கழிப்பறையுடன் கூடிய நன்கு வசதியான அறை. அந்த அறையின் ஒருநாள் கட்டணம் ஐம்பது ரூபாய். மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.

குளித்து முடித்துவிட்டு தரிசனத்திற்கு சென்றோம். இரண்டு மணிநேர காத்திருப்பிருக்கு பிறகு ஏழுமலையனாய் தரிசித்தோம்.

பொதுவாக சாமியை புகைப்படத்தில் பார்ப்பதற்கும் நேரில் கோவிலில் பார்ப்பதற்கும் சிறுசிறு வித்தியாசங்கள் இருக்கும். ஆனால் ஏழுமலையானைப் பொறுத்தவரை எந்த வித்தியாசமும் தெரியவில்லை. புகைப்படத்தில் பார்த்தது போலவே தான் இருந்தது கோவிலிலும். தரிசனத்தை முடித்த பிறகு அடுத்த முக்கிய வேலையான சாப்பிட்டிற்காக அன்னதானக் கூடத்திற்கு சென்றோம். சாதம் சாம்பார் பொரியல் ரசம் மோர் என வீட்டிற்கு வந்த விருந்தினரைக் கவனிப்பது போல் அப்படியொரு கவனிப்பு.

இரவு தங்கிவிட்டு காலை மீண்டும் படியிலேயே கீழே இறங்கிவிட்டோம்.

தூய்மையான சுற்றுப்புறங்கள், இலவச குடிநீர், போதுமான அளவில் கழிப்பறைகள், இலவச அன்னதானம், நியாமான விலையில் தின்பண்டங்கள் போன்ற விஷயங்களுக்காகவே திருப்பதியில் வீற்றிருக்கும் ஏழுமலையானுக்கு ஒரு சபாஷ் போடலாம்..

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...