எப்படி புரண்டு புரண்டு படுத்தும் உறக்கம் விழிகளை உரசவில்லை. அது ஏனொ தெரியவில்லை ரயிலில் முன்பதிவு இருக்கைக் கிடைக்கும் போதெல்லாம் மட்டும் அவ்வளவு எளிதில் உறக்கம் விழிகளோடு வந்து உறவாட மறுக்கிறது. ஆதலால் வெறுமனே உடலைப் படுக்கையில் கிடத்தியிருந்தேன்.
எதிரமர்வில் ஒரு குழந்தைத் திடிரென வீழென்று அழ ஆரம்பித்தது. அதன் தாய் உடனே எழுந்து குழந்தையின் அழுகையை நிறுத்த சகல முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால் குழந்தையிடம் அழுகையை நிறுத்தும் உத்தேசமேதும் தென்படவில்லை.
மற்ற பயணிகள் உறங்கிக் கொண்டிருந்ததால், தனியாளாகக் குழந்தையைச் சமாதானப்படுத்த தன் முழு சக்தியையும் பயன்படுத்திப் போராடிக் கொண்டிருந்தார் அந்தப் பெண்.. சுற்றிலும் படுத்திருந்த ஆண்களிடமிருந்து ஒரு அசைவுமில்லை. மேல் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் கணவர் கூட எழுந்ததாகத் தெரியவில்லை.
ஆனால் இரண்டு தனியறை தாண்டியிருந்த நாற்பது வயதைக் கடந்த ஒரு பெண் பாதி தூக்கத்தில் எழுந்து வந்தார். அந்தப் பெண்ணிடமிருந்து குழந்தையை வாங்கி ஏதேதோ கொஞ்சினார். விளையாட்டு காட்டினார். குழந்தைப் பாஷையில் பேசினார். ஆறுதல் சொன்னார். வேடிக்கைக் காட்டினார். கடைசியில் குழந்தைச் சமாதானமாகி அழுகையை நிறுத்தியது. இரு படுக்கைகளுக்கு இடையே கட்டப்பட்டிருந்த தொட்டிலில் குழந்தையை படுக்க வைத்துவிட்டு சிரித்த முகத்துடன் விடைப் பெற்றார் அந்தப் பக்கத்துத் தனியறை பெண்.
அருகாமையிலேயே ஆண்கள் சலனமேயில்லாமல் உறங்கிக் கொண்டிருக்கையில் சகப் பெண்ணுக்கு/தாய்க்கு ஆதரவுத் தர இரண்டு தனியறை கடந்திருந்தும், தாயுள்ளம் கொண்ட ஒரு பெண்தான் அழைக்காமலேயே வந்து நிற்கிறார். ஒரு தாயின் கஷ்டம் இன்னொரு தாய்க்குத்தான் தெரியும் போலிருக்கிறது. ஏனென்றால் இச்சம்பவம் நடக்கும்போது நேரம் இரவு மூன்று மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.
கருவைச் சுமப்பதும், குழந்தையைப் பெற்று வளர்த்தெடுப்பதும் தவம்.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment