Skip to main content

"குமரி" பயணம்...!!!

பயணம் மனிதர்களால் நிரம்பும் போது தொலைவானது நினைவுகளால் நிரப்பப்படுகிறது..

சென்னையிலிருந்து நண்பர்களுடன் கன்னியாகுமரி பயணம் தொடங்கியதில் இருந்து பரிச்சியமில்லாத பழகாத பல முகங்கள் தங்கள் நினைவுகளைக் கண்ணாடியில் விழுந்த பிம்பத்தைப் போல எளிதாக பதித்துச் சென்றனர்.

தென்காசி பேருந்து நிலையத்தில் குற்றாலம் செல்வதற்கானப் பேருந்தைக் காட்டிய சாயம் போன வெள்ளை வேட்டிக்காரர். பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஐந்தருவிக்கு ஓயாமல் பேசிக் கொண்டே அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர். அங்கிருந்து காசி விசுவநாதர் கோவிலுக்கு கூட்டிச் சென்ற இன்னொரு ஆட்டோ ஓட்டுநர். அதிக நபர்களை அமரவைத்து சென்றதால் ஓட்டுநரிடம் கைப்பேசியையும் ஓட்டுநர் உரிமத்தையும் பிடுங்கி "தினக்கூலிகளிடம் மட்டும் தன் கடமையை செவ்வனே செய்யும்" தோரணைக் கொண்ட காவலர். அந்த பரிதாப நிலைமையிலும் எங்களை நல்லன்புடனும் சிரித்த முகத்துடனும் வழியனுப்பிய அந்த ஓட்டுநரை மறக்கவே முடியாது.

இலவச சிற்றுண்டி தான் என்றாலும்கூட சொந்த பந்ததைக் கவனிப்பது போல் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்ட "அந்த ஹோட்டலின் கடைநிலை ஊழியர்" என்று பட்டியலும் கண்ட மனிதர்களின் எண்ணிக்கையும் நீண்டுக் கொண்டே செல்கிறது.

இவற்றுக்கெல்லாம் உச்சமாக ரயிலில் சந்தித்த அறுபது வயதைக் கடந்த தம்பதி. திருநெல்வேலியில் ஏறினார்கள். அறுபது வயதைக் கடந்திருந்தும் நேற்றுதான் திருமணமானது போல் அவர்களுக்குள் அப்படியொரு அன்னோன்யம். அந்த ஐயா அந்த அம்மாவிற்கு இட்லி சாம்பாரை தட்டில் எடுத்து கொடுக்கிறார். அந்த அம்மா ஐயாவின் கலைந்திருக்கும் முடிகளை கோதிவிடுகிறார். உடனே அவர் தன்னுடைய மெல்லிய உடலை கூச்சத்தால் நெளிக்கிறார்.

அவர்களது பேச்சின் மணம், நிலத்தை முத்தமிட்ட முதல் மழைத்துளியின் பரவசத்தை சற்றே பின்னுக்கு தள்ளியதாய்த் தோன்றியது. ஒவ்வொரு வார்த்தையிலும் அக்கறை. எங்கள் முகங்களில் தங்கள் பேரனையும், பேச்சினினில் அண்ணன் மகனையும், பாவனையில் பக்கத்துக்கு வீட்டு பண்ணையார் மகனையும் அடையாளப்படுத்தி தொடர்புபடுத்தினர்.

ஆங்காங்கே வந்த ஆங்கிலத்தையும் அரசியலையும் அவர்களால் தவிர்க்க முடியவில்லை. நிகழும் அரசியல் மாற்றங்களைக் கண்டு மனம் குழம்புவதனால், படித்து மட்டும் நம்மால் என்ன செய்துவிட முடியும் என்ற ஏமாற்ற இயலாமை எண்ணத்தால் இத்தனை நாள் பின்பற்றி வந்த ஜூனியர் விகடனையும், நக்கீரனையும் இனி படிக்க வேண்டாம் என்று முடிவு செய்திருப்பதாக கூறியது அவர்கள் அரசியல் அறிவின் ஆழத்தை அணிந்துரைத்தது. பொதுவாக எட்டரை மணிக்கெல்லாம் தூங்கிவிடும் பழக்கம் கொண்ட அவர்கள் நாங்கள் சாப்பிட வேண்டும் என்பதற்காக பத்து மணிவரை உறங்காமல் இடம் கொடுத்து பேசிக் கொண்டிருந்தனர்.

அதிகாலை ஐந்து மணிக்கு தாம்பரத்தில் இறங்கும் போது எங்களை எழுப்பிவிட்டு, "தென்காசி பக்கம் வந்தா அப்டியே நம்ம வீட்டுக்கு வாங்க" என்று சொல்லிவிட்டு சிரித்த முகத்துடன் இறங்கினர். நான் அவர்களின் பெயரைக் கேட்கவில்லை. அவர்களும் என் பெயரைக் கடைசிவரை கேட்கவில்லை. ஆனால் அவர்களின் வார்த்தைகளில் அன்பு இறையோடி இருந்தது. கண்களில் கலங்கம் இல்லாத பாசத்தைக் காண முடிந்தது. ஆதலால் அவர்களது பெயரையும் விலாசத்தையும் கேட்டு அதைக் கெடுத்துவிட விரும்பவில்லை.

பெயர் தெரியாத அன்பு பாசத்தையெல்லாம் காண்பது அரிதினும் அரிது.

பயணம் என்பது தொலைவைக் கடப்பது அல்ல. தொலைவை நிரைப்பது. எதைக் கொண்டு நிரப்புகிறோம் என்பது நம் கையில்தான் உள்ளது. பயணம் மனிதர்களால் நிரம்பும் போது தொலைவானது நினைவுகளால் நிரப்பப்படுகிறது..

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...