இந்த மண்ணில் ஒவ்வொரு உயிரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஆறாம் புலன். ஐம்புலன்கள் உடம்பில் இருக்கு ஆறாவது புலன் உணர்வில் இருக்கு.. பெற்றோர்கள் இல்லாமல் வாழ்வது கூட சாத்தியம்.. ஆனால் நட்பு இல்லாமல் வாழ்க்கையை வழி நடத்துவது என்பது அசாத்தியம். வாழ்க்கை என்னும் காலச் சக்கரத்தின் அச்சாணி "நட்பு"..
அதிலும் ஆண் பெண் நட்பு என்றால் ஒரு தனி புனிதம். அதில் காதலை தாண்டிய கர்வம் கலந்திருக்கும். அதில் காமத்தை மறந்த ஒரு கண்ணியம் நிறைந்திருக்கும். ஒவ்வொரு தோழனுக்கும் அவனுடைய தோழி ஈன்றெடுக்காத தாயாகிறாள். ஒவ்வொரு தோழிக்கும் அவளுடைய தோழன் பெற்றெடுக்காத தந்தையாகிறான்..
அப்படிப்பட்ட ஒரு தோழன் தோழியின் கதை...
ஏழாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து கொண்டிருந்த அவன் எட்டாம் வகுப்பிற்காக அருகாமையில் இருந்த அரசு உதவி பெரும் பள்ளியில் தஞ்சம் புகுந்தான். பள்ளி கரும்பலகையில் இருந்து பக்கத்தில் அமர்ந்திருந்த பையன் வரை அனைத்தும் விநோதமாகவும் விபரீதமாகவும் இருந்தது அவனுக்கு.. அதுவும் வகுப்பு தலைவர் ஒரு பெண்.. கையில் பிரம்புடன் பார்க்க பயங்கரமாக இருந்தாள்..
பிரம்பால் அவனது முகத்தை நோக்கி, "என்ன.. புதுசா..?" என்று கேட்டாள்.. அவனும் "ஆம்" என்று குறிக்கும் விதமாக தலையை ஆட்டினான்.. அவனின் மனதிற்குள், அவளின் இந்த செயலால் இவளுக்கு ரொம்ப திமிரு என்ற எண்ணமே அதிகம் காணப்பட்டது அதற்கு காரணமும் இருந்தது. ஏனென்றால் அவள் தான் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறுபவள். ஆசிரியர்களின் செல்ல பிள்ளை. முதல் மதிப்பெண் எடுக்கும் பெண்களுக்கு எப்பவுமே கொஞ்சம் திமிரு அதிகம் என்ற அரிய தகவல், அவன் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பையன் வாயிலாக முன் மொழியப்பட்டது.. அதனால் அவளை பார்த்த முதல் தருணத்திலேயே அவனுக்கு அவளின் மீது நல்ல அபிப்ராயம் இல்லை.. ஆனால் அப்பொழுது அவர்களுக்கு தெரியாது அவர்கள் இருவரும் தோழன் தோழியாக, வாழ்க்கை முழுவதும் ஒன்றாக பயணிக்க விதியின் வசத்தால் வந்தவர்கள் என்று...!!!
நாட்கள் அசுர வேகத்தில் நகர்ந்தன. கொஞ்சம் கொஞ்சமாக அவனும் அவளும் பேச ஆரம்பித்தனர்.. நட்பென்னும் மொட்டு எட்டி பார்க்க ஆசைப்பட்டது அவர்களுக்குள்.
திடீரென்று ஒரு நாள், ஆங்கில ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த வேளையில், வெளியில் இருந்த வந்த மூன்றாம் நபர் ஒருவர், ஆசிரியரை தனியாக கூப்பிட்டு படபடப்பாக ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.. அந்த நபர் சொல்லி முடித்தவுடன் ஆசிரியர் வகுப்பறைக்குள்ளே வந்து அவளை அழைத்தார்.. அவளிடம் உனக்கு இவரை தெரியுமா என்று கேட்டார். அவளும் தெரியும் என்று சொன்னாள். உடனே அந்த நபர் அவளை அவசரமாக அழைத்துக் கொண்டு விரைந்து விட்டார்..
மதிய உணவு வேளையில் விசாரித்த போது அவனுக்கு தெரிய வந்தது ஒரு அதிர்ச்சியான தகவல்.. அது அவளின் தந்தை இறந்துவிட்டார் என்பது.. கேட்ட தருணத்தில் இருந்து அவனுக்குள் அவளை பற்றிய பதபதைப்பு தொற்றிக் கொண்டது.. மதிய பள்ளி நேரம் முழுவதும் அவளது நினைவாகவே இருந்தது. அன்று பள்ளி முடிந்தவுடன் அவசர அவசரமாக அவளது வீட்டை கண்டுபிடித்து தனியாக சென்றுவிட்டான்.. எதற்காக செல்கிறான் என்று தெரியவில்லை.. அங்கு சென்று என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை இருந்தாலும் அவளை பார்க்க வேண்டும் என்பதற்காக சென்றுவிட்டான்.. அவன் அவள் வீட்டை அடையும் தருணத்தில் அவள் தலை துவட்டிக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்தாள்.. சில நொடிகள் மட்டுமே அவளை பார்த்திருப்பான்.. அவள் கண்களை பார்த்த உடனே அங்கே இருந்து கிளம்பி விட்டான்..
சில நாட்கள் கழித்து அவள் பள்ளிக்கு வந்தாள்.. மெல்ல மெல்ல சகஜமானாள்.. இருவரிடையே நட்பு அதிகரித்தது; தவிர்க்க முடியாதானாது. மெல்ல அரும்பிய நட்பு அதன் பிறகு பூக்களாய் பூத்தது; சக்கரையாய் இனித்தது.. நொடிகளும், நிமிடங்களும் நட்பால் நினைந்தது. வாரங்களும், வருடங்களும் நட்பால் வாழ்ந்தது.
சில வருடங்கள் கழித்து அவள் வீடு மாற்றி செல்கிறாள் என்பதற்காக உதவி செய்ய அவன் அவளது வீட்டிற்கு சென்றிருந்தான். அவன் உள் அறையிலுள்ள பொருட்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தான். அவள் ஹாலில் இருந்தாள்.
எதிர்பாராதவிதமாக அவன் கண்களில் அவளுடைய டைரி கிடைத்தது. மிகுந்த ஆவலுடன் எடுத்து அதன் பக்கங்களில் பறந்தான். சில பக்கங்களுக்கு மட்டுமே அவளது கையெழுத்தை தாங்கும் பாக்கியம் கிடைத்திருந்தது.. அதனால் அவன் நேராக அவனது பிறந்த நாள் பக்கத்திற்கு சென்றான்.
அவள் எழுதி இருந்தாள்,"அப்பா. நீங்க இன்னும் என்கூட தான் இருக்கீங்க என் நண்பன் மூலமாக" "பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா, அனைத்துக்கும் நன்றி". இந்த வரிகளை படித்து முடித்த தருணத்தில் அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து அவன் இதயத்தை நனைத்துக் கொண்டிருந்தன.
ஹாலில் இருந்த அவளை அழைத்து, அவள் நெற்றியில் ஒரு முத்தமிட்டான். மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமல்ல, உயிர் தோழியைப் பெற்ற தோழனுக்கும் தெரியும் "முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று"...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment