இன்று படுக்கையிலிருந்து எழவே மணி பத்தாகிவிட்டது. ஒற்றை தலைவலி வேறு. ஒரு டீக்குடித்தால் தேவலாம் போலிருந்தது. ஆனால் மணியாகிவிட்டது, அலுவலகத்திற்குக் கிளம்பலாமா இல்லை டீக்கடைக்குப் போலாமா.! என்ற சில நொடி யோசனையின் முடிவில் 'டீக் குடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பதே சாலச் சிறந்தது' என்று எப்போதுமே எடுக்கும் நிரந்தர முடிவை முன்னெடுத்து சட்டையை மாட்டிக் கொண்டு கீழே இறங்கித் தெருவில் நடந்தேன். அடுக்குமாடி கட்டத்திலிருந்து இருவர் வெளியே வந்தனர். அது ஆண்கள் தங்கும் மேன்சன். ஆதலால் அவர்கள் தந்தையும் மகனும் என்பதை எளிதாய் யூகித்தறிய முடிந்தது. அகண்ட தெருவின் இடது ஓரத்தில் அவர்களிருவரும் பேசிக் கொண்டே நடக்க, அவர்களைக் கவனித்தவாறே வலப்பக்கத்தின் ஓரத்தில் நான் நடந்தேன். பதினைந்து அடிகள் நடந்திருப்போம். திடுமென மகனை நிற்கச் சொல்லிவிட்டு பின்னால் திரும்பி மேன்சனை நோக்கிச் சென்றார் தந்தை. மகன் நின்றார். நானும் தான். மேன்சனின் வாசலில் அமர்ந்திருந்த வயதான செக்யூரீட்டியின் கைகளில், மேல் பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு நூறு ரூபாய்த் தாளை எடுத்து தள்ளினார். அந்தச் செக்யூரீட்டி வேண்டாமென்று...