கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளையால் வழங்கப்படும் 'கவிஞர் ஆத்மாநாம் விருது' இவ்வருடம், கவிஞர் போகன் சங்கர், ஆர்தர் ரைம்போ எழுதிய "நரகத்தில் ஒரு பருவக்காலம்" புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பிற்காக மொழிபெயர்ப்பாளர் கார்த்திகைப் பாண்டியன், "எண்:7 போல் வளைபவர்கள் - தற்கால ஆங்கில கவிதைகள்" என்ற கவிதைத் தொகுப்பிற்காக மொழிபெயர்ப்பாளர் கவிஞர் அனுராதா ஆனந்த் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
இவ்விழாவிற்கு எழுத்தாளர் பெருமாள் முருகன் தலைமை தாங்க, பத்திரிக்கையாளர் எழுத்தாளர் கவிதா முரளிதரன், எழுத்தாளர் அழகிய பெரியவன் மற்றும் மொழிபெயர்ப்பாளர் வெ.ஸ்ரீராம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேலும் மராத்திய கவிஞர் பேராசிரியர் சந்திரகாந்த் பாட்டீல் கவிஞர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
கவிஞர் ஆத்மாநாமின் "அன்பு" கவிதையோடு தனது உரையைத் தொடங்கிய எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள், குறிப்பிட்ட ஒரு படைப்பிற்கு விருது வழங்குதலின் போது ஏற்படும் விமர்சனங்கள் பற்றியும், தேர்வுக் குழுவினரின்பால் உண்டாகும் சச்சரவுகள் பற்றியும் அதேசமயம் தேர்வுக் குழுவினரின் மேல் சுமத்தப்படும் நிர்பந்தங்கள் பற்றியும் எடுத்துரைத்தார். தன்னைத் தவிர்த்து மற்றமைகளையும் நேசித்து ஏற்க வேண்டிய மனோபாவத்தின் வறட்சியே ஒரு குறிப்பிட்ட படைப்பிற்கு விருது வழங்கப்படுகையில் ஏற்படும் சச்சரவுகளுக்கான காரணம் என்பதையும் சுட்டிக் காட்டினார். மேலும் நெடுங்காலமாக சாதிய சமூகத்தில் வாழும் நமக்குள் மரபுரிமையாக விதைக்கப்பட்டிருக்கும், 'மற்றமையை தனக்குச் சமமாக ஏற்காத மனோபாவத்தின்' நீட்சியோ இது என்ற ஆதங்கத்தையும் அவர் பதிய வைத்தார். தனிநபர் விருப்பு வெறுப்புகளைப் புறந்தள்ளிவிட்டு ஒரு படைப்பை, அப்படைப்பு முன்வைக்கும் சூழ்நிலையில் நின்று, அதன் பார்வையிலிருந்து கடத்த முயலும் பேசுபொருளை ஆராய வேண்டியதன் அவசியத்தை முன் வைத்தார். மேலும் அவர் பேசுகையில், 'இலக்கியத்தின் எந்த வடிவத்தை விடவும் கவிதைப் பற்றிய நம்பிக்கை எனக்கு மிகுதி' எனவும் நவின கவிதைகள் புரியவில்லை என்ற குரல் இன்றைய நாட்களில் அதிகம் கேட்பதாகவும் கூறினார். மேலும் நவின கவிதை புரியாமைக்கான காரணங்களையும், கவிஞன் அவற்றை ஆராய்ந்து வாசகனுக்கு எளிமைப்படுத்தி தர வேண்டியதன் அவசியத்தையும் அதனால் கவிதைக்கு உண்டாகும் பரந்துபட்ட பொருள் வெளிச்சத்தைப் பற்றியும் அவர் விவரித்தது கவிஞர்களுக்கான பயிற்சி பட்டறையை ஒத்து இருந்தது.
மற்றவர்களை எளிதில் தன்வசம் ஈர்க்கும் புன்னகையுடன் எழுத்தாளர் அழகிய பெரியவன் பேசுகையில், தற்காலத்திற்கான கவிஞர்களின் வரிசையில் அதிகம் தொந்தரவு செய்திடும் வரிகளை எழுதிய சமகால கவிஞராக, கவிஞர் போகன் சங்கர் அவர்களைக் குறிப்பிட்டார். வேறொரு தளத்திற்கு வந்துவிட்ட தமிழ்க்கவிதையின் மொழி,சொல்முறை, நோக்கு, பாடுபொருள் என்று சில தன்மைகள் மட்டுமே சற்று மாறுபட்டிருக்கின்றன அதன் உட்பொருள் பெரிய அளவில் மாறுபட்டிருக்கவில்லை என்பதை சில உதாரணங்களைக் கொண்டு சுட்டினார். கவிதைக்கே உண்டான சில பண்புகளையும், குறுகிய வட்டத்திற்குள் சுனங்கிவிடும் பல கவிதை நூல்களைப் பற்றியும் விவரித்த அவர், கவிதையின் பண்புகளோடு தன் தனித்த அடையாளத்தை மய்யப்படுத்திக் கொள்ளும் கவிதை/கவிஞர்களே தனக்கான இடத்தை உருவாக்கிக் கொள்கின்றன என்றார். போகன் சங்கரின் தற்காலத்தைத் தாங்கி நிற்கும், சமகால அரசியல் நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் கவிதைகளை தனக்கேயுரிய புன்னகைத் ததும்பும் முகபாவங்களுடன் அவர் வாசித்தது அக்கவிதை வரிகளின்பால் கூடுதல் ரசனையை ஏற்படுத்தியது. இறுதியாக போகன் சங்கரின் அருமையான கவிதையோடு தனது உரையை முடித்தார் "கவிஞன் 'மழை' என்று சொல்லும் போது அது உரத்துப் பெய்கிறது.! கவிஞன் நீதி என்றும் சொல்லக்கடவது".
விழாவில் கவிதை என்றால் என்ன? அதை வரையறுக்க இயலாது அல்லது மிகவும் கடினம் என்று பேசப்பட்டது. அப்போது கவிதையைப் பற்றி அறிஞர் அண்ணா கூறியது என் நினைவடுக்குகளில் இருந்து உயிர்ப் பெற்று எழுந்தது "அறிந்ததனை அறிந்தோர்கள் சபையில் அறிவிக்கும் போதினிலே அறிந்ததுதான் என்றாலும் எத்துனை அழகம்மா என்று அறிந்தோரையே மகிழ வைக்கும் அருங்கலையே கவிதை!".
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment