அன்றுதான் முதல்முறை இறந்தேன்...!
மீசை முளைப்பதற்கான அறிகுறிகள்
தென்பட தொடங்கிய ஓர் துர்நாளில்
பேச்சு வாக்கில்
"போய்த் தொல" என்று அம்மாவைச்
சொல்லிவிட்டேன்..!
எப்போதும் "வாங்க போங்க" வென்று பேசும் மகன்
திடுமென மரியாதையின்றி பேசிவிட்டானென்று
மனசுடைந்து போன அம்மா
'பொல பொல'வென அழ ஆரம்பித்துவிட்டது.!
பெத்தவள் கண்முன்னே
கண்ணீர் சிந்துவதைக் கண்டதும்
குற்றவுணர்ச்சி நெஞ்சைக் கொன்றுக்
குதறிவிட்டது...!
அன்றுதான் முதல்முறை இறந்தேன்...!
எப்போதும்
சிடுமூஞ்சு கோபத்துடன்
திட்டித் திட்டியே
பார்த்துப் பழக்கப்பட்டிருந்த அப்பா
நான் மாவட்ட அளவில் பரிசுப் பெற்றதைப்
பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சொல்லி
பெருமையில் கண் கலங்கிவிட்டாரென்று
அடுத்தநாள் அம்மா சொல்கையில்
இரண்டாம்முறை இறந்தேன்...!
ஆறாம் வகுப்புவரை அரைக்கால் டவுசர் மாட்டிக்கொண்டு நிழல்போல
அருகிலேயே இருந்த நண்பன்
பெண் விவகாரத்தில் சிக்கி
தற்கொலை செய்துக் கொண்டானென்று
கேள்விப்பட்ட போது
மூன்றாம்முறை இறந்தேன்...!
ஒன்றாய் உயிராய் உறவாய் உணர்வாய் இருந்த
தோழியவளின் திருமணத்தால்
வாழ்வில் உண்டான வெற்றிடம்
என்னை அனாதையாக்கிய போது
நான்காம்முறை இறந்தேன்...!
காதலைக் காட்டியவள்
காத்திருக்கக் கூடிய நிலையில்லாமல்
விலகிச் சென்ற போது
ஐந்தாவது முறையாக இறந்தேன்...!
இதுபோல்
பலமுறை
எதிர்பாராமல் இறந்திருக்கிறேன்...!
சொல்லப் போனால்
இறந்து இறந்தே தான்
வாழ்ந்திருக்கேன்...!
தற்காலிக இறப்புகளிலிருந்து
மீட்டெடுத்து வாழ்வை
உயிர்ப்பித்து
நிரந்தர இறப்பைக் கண்ணில் காட்டாமல்
தன் சட்டைப் பையில்
ஒளித்து வைத்து கண்ணாமூச்சியாடுகிறது
காலம்...!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment