மதம்மாறி மணம் கொண்டவர்களை
கண்டதுண்டு..!
மணமான பின் மதத்தை மாற்றிக்
கொண்டவர்களையும் கண்டதுண்டு..!
சாதிமாறி மணம் கொண்டவர்களை
கண்டதுண்டா..?
மணமான பின் சாதியை மாற்றிக்
கொண்டவர்களை கண்டதுண்டா..?
சாதி மாறவும் முடியாது
சாதியை மாற்றவும் முடியாது
சாதியை மறுக்கலாம்
ஒருவேளை சாதியை மறுதலித்தால்
மறுத்தலித்து - மாற்றுச் சாதியைச் சேர்ந்தவரை காதலித்தால்
காதலித்து - காதலித்தவரை கரம் பிடித்தால்
மகனாவது - மகளாவது - மயிராவது
நடுரோட்டில் கண்டதுண்டமாக வெட்டி வீசுவார்கள்
உடலில் ஓடவேண்டிய குருதி
நிலத்தில் ஓடும்
நெஞ்சுக்குள் துடிக்க வேண்டிய இதயம்
ரோட்டின்மேல் துடிதுடிக்கும்
சாதியறியாத ஈக்கள் குருதியில் மொய்க்கும்
பெற்றவர்களே உயிரைத் திரும்பப் பெற்றுக் கொ(ல்)ள்வார்கள்.
சுயசாதிக் கௌரவத்திற்கு முன்
பிள்ளை பாசமொன்றும் பெரிதில்லை.
மாராட்டி சீராட்டி வளர்த்த பிள்ளை
மடிந்தாலும் பெருத்த இழப்பில்லை.
சாதிப் பெருமை காத்திடாத பிள்ளை
இருந்தாலென்ன செத்தாலென்ன
சாதிகள் இல்லையடி பாப்பா
இல்லை
தாழ்ந்ததுகள் உண்டு ஆனால்
நம்மைவிட உயர்ந்த
சாதியொன்றும் இல்லையடி பாப்பா
என்பதே அவர்களது கீதம்.
தானொருவனுக்கு அடிமையாக இருந்தாலும்
தனக்கொரு அடிமையை இருத்தி
சுயதிருப்தி காண்பதே
அவர்களுக்கு கௌரவம்.
குருதியில் குருட்டுத்தனமாக ஓடும்
சாதி இழிவு கௌரவத்தில்
கருவறுக்கப்பட்ட காதல்களின்
அழுதுடைந்த கண்ணீர்த் துளிகள்
சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்
சாதியே - நீ செத்துப் போ...!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment